யோகா பாட்டி!

யோகா கலையை மிகத் தீவிரமாகப் பயின்று, பயிற்றுவிக்கும் அரும்பணிக்காக நானம்மாள், பத்மஸ்ரீ விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
யோகா பாட்டி!

யோகா கலையை மிகத் தீவிரமாகப் பயின்று, பயிற்றுவிக்கும் அரும்பணிக்காக நானம்மாள், பத்மஸ்ரீ விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 எட்டு வயதாகும்போது தனது தந்தையிடமிருந்து யோகா கலையைக் கற்றுக்கொண்ட இவர், அன்றிலிருந்து இன்று வரை நாள் தவறாமல் அக்கலையின் உயர்வுக்காக அருந்தொண்டாற்றி வருகிறார். இவரது வயது 98. கடந்த 90 ஆண்டுகளாக யோகாவில் பயணித்து வரும் நானம்மாள், இதுவரையில் 10 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு யோகாசனம் கற்றுக் கொடுத்துள்ளார். 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இவரிடம் ஆசனங்கள் கற்று, யோகா ஆசிரியர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர்.
 வேப்பங்குச்சியால் பல் துலக்குவதுடன் தொடங்கும் அவரது தினசரி அலுவல்கள் நன்கு திட்டமிடப்பட்டவை. காலையில் ஏதாவது ஒரு கஞ்சி, அது கம்பு, ராகி, மக்காச்சோளம், பாசிப்பயிறு, வரகு, தினை, கோதுமை, சிவப்பரிசி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை வறுத்து அரைத்த மாவில் காய்ச்சியதாக இருக்கும். அதனுடன் மோரும் உப்பும் சேர்த்துக் குடிக்கிறார்.
 மதியம் காய்கறிகள், கீரை ஆகியவற்றுடன் அளவான மோர் சாதம். இரவில் ஒரு குவளை பால் மற்றும் இரண்டு வாழைப்பழம். அவ்வளவுதான்! காபி, டீ குடிப்பதே இல்லை. அதற்குப்பதில் சுக்குக் காபி, அதில் இனிப்புக்கு கருப்பட்டி.
 நானம்மாள் ஏற்கெனவே முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் இருந்து "பெண் சக்தி' என்ற விருதைப் பெற்றுள்ளார். தற்போது கோவை கணபதி, பாரதிநகரில் தனது மகனுடன் வசித்து வருகிறார். ஓசோன் யோகா பயிற்சி நிறுவனம் எனும் பெயரில் மையம் தொடங்கி யோகா பயிற்றுவித்து வருகிறார். அதில் ஆசிரியர்களாக இருப்பது இவருடைய 6 குழந்தைகள், 12 பேரக் குழந்தைகள், 11 கொள்ளுப் பேரக் குழந்தைகள் ஆகியோர் என்பது சிறப்பம்சம்.
 நூற்றுக்கணக்கான பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார். தேசிய அளவில் நடந்த யோகா போட்டிகளில் 5 தங்கப் பதக்கங்களை வென்றுள்ள இவர், "யோகா பாட்டி' என்றே அழைக்கப்படுகிறார். இவரின் பயிற்சிகள் "தினமணி' வாசகர்கள் அறிந்ததுதான்.
 98 வயதிலும் நல்ல வலுவான உடலையும் மனதையும் கொண்டுள்ள இவர், அதற்குக் காரணம் தனது நீடித்த யோகா பயிற்சிதான் என்கிறார் நானம்மாள்.
 - ஜானகி மணாளன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com