வயது 90... அறுவைச் சிகிச்சைகள் 10,000 

தொண்ணூறு வயது பெண் மருத்துவர். உலகின் திறமையான அறுவைச் சிகிச்சை நிபுணர்களில் ஒருவர்.
வயது 90... அறுவைச் சிகிச்சைகள் 10,000 

தொண்ணூறு வயது பெண் மருத்துவர். உலகின் திறமையான அறுவைச் சிகிச்சை நிபுணர்களில் ஒருவர். தனது அறுபத்தைந்து ஆண்டுகால அனுபவத்தில் இதுவரை பத்தாயிரம் அறுவைச் சிகிச்சைகள் செய்திருக்கிறார். அந்த அறுவைச் சிகிச்சைகளின்போது தப்பித்த தவறி ஒரு உயிரிழப்பு கூட நிகழவில்லை என்பதுதான் ஆச்சரியம். அத்தனை சிரத்தை... அத்தனை துல்லியம்!
 அந்த அதிசயப் பெண் மருத்துவர் ரஷிய நாட்டைச் சேர்ந்தவர். பெயர் ஆலா லெவோஷ்கினா. வயது தொண்ணூறு என்றாலும் துறுதுறுவென்று சுறுசுறுப்பாக இன்றைக்கும் செயல்படுகிறார். ஆலா, ரஷியாவின் ரைசான் பகுதியில் வாழ்கிறார். திருமணம் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டவர். குழந்தைகள் எதையும் தத்து எடுத்துக் கொள்ளவும் இல்லை. ஆனால் நோயாளிகளின் நலனுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணம் செய்துகொண்டவர்.
 புத்தகம் ஒருவரை வழிநடத்துமா என்று ஆலாவிடம் கேட்டால், "ஆம்! வழி நடத்தும்'' என்பார்.
 "எனது இளம் வயதில் மருத்துவர்கள் குறித்த புதினம் ஒன்றை வாசித்தேன். அந்தப் புதினம் தந்த தாக்கத்தினால் மாஸ்கோ மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் படித்தேன். அந்த சமயத்தில் ரஷியப் பெண்கள் மருத்துவத்தை அத்தனை ஆர்வமாகப் படிக்கமாட்டார்கள். தொடக்கத்தில் நானும் மருத்துவத்தில் ஆர்வம் இல்லாமல் தான் இருந்தேன். ஆனால் அந்த புதினத்தை வாசித்த காரணத்தால் டாக்டரானேன்.
 மருத்துவம் செய்வதை ஒரு தொழிலாகக் கருதக் கூடாது. மருத்துவம் ஒரு வாழ்க்கை முறை. மருத்துவராக சேவையைக் கடமையாகச் செய்வதைத் தவிர, ஓர் அறுவைச் சிகிச்சை நிபுணருக்கு வாழ்க்கையில் வேறு என்ன லட்சியம் இருக்கமுடியும்'' என்கிறார் ஆலா.
 மருத்துவப் பணியில் ஆலாவின் சமர்ப்பணம், சேவையின் அடிப்படையில் அவருக்கு சிறந்த மருத்துவருக்கான விருது ரஷியாவில் வழங்கப்பட்டுள்ளது.
 இன்றைக்கும், நாள்தோறும் தனது மருத்துவமனையில் காலை 8 மணிக்கு மருத்துவம் பார்க்க ஆஜராகிவிடுகிறார். நோயாளிகளுக்கு மருத்துவப் பரிசோதனை...நிச்சயிக்கப்பட்டிருக்கும் அறுவைச் சிகிச்சை என்று ஒவ்வொரு நாளும் கடந்து போகின்றன.
 வீட்டிற்குப் போனாலும் ஆலாவிற்கு ஓய்வில்லை. வீட்டில் இவர் வரவைக் காத்து இருக்கும் மாற்றுத்திறனாளியான அவரது உறவினர். ஆலா வளர்க்கும் எட்டு பூனைகள். முகம் சுளிக்காமல் இவர்களைக் கவனித்துக் கொள்வதில் நேரத்தை செலவளிக்கிறார்.
 "ஓய்வு என்பது உறங்கி விழிப்பதில்லை...வேலை எதுவும் செய்யாமல் சும்மா இருப்பதும் இல்லை. ஒரு வேலையை முடித்துவிட்டு இன்னொரு பிடித்த வேலையில் பொழுதைக் கழிப்பதுதான் ஓய்வு. சாப்பாட்டில் இது பிடிக்கும்...இது பிடிக்காது என்றில்லை. எல்லா உணவையும் விரும்பி சாப்பிடுவேன். அகத்திலும் முகத்திலும் எப்போதும் சிரிப்பைச் சேமித்து வைத்திருக்கிறேன். உரிய தருணங்களில் வாய்விட்டு மனசு விட்டு "ஹஹ்ஹஹ்ஹா' என்று சிரிக்கிறேன். அழுகை வந்தாலும் அடக்கமாட்டேன்..."ஓ'வென்று சத்தமாக அழுது தீர்ப்பேன். நான் சுறுசுறுப்பாக இருப்பதற்கும் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கும் இவைகள்தான் காரணிகள்...
 ரகசியங்கள்!'' என்கிறார் ஆலா.
 - கண்ணம்மா பாரதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com