தேள்களுக்கு நடுவே அரசியல் வாழ்க்கை!

அரசியல்வாதி, கைவினைக் கலைஞர், சமூக ஆர்வலர் என பன்முகங்களைக் கொண்ட ஜெயா ஜேட்லி,
தேள்களுக்கு நடுவே அரசியல் வாழ்க்கை!

அரசியல்வாதி, கைவினைக் கலைஞர், சமூக ஆர்வலர் என பன்முகங்களைக் கொண்ட ஜெயா ஜேட்லி, இந்திய அரசியலில் தன்னுடைய அனுபவங்களையும் முன்னாள் அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸூடனான உறவு குறித்தும் "லைஃப் அமங் த ஸ்கார்பியன்ஸ் - மெமயர்ஸ் ஆஃப் எ உமன் இன் இன்டியன் பாலிடிக்ஸ்' என்ற தலைப்பில் புத்தகமொன்றை எழுதியுள்ளார். இந்தப் புத்கத்தை எழுத வேண்டிய அவசியம் குறித்து விளக்குகிறார்:
 "மலேசியாவில் அருங்காட்சியகம் ஒன்றில் ஒரு பெண் அனைவரும் தன்னைப் பார்க்கும் வகையில் 2 ஆயிரம் தேள்களுடன் ஒரு கண்ணாடி அறைக்குள் தங்கியிருந்தாராம். எதற்காக இப்படி செய்கிறாய்? என்று கேட்டபோது, ""தேள்களுடன் தங்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது. தங்கினேன். அந்தத் தேள்களில் ஒன்றை நண்பனாக்கிக் கொண்டு அதற்கு "பாப்' என்று
 பெயரிட்டேன்'' என்றாராம்.
 இந்திய அரசியலிலும், ஊடகங்களிலும் ஒரு காலத்தில் பிரபலமான "தெஹல்கா ஸ்டிங்' என்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதால் என்னுடைய புத்தகத்துக்கு "ஸ்கார்பியன்ஸ்' என்ற பெயரை தேர்ந்தெடுத்தேன். இந்தப் புத்தகத்தில் எனக்கேற்பட்ட அரசியல் அனுபவங்களையும், பல உண்மைகளையும் எழுதியிருப்பது தேள் கொடுக்காக பலரைக் கொட்டலாம். 2019-ஆம் ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்தலிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
 ஏற்கெனவே எனக்கு இந்திய கைவினைப் பொருள்களை மேம்படுத்த வேண்டுமென்பதில் ஆர்வம் இருந்தது. இதுகுறித்து பல புத்தகங்கள் எழுதியுள்ளேன். அரசியல் என்பது நம்பிக்கை துரோகமானது என்று கூறுவதுண்டு. அது உண்மையல்ல என்று எனக்குத் தோன்றியது. அரசியலில் ஒரு பெண்ணாலும் சாதிக்க முடியுமென்று நினைத்தேன்.
 அதனால் கைவினைத் துறையா அரசியலா என்ற குழப்பம் ஏற்பட்டபோது அரசியலில் நுழையத் தீர்மானித்தேன். இதனால் கைவினைப் பொருள்கள் மீதான ஆர்வம் குறைந்துவிட்டதாகக் கருத வேண்டாம். அது என் வாழ்நாள் முழுவதும் தீவிரமாக நிறைந்திருக்கும். இன்றும் அத்துறையில் ஆர்வமுடன் ஈடுபாடு காட்டி வருகிறேன்.
 அரசியலுக்கு வரும் பெண்களுக்கு ஆண்களுக்கு சமமான அங்கீகாரம் கிடைப்பதில்லை. அரசியலுக்கு வந்த பின்னர் பெண்களை பொருத்தவரை தினமும் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம்? எப்படி முன்னேறுவோம்? என்ற தயக்கம் தோன்றும். இரண்டாயிரம் தேள்களுக்கு நடுவே வாழ்ந்த பெண்ணின் நிலைதான் அரசியலுக்கு வரும் பெண்களுக்கும் ஏற்படுவதுண்டு. கிராம பஞ்சாயத்திலிருந்து நாடாளுமன்றம் வரை தேர்ந்தெடுக்கப்படும் பெண்கள், ஆண்களின் நிழலாகத்தான் செயல்படுகிறார்கள். தடைகளை உடைத்து சுதந்திரமாக வெளியே வர முடிவதில்லை.
 அண்மையில் ஹிலாரி கிளிண்டன் எழுதிய "ஹார்டு சாய்ஸஸ்' என்ற புத்தகத்தைப் படித்தேன். என் சொந்த கதையைப் போலவே அவரது புத்தகம் எழுதப்பட்டுள்ளது. என்னைப் போலவே பல பிரச்னைகளை அவரும் சந்தித்திருக்கிறார். அரசியலுக்கு வரும் பெண்கள் முன்னேற விடாமல் எப்படியெல்லாம் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரியும்.
 ஒவ்வொருவருடைய தனிப்பட்ட வாழ்க்கை, அரசியலில் மக்கள் முன் எப்படி வெளிப்படுத்தப்படுகிறது? இதனால் அவர்களுடைய அரசியல் வாழ்க்கை எப்படி பாதிக்கப்படுகிறது? என்பதை இந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளேன். எனக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸþக்கும் இருந்த உறவு பற்றியும் புத்தகத்தில் சொல்லியிருக்கிறேன். இப்போது என்னுடைய குழந்தைகள் இதைப் படித்து உண்மையைப் புரிந்து கொண்டுள்ளனர். அந்த நேரத்தில் நான் பல கடினமான விமர்சனங்களை சந்திக்க வேண்டியதாயிற்று.
 2003-ஆம் ஆண்டிலேயே இந்தப் புத்தகத்தை எழுதத் தொடங்கினேன். சில அத்தியாயங்களை எழுதியவுடன் நீதிமன்ற வழக்குகள், ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடல்நலக் குறைவு என பல்வேறு பிரச்னைகளை சந்தித்ததால் எழுதுவதை நிறுத்திவிட்டேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு பல உண்மைகளை இந்த நேரத்தில் சொல்லலாம் என்று தோன்றியதால், இந்தப் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறேனே தவிர, வேறு எந்த உள்நோக்கமும் இல்லை'' என்றார் ஜெயா ஜேட்லி.
 - பூர்ணிமா
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com