செய்நன்றி முரண்!

ஒருவரிடம் எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராமல் செய்யும் உதவிகள் சில சமயங்கள் போற்றப்படும், சில சமயம் தூற்றப்படும்
செய்நன்றி முரண்!

ஒருவரிடம் எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராமல் செய்யும் உதவிகள் சில சமயங்கள் போற்றப்படும், சில சமயம் தூற்றப்படும். அதுபோன்று நடைபெற்ற இரண்டு சம்பவங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு சம்பவங்களுமே அமெரிக்க நாட்டில் நடைபெற்றுள்ளது.
அமெரிக்கா நாட்டில் வாஷிங்டன் பகுதியைச் சேர்ந்தவர் ஆஸ்நெஸ். அவர் டகோமாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் அடிக்கடி தான் வசிக்கும் இடத்துக்கு அருகில் உள்ள பிரபல நிறுவனத்தின் கஃபேயில் காபி அருந்தச் செல்வது வழக்கம். அவருக்கு வழக்கமாக சாண்டி ஆன்டர்சன் என்ற பெண் ஊழியர் காபியை தயாரித்து விநியோகிப்பார். வாடிக்கையாளர், கடை ஊழியர் என்ற அளவிலேயே இருவரது உறவும் இருந்தது. ஒருவரின் பெயர் கூட மற்றவருக்குத் தெரியாது. 
ஆஸ்நெஸýக்கு 20 ஆண்டுகளாக சிறுநீரகத்தில் கோளாறு காணப்பட்டது. மரபணு பிரச்னையின் காரணமாக சிறுநீரகத்தில் பல எண்ணிக்கையில் கட்டிகள் தோன்றின. விளைவு சிறுநீரக செயலிழப்பு. அவரின் சிறுநீரக செயல்பாடு வெறும் 15 சதவீதமாகக் குறைந்தது. இதற்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை ஒன்றே தீர்வாகக் கூறப்பட்டது. ஆனால் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கான காத்திருப்போர் பட்டியலில் ஆஸ்நெஸ்ஸுக்கு முன்னதாக பல ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தனர். இதனால் அவர் மிகவும் மனமுடைந்து போனார். குறுகிய கால மாற்று ஏற்படாக வலி மிகுந்த ரத்த சுத்திகரிப்பு (டயாலிஸிஸ்) சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் மிகவும் சோர்வாக ஒருநாள் வழக்கம் போல் காபி அருந்தச் சென்றார் ஆஸ்நெஸ். வருத்தம் தோய்ந்த முகத்துடன் காணப்பட்ட அவரிடம் என்னவென்று விசாரித்தார் கஃபே ஊழியரான சாண்டி ஆன்டர்சன். தன்னுடைய சிறுநீரகம் மெல்ல மெல்ல செயலிழந்து வருவதாகவும், தனது கணவர் மற்றும் மகனின் சிறுநீரகங்கள் பொருந்தவில்லை என்றும் தனியார் சிறுநீரகத்தைப் பெற பதிவு செய்தால் உடனே கிடைக்காது போலிருக்கிறது என்றும் தெரிவித்தார் ஆஸ்நெஸ். உடனே சற்றும் தாமதிக்காமல்,"என்னுடைய ரத்தத்தை பரிசோதித்து பார்ப்போம். பொருந்தினால் உங்களுக்கு எனது சிறுநீரகங்களில் ஒன்றைத் தானமாக அளிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை'' என்றார் சாண்டி. சொன்னதோடு மட்டுமில்லாமல், மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனையையும் மேற்கொண்டார்.
ரத்த மாதிரிகள் ஒத்துப் போகவே சாண்டி ஆன்டர்சனின் சிறுநீரகத்தை தானமாக அளித்தார். இருவருக்கும் அறுவைச் சிகிச்சைகள் வெற்றிகரமாக நடைபெற்றன. எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஓர் அந்நியருக்கு தனது உடல் உறுப்பையே தானமாக அளித்த சாண்டியின் தியாகத்தை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர்.
தன்னலமற்ற இதுபோன்ற செய்கை நடைபெற்ற அதே நாட்டின் மற்றொரு பகுதியில் மனதை ரணமாக்கும் நிகழ்வும் நடைபெற்றது.
நியூயார்க்கில் உள்ள கார் டீலர்ஷிப் நிறுவனத்தில் பணியாற்றியவர் டெபி ஸ்டீவன்ஸ். இவரது முதலாளி ஜாக்கி ப்ரூசியா என்ற பெண். டெபி ஸ்டீவன்ஸ் அந்நிறுவனத்தின் ப்ளோரிடா கிளையில் பணியாற்றினார். ஒருமுறை தனது தலைமை அலுவலகத்துக்கு வந்திருந்தபோது முதலாளியைச் சந்தித்தார். அப்போது அவர் தனது சிறுநீரகம் பழுதடைந்துள்ளதாகவும், மாற்று அறுவைச் சிகிச்சைக்காக கொடையாளரை எதிர்பார்த்து இருப்பதாகவும் 
கவலையுடன் தெரிவித்துள்ளார்.
இளகிய மனதுடையவரான டெபி ஸ்டீவன்ஸ் தனது சிறுநீரகத்தைத் தானமளிப்பதாக தெரிவித்தார். இந்த உரையாடலுக்குப் பின்பு மீண்டும் தனது கிளைக்கே பணிக்குச் சென்றுவிட்டார். ஒரு சில வாரங்களுக்குப் பின்பு டெபி ஸ்டீவன்ஸýக்கு முதலாளியிடம் இருந்து அழைப்பு வந்தது. அப்போது பேசிய அவர், ""நீங்கள் சிறுநீரகம் தானமளிப்பதாக தெரிவித்தது நிஜமாகவே தானா? என்னுடைய கொடையாளர் சிறுநீரகத்தை அளிக்க மறுத்துவிட்டார். காத்திருப்பு பட்டியலிலும் பின்னணியிலேயே உள்ளேன்'' என்று தெரிவித்துள்ளார்.
உடனே சம்மதம் தெரிவித்த டெபிக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவருடைய சிறுநீரகத்தை பொருத்தலாம் என்றாலும் அது மிகச் சரியான பொருத்தமாக இருக்கவில்லை. எனவே, சிறுநீரகத்தை தானம் பெற மறுத்துவிட்டனர். தனது முதலாளிக்கு உதவ முடியாமல் போய்விட்டதே, அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தார் டெபி. தன்னுடைய சிறுநீரகத்தை வேறு ஒருவருக்கு தானமாக அளிப்பதன் மூலம், தனது முதலாளி காத்திருப்பு பட்டியலில் முன்னால் வரக்கூடுமே என்று நினைத்த டெபி, வேறு ஒருவருக்கு தனது சிறுநீரகங்களில் ஒன்றைத் தானமளித்தார்.
இதன் காரணமாக பட்டியலில் முன்னால் வந்த முதலாளிக்கு வேறு ஒருவரின் சிறுநீரகம் கிடைத்தது. இந்நிலையில் சிறுநீரகத்தை தானமளித்த அறுவைச் சிகிச்சைக்குப் பின்பு ஓய்வில் இருந்த டெபிவுக்கு அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. அலுவலகத்துக்குச் சென்றால் ஏன் இதுவரை பணியில் சேரவில்லை என்று கேள்வி கேட்கப்பட்டது. உங்கள் விருப்பத்துக்கு வந்து செல்வதற்கு இது இடம் அல்ல என்றும் எச்சரிக்கும் தொனியில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் உடனே பணிக்குச் சேர்ந்தார். ஆனால் அந்த முதலாளி ஓய்வில் தான் இருந்தார்.
வேலைக்குச் சேர்ந்த பின்பும் அவர் மீது பழி சுமத்தப்பட்டது, சிறிய சிறிய தவறுகள் பூதாகரமாக்கப்பட்டன, ஒழுங்கு நடவடிக்கைகள் என அவரை தீவிர மன உளைச்சலுக்கு ஆளாக்கியது நிர்வாகம். இறுதியாக மனநல மருத்துவரையும், வழக்குரைஞரையும் நாடினார் டெபி. டெபியின் வழக்கறிஞர் நிர்வாகத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். அவ்வளவுதான் பணியில் இருந்த அதிரடியாக நீக்கப்பட்டார் டெபி. தற்போது நீதி கேட்டு நீதிமன்றத்துக்கு அலைந்து கொண்டிருக்கிறார். ""நான் அளித்த பரிசை, தரையில் போட்டு காலால் மிதித்துவிட்டார் என் முதலாளி'' என்று கண்கலங்கி சொல்கிறார் டெபி.
-ஜெனி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com