தாய்க்கு மகள் செய்து வைத்த திருமணம்!

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரைச் சேர்ந்தவர் கீதா அகர்வால். அவருக்கு வயது 53. கீதாவின் கணவர் முகேஷ் குப்தா 2016-ஆம் ஆண்டு மே மாதம் மாரடைப்பால் காலமானார். கீதாவுக்கு இரண்டு மகள்கள். ஆசிரியையாக பணிபுரிகிறார்.
தாய்க்கு மகள் செய்து வைத்த திருமணம்!

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரைச் சேர்ந்தவர் கீதா அகர்வால். அவருக்கு வயது 53. கீதாவின் கணவர் முகேஷ் குப்தா 2016-ஆம் ஆண்டு மே மாதம் மாரடைப்பால் காலமானார். கீதாவுக்கு இரண்டு மகள்கள். ஆசிரியையாக பணிபுரிகிறார். கணவர் இறந்ததும், துயரம் அதிகமாகி மனநோயால் அவதிப்பட ஆரம்பித்தார். இளைய மகளான சன்ஹிதா வேலை நிமித்தம் தில்லிக்கு அருகில் உள்ள குடுகாவ்ங் செல்ல... மூத்த மகள் அருகில் இருந்தாலும் கீதா எப்போதும் சோகத்திலேயே மூழ்கி இருந்தார். தாயின் நிலைமை சன்ஹிதாவை அதிகம் பாதித்தது.
"தாயை விட்டுவிட்டு வேலை பெரிது என்று வந்துவிட்டேனே... சரியான சுயநலவாதி... நான் செய்தது சரியல்ல... தவறு... பெரிய தவறு என்று என்னையே சபித்துக் கொள்வேன். என்னைப் பார்த்தால் ஆறுதலாக இருக்கும் என்பதால் சனி, ஞாயிறு அம்மாவைப் பார்க்க வந்துவிடுவேன். அந்த இரண்டு நாட்கள் அம்மாவின் முகத்தில் ஒரு மலர்ச்சியிருக்கும்.
அந்த மலர்ச்சி நிரந்தரமாக இருக்க அவருக்கு மறுமணம் செய்து வைத்தால் என்ன? என்று தோன்றியது. அம்மா உள்பட குடும்பத்தில் அனைவரும் எதிர்த்தனர். எனக்கு அது பெரிதாகப்படவில்லை. ஒவ்வொருவருக்கும் வாழ்க்கைத் துணை தேவை. எல்லாவற்றையும் குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்ள முடியாது. அதனால் அம்மாவின் அனுமதி இன்றி திருமண வலைதளத்தில் அம்மாவின் புகைப்படத்தைப் போட்டு எனது செல்போன் எண்ணையும் பதிவு செய்தேன். மனைவியை இழந்த பலரும் என்னைத் தொடர்பு கொண்டனர்.
அம்மாவிடம் எனது நோக்கத்தை விளக்கிச் சொன்னேன். அப்போதும் அம்மா மறுமணத்தை எதிர்த்தார். குடும்பத்தாரும் "கீதாவுக்கு இரண்டாம் கல்யாணமா?'' என்று எதிர்த்தனர். கட்டுப்பாடான குடும்பத்தில் இப்படி எதிர்ப்புகள் கிளம்பத்தான் செய்யும். ஆனால் நான் விட்டுவிடவில்லை. அம்மாவுக்கு மறுமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றேன். அக்கா கூட எனது ஆசைக்கு உடன்படவில்லை. பலதும் சொல்லி அம்மாவை ஒத்துக்கொள்ள வைத்தேன்.
அம்மாவை மறுமணம் செய்து கொள்ள விருப்பப்பட்டவர்களில் 55 வயதான குப்தா என்பவரை நான் தேர்ந்தெடுத்தேன். குப்தாவின் மனைவி 2010-இல் காலமானார். அவருக்கு இரண்டு மகன்கள். வருவாய்த் துறையில் ஆய்வாளராகப் பணி புரிகிறார்.
அந்தச் சூழ்நிலையில் அம்மாவுக்கு கருப்பை அகற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அறுவைச் சிகிச்சையும் நடந்தது. அதைக் கேள்விப்பட்ட குப்தா ஜெய்ப்பூர் வந்துவிட்டார். மூன்று நாள்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து அம்மாவை சிரத்தையுடன் கவனித்துக் கொண்டார்.
அவர் காட்டிய கரிசனத்தை உணர்ந்து கொண்ட அம்மா, குப்தாவைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்தார். சென்ற மாதம் திருமணம் நடந்தது. அம்மாவிடம் பழைய சிரிப்பு திரும்பியது கண்டு நானும் சந்தோஷித்தேன்'' என்கிறார் சன்ஹிதா.
- கண்ணம்மா பாரதி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com