கார்ப்பரேட் முதல் கை தொழில் வரை...

கார்ப்பரேட் நிறுவனம் முதல் கை தொழில் செய்வோர் வரை தொழில் முனைவோருக்கான ஆலோசகராக இருப்பவர் அருணா சுப்பிரமணியன். இவருக்கு இன்னொரு முகமும் உண்டு,
கார்ப்பரேட் முதல் கை தொழில் வரை...

கார்ப்பரேட் நிறுவனம் முதல் கை தொழில் செய்வோர் வரை தொழில் முனைவோருக்கான ஆலோசகராக இருப்பவர் அருணா சுப்பிரமணியன். இவருக்கு இன்னொரு முகமும் உண்டு, இயற்கை பேரிடர்களில் சிக்கி தவிப்போர், தனித்து வாழும் பெண்கள், புற்றுநோயால் பாதிக்கும் குழந்தைகள் போன்றோருக்கு உதவும் சமூக அமைப்புகளிலும் ஒருவராக இருப்பவர். இவர் தான் கடந்து வந்த பாதை குறித்து நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்: 
"பிசினஸ் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். என் கணவர் மருத்துவராக இருக்கிறார். குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டதும் வேலையை விட்டுவிட்டு பகுதி நேர வேலையாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆலோசகராக இருந்து வந்தேன். 
ஒரு கட்டத்தில் இந்த சமூகத்திற்கு நாம் என்ன செய்தோம், என்ன செய்யப்போகிறோம் என்ற எண்ணம் வந்ததும். சமூக அமைப்புகளைத் தேடி சென்று என்னால் இயன்ற உதவிகளை செய்ய ஆரம்பித்தேன். நாளடைவில் அந்த அமைப்புகளில் நானும் ஒரு உறுப்பினராக மாறிவிட்டேன். தற்போது தொழில் முனைவோருக்கான ஆலோசகராகவும், பூமிகா டிரஸ்ட், மகேஷ் மெமோரியல் டிரஸ்ட், நாம் போன்ற அமைப்புகளில் டிரஸ்டியாகவும் இருக்கிறேன். 
பூமிகா டிரஸ்ட் என்பது இந்தியாவுக்குள் இயற்கை பேரிடர் காலங்களில் பாதிப்புக்குள்ளாகும் நகரங்களில் உதவிடும் நிறுவனம். இந்த அமைப்பு குஜராத் பூகம்பம் வந்த போது தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதன்மூலம், 2015-இல் சென்னையில் வெள்ளம் வந்தபோது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு நாளைக்கு 50 ஆயிரம் பேர் வீதம் உணவு தயாரித்து விநியோகம் செய்தோம். சென்னையிலேயே அதிகளவு உணவுகளை வழங்கியது நாங்களாகத்தான் இருக்கும். அதன்பின் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்ய அவர்களுக்கு உதவி செய்வது, இஸ்திரி தொழிலாளி, காய்கறி வியாபாரி போன்ற தங்களது உடமைகளை இழந்த சிறு வியாபாரிகளுக்கு அவர்களுக்கு தேவையானவற்றை வழங்கி உதவினோம். வெள்ளத்தினால் வீடு இழந்தவர்களுக்கு இதுவரை 60 வீடுகளை கட்டி கொடுத்திருக்கிறோம். 
தற்போது மேலும் 100 வீடுகள் கட்டுவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம். பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்த பள்ளிகளுக்கு தரை அமைத்து தருவது, கழிப்பிடம் சரி செய்து கொடுப்பது போன்றவற்றை இன்னமும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். தற்போது சென்னையை அடுத்த அச்சிறுப்பாக்கம் பகுதியில் பணியைத் தொடங்கியிருக்கிறோம். சமீபத்தில் அசாமில் வெள்ளம் வந்து நிறைய பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு தேவையானவற்றை கொண்டு செல்வதற்கான முனைப்பில் இருக்கிறோம். 
மகேஷ் மெமோரியல் டிரஸ்ட் என்பது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ உதவி செய்யும் அமைப்பு. அடையாறு புற்று நோய் மருத்துவமனையுடன் இணைந்து அவர்களது நிலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தங்குவதற்காக இருப்பிடம் கட்டி கொடுத்துள்ளோம். மருத்துவமனை அவர்களுக்கு இலவச மருத்துவம் கொடுக்கிறார்கள். அடுத்து அசாம் மாநிலத்தில் ஒரு கட்டடம் கட்டவுள்ளோம். மேலும் புற்றுநோய் குறித்து மக்களிடைய விழிபுணர்வு ஏற்படுத்தி வருகிறோம். 
நாம் அமைப்பு என்பது தனித்து வாழும் பெண்களுக்கு உறுதுணையாக இருக்கும் அமைப்பு. சுஹாசினி மணிரத்னம் தொடங்கியது. இதில், ஒரு குழுவிற்கு 60 பேர் வீதம் குழுக்களை ஏற்படுத்தி, அதில் அவர்களுக்கு மனரீதியான ஆறுதலை அளித்து மனோ தைரியம் கொடுக்கவும். அவர்களுக்கு ஏதாவது கைத்தொழில் கற்றுக் கொடுத்து மாதாந்திர வருமானத்திற்கு வழி வகை செய்து தருவது, அவர்களது பிள்ளைகளின் கல்விக்கு உதவுவது போன்றவற்றையும் செய்து அவர்களது கண்ணீரை துடைக்க எங்களால் இயன்ற உதவிகளை செய்து தருகிறோம்.
பெண்களைப் பொருத்தவரையில் தாங்களே தங்களுக்கு ஒரு குறுகிய வட்டத்தை வகுத்துக் கொண்டு செயல் படுகிறார்கள். அப்படியில்லாமல், தங்களுக்கான வட்டத்தைத் தாண்டி வெளியே வந்து நல்ல செயல்களில் அதிகம் ஈடுபடும்போது, நிச்சயம் யாரும் அதைத் தடுக்க மாட்டார்கள்'' என்றார்.
- ஸ்ரீதேவி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com