சமையல்... சமையல்!

பால் அல்வா, தேங்காய் அல்வா, பேரீச்சம்பழ அல்வா, சர்க்கரைவள்ளிக் கிழங்கு அல்வா, மாம்பழ அல்வா, பாசிப்பருப்பு மாம்பழ அல்வா, அன்னாசிப்பழ கடலைமாவு அல்வா

பால் அல்வா

தேவையான பொருள்கள்

காய்ச்சியப் பால் - 5 டம்ளர்
சர்க்கரை - 1/4 கிண்ணம்
எலுமிச்சம்பழச் சாறு - 1/2 தேக்கரண்டி
உருக்கிய நெய் - 1/4 கிண்ணம்
சாரப்பருப்பு - 1 தேக்கரண்டி
ஏலப்பொடி - 1/2 தேக்கரண்டி
பன்னீர் - 1 தேக்கரண்டி
கிஸ்மிஸ் பழம் - 6

செய்முறை

கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்துச் சூடானவுடன், எலுமிச்சம் பழச்சாறு ஊற்றிக் கைவிடாமல் கிளறி தயிர் பதம் வந்தவுடன், விட்டு விட்டுக் கிறளவும். பாலின் அளவு நான்கில் ஒரு பங்கு ஆனவுடன், அதில் சர்க்கரையைக் கொட்டி மீண்டும் கிளறவும். பிறகு நெய்யை ஊற்றி, பாத்திரத்தின் மேல் பாகத்தில் ஒட்டியிருக்கும் பாலாடையையும் வழித்து பாலுக்குள்ளேயே போட்டு கிளரவும். சிறிதளவு கெட்டியாகி திரட்டுப் பால் பதம் வந்தவுடன், பன்னீரைத் தெளித்துப் பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி, சாரப்பருப்பு போட்டுக் கிளறிவிடவும். சூடாகப் பரிமாறவும். ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது எடுத்தும் பரிமாறலாம்.

*

தேங்காய் அல்வா

தேவையான பொருள்கள்

முந்திரி - 10 பருப்புகள் (2 மணி நேரம் ஊறவைக்கவும்)
பாதாம் பருப்பு - 10 (வெந்நீரில் ஊற வைத்துத் தோலுரிக்கவும்)
தேங்காய்த் துருவல் - 1/4 கிண்ணம் (விழுதாக அரைக்கவும்)
சர்க்கரை - 1 1/2 கிண்ணம்
நெய் - 1/2 கிண்ணம்
திராட்சை - 6

செய்முறை

தண்ணீரில் ஊறிய பாதாம் மற்றும் முந்திரியை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த முந்திரி, பாதாம் கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு, தேங்காய் விழுதையும் சேர்த்து, சர்க்கரை சேர்த்து கிளறிக் கொண்டிருங்கள். கலவை கெட்டியாகி இறுகி வரும்போது உருக்கிய நெய்யை அதில் ஊற்றிக் கிளறுங்கள். பிறகு கிஸ்மிஸ் பழங்கள் சேர்த்து அல்வா பதம் வந்தவுடன் இறக்கி, பாத்திரத்தில் எடுத்து வைத்துப் பரிமாறவும்.

*

பேரீச்சம்பழ அல்வா

தேவையான பொருள்கள்

விதை நீக்கிய பேரீச்சம்பழம் - 1/4 கிலோ 
(நீரில் ஊறவைத்துப் பிறகு மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்)
சர்க்கரை - 1/2 கிண்ணம்
உருக்கிய நெய் - 1/4 கிண்ணம்
திராட்சை, முந்திரி - தேவையான அளவு
காய்ச்சியப் பால் - 4 டம்ளர்

செய்முறை

அடிப்பிடிக்காத கனமான பாத்திரத்தில் பால், சர்க்கரை, பேரீச்சம்பழ விழுது சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும். அடுப்பை நிதானமாக எரிய விடவும். ஓரளவு கெட்டியானதும் நெய்யை சிறிது சிறிதாக அதில் ஊற்றிக் கிளறி, கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் சுருளாக அல்வா பதம் வரும்போது, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துக் கிளறி இறக்கிவிடுங்கள். நெய் தடவிய தட்டில் அல்வாவைக் கொட்டி அளவான துண்டுகளாக நறுக்கவும் பேரீச்சம் பழ அல்வா ரெடி.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு அல்வா

தேவையானவை

சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 1/2 கிலோ (குக்கரில் வேகவைத்து தோல் நீக்கவும்)
பொடித்த வெல்லம் - 2 கிண்ணம்
ஆரஞ்சு பவுடர் - 1 சிட்டிகை
நெய் - 3 தேக்கரண்டி
ஏலப்பொடி - 1/2 தேக்கரண்டி

செய்முறை

வேகவைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை மசித்துக் கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் வெல்லம் போட்டு, தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து, வெல்லம் கரைந்ததும், கிழங்கு விழுது சேர்த்துக் கிளறிக் கொண்டேயிருக்கவும். பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது 5 தேக்கரண்டி நெய்விட்டு, கலர், ஏலப்பொடி சேர்த்துக் கிளறி இறக்கவும்.

*

மாம்பழ அல்வா

தேவையானவை

மாம்பழம் - 2 
சர்க்கரை - 1 கிண்ணம் 
பால் - 2 கிண்ணம்
ஏலக்காய் - 2 
நெய் - 1 தேக்கரண்டி

செய்முறை

மாம்பழத்தின் தோலை நீக்கிவிட்டு துண்டுகளாகப் போட்டு அதனை நன்றாக மசித்துக் கொள்ளவும். சுத்தமான வாய் அகன்ற பாத்திரத்தில் மசித்த மாம்பழத்துடன் சர்க்கரை, பால் கலந்து அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் கிளறுங்கள். கலவை பதமாக ஒட்டாமல் வரும் போது நெய் சேர்க்கவும். ஏலக்காயை சிறிது சர்க்கரையுடன் சேர்த்து மிக்சியில் அரைத்து சேர்க்கவும். பாத்திரத்தில் தளதளவென்று அல்வா பதம் வந்ததும், சிறிது நெய் தடவிய தட்டு அல்லது ட்ரேயில் ஊற்றி நன்கு ஆறிய பின்னர் துண்டுகளாக வெட்டிப் பரிமாறவும். உங்களுக்கு வேறு நிறங்கள் வேண்டுமென்றால் மாம்பழம், சர்க்கரை, பால் கலவையுடன் நிறப் பொடியை சிறிது தண்ணீரில் கலந்து சேர்த்துக் கொள்ளலாம். சுவையான மாம்பழ அல்வா தயார்.

*

பாசிப்பருப்பு மாம்பழ அல்வா

தேவையானவை

மாம்பழத் துண்டுகள் - 1 கிண்ணம்
முந்திரி - 10
திராட்சை - 10
உருக்கிய நெய் - 1/4 கிண்ணம்
பாசிப்பருப்பு - 1/4 கிண்ணம்
மண்டை வெல்லம் - 100 கிராம் (துருவியது)
தண்ணீர் - 1 டம்ளர்
தேங்காய்த் துருவல் - 1/4 கிண்ணம்
வறுத்த பச்சரிசி மாவு - 2 தேக்கரண்டி 

செய்முறை

வாணலியில் நெய் 6 தேக்கரண்டி ஊற்றி சூடானவுடன் முந்திரி, திராட்சையைப் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அந்த நெய்யிலேயே பாசிப்பருப்பைச் சேர்த்து வதக்கி, 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து மலர வேக வைத்துக் கொள்ளவும். மற்றொரு வாணலியில் 2 தேக்கரண்டி நெய் ஊற்றி, தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கி, அது பொன்னிறமானவுடன், வேகவைத்த பாசிப்பருப்பைக் கொட்டிக் கிளறி, மாம்பழத் துண்டுகளையும் சேர்த்து அளவான தீயில் கிளறிக் கொண்டே இருக்கவும். 1 தேக்கரண்டி தண்ணீர், வெல்லப்பாகு - 1/2 கப் சேர்த்துக்கிளறி, 2 நிமிடம் கழித்து பச்சரிசி மாவு தூவிக்கிளறி, கலவை கெட்டியாகி அல்வாபதம் வந்தவுடன் 1 தேக்கரண்டி நெய், முந்திரி, திராட்சை சேர்த்துக் கலக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து சூடாகப் பரிமாறவும். 

*

அன்னாசிப்பழ கடலைமாவு அல்வா

தேவையானவை

அன்னாசிப் பழச்சாறு - 1 கிண்ணம்
கடலைமாவு - 1/2 கிண்ணம்
சர்க்கரை - 1/2 கிண்ணம்
உருக்கிய நெய் - 1/2 கிண்ணம்
முந்திரி - 7 பருப்புகள்
திராட்சை - 6 
ஏலப்பொடி - 1/2 தேக்கரண்டி
தண்ணீர் - 1 டம்ளர்

செய்முறை

அன்னாசி பழச் சாறுடன் கடலை மாவைக் கரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சர்க்கரையுடன் தண்ணீரைச் சேர்த்து அடுப்பில் வைத்துக் கரைந்ததும், மிதமான தீயில் அன்னாசி கலவையை அதில் சேர்த்துக் கிளறுங்கள். அவ்வப்போது நெய் சேர்த்துக் கிளறி அல்வா பதம் வந்ததும் இறக்கி விடுங்கள். இதில் ஏலப்பொடி, முந்திரி, திராட்சை சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.

சமையல் குறிப்புகள் - கே. அஞ்சம்மாள், ராமநாதபுரம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com