இல்லத்தரசியும் தொழில் முனைவோர் ஆகலாம்-10

தங்கம் மட்டுமே அழகு அல்ல, அதை ஆபரணமாக செய்து பெண்கள் அணிவதால்தான் அதற்கு அழகும் மதிப்பும் கூடுகிறது.
இல்லத்தரசியும் தொழில் முனைவோர் ஆகலாம்-10

தங்கம் மட்டுமே அழகு அல்ல, அதை ஆபரணமாக செய்து பெண்கள் அணிவதால்தான் அதற்கு அழகும் மதிப்பும் கூடுகிறது. இந்தவாரம் நகை தயாரிப்பு பயிற்சிகளைப் பற்றி பார்க்கலாம். உலக அளவில் இந்திய பெண்களை குறிப்பாக, தமிழ்நாட்டு பெண்களை வியந்து பார்க்கின்றனர் என்றால் அதற்கு அவர்களின் நகை சேமிப்புதான் காரணம் என்றால் மிகையாகாது.
 முன்பெல்லாம் தங்க நகையைப் பொருத்தவரை பொற்கொல்லர்கள் வடிவமைத்து செய்து தரும் நகைகளே பெரும்பாலும் பெண்கள் அணிந்து வந்தனர். காலப்போக்கில் மனிதர்களின் தேவையும், ரசனையும் மாறிவிட, கணினி மூலம் வடிவமைப்புகள் மாறி, இயந்திரங்களின் மூலம் தற்போது நகைகள் தயாராகி வருகிறது. அந்த வகையில் நகைகள் தயார் செய்தல், நகைகளை வடிவமைத்தல், நகைகளை மதிப்பீடு செய்தல், பாலீஷ் செய்தல் போன்ற பலவிதமான பயிற்சிகள் அரசாங்கத்தின் மூலம் குறைவான கட்டணத்தில் ஒரு வருடம், மூன்று மாதம், இரு வாரம் என பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
 இப்பயிற்சிகள் மட்டுமின்றி நவீன நகை வடிவமைப்பு பயிற்சிகள், நகை உற்பத்தி மேலாண்மை பயிற்சியும் அளிக்கப்படுகின்றன. இப்பயிற்சி பெற்றோர், சொந்தமாக வீட்டில் இருந்தபடியே இத்தொழிலை செய்யலாம். அடுத்ததாக நகை பாலீஷ் செய்யும் பயிற்சி, நகைகளை சுத்தம் செய்யும் பயிற்சி ஆகியவையும் அளிக்கப்படுகின்றன. ஆண், பெண் இருபாலரும் இதில் கலந்து கொள்ளலாம்.
 நவீன நகை வடிவமைப்பு மற்றும் உற்பத்தி
 இது ஒரு வருட கால பயிற்சியாகும் . இப்பயிற்சியில் நகைகள் செய்வது, மதிப்பீடு உட்பட அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படும். 10-ஆம் வகுப்பு படிப்பு போதுமானது. இப்பயிற்சி முடிப்பவர்களுக்கு பயிற்சி காலத்தின் போதே பெரிய, பெரிய நகை தொழிற்சாலைகள், கடைகள் மூலம் வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது.
 நகை மதிப்பீட்டாளர் பயிற்சி
 இது இரண்டு வார கால பயிற்சியாகும். இப்பயிற்சி முடித்தவர்கள், வங்கிகளில் பகுதிநேர, முழு நேர நகை மதிப்பீட்டாளர் பணிக்குச் செல்லலாம்.
 கணினி நகை வடிவமைப்பு பயிற்சி
 இது 3 மாத கால பயிற்சியாகும். இப்பயிற்சியில் கணினி மூலம் நகைகள் டிசைன் செய்வது பற்றி பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி பெற்றோர் பல நகை தயாரிப்பு முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறலாம்.
சென்னையில் இப்பயிற்சி அளிக்கப்படும் இடம்
 டாக்டர் தர்மாம்பாள் அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, தரமணி, சென்னை - 600 113. தொ.பே. 9600318040, 9445368910.
 -ஸ்ரீதேவி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com