சமையல்... சமையல்!

கேரட் குடைமிளகாய் நூடுல்ஸ் சூப், வெண்டைக்காய் அவியல், மிளகு தோசை, கருப்பு உளுந்து சின்ன வெங்காயம் துவையல் 

கேரட் குடைமிளகாய் நூடுல்ஸ் சூப்

தேவையானவை: 
கேரட் - 1
பச்சை குடைமிளகாய் -1
பிளைன் நூடுல்ஸ் - கால் கிண்ணம்
பூண்டு பற்கள் - 7
மக்காச்சோள மாவு - 1 தேக்கரண்டி
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி
எலுமிச்சை - 1
பொடியாக நறுக்கிய கொத்துமல்லி இலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை : கேரட்டை நன்றாக கழுவி பின் தோலைச் சீவிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். குடை மிளகாயை கழுவி நடுவில் இருக்கும் விதைகளை எடுத்து கொள்ளவும். பின் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும் அல்லது நன்கு நசுக்கிக் கொள்ளவும். ஒரு சிறிய பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க ஆரம்பித்ததும் நூடுல்ûஸ சேர்த்து சிறிது வேகவைத்து கொள்ளவும். அடிகனமான வாணலியில் வெண்ணெய்யை உருக்கி பின் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து நன்கு வாசம் வரும் வரை வதக்கவும். பின் பொடியாக நறுக்கிய கேரட்டை சேர்த்து நன்கு வதக்கவும். கேரட் லேசாக வதங்கியதும் நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து லேசாக வதக்கவும். பின் 2 கப் தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் வேகவைக்கவும். அவை வேகும் போது மக்காச்சோள மாவை சிறிது தண்ணீர் விட்டு நன்றாக கரைத்து கொள்ளவும். சூப் லேசாக கொதிக்க ஆரம்பித்ததும் தேவையான உப்பு மற்றும் வேகவைத்த நூடுல்ûஸ சேர்த்து கலந்து கொதிக்க விடவும். பின் கரைத்து வைத்துள்ள மக்காச்சோள மாவு கரைசலை சேர்த்து சிறிது கெட்டியான பின் பொடியாக நறுக்கிய கொத்துமல்லி இலை, மிளகுத்தூள் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து இறக்கவும். சூடாக பரிமாறவும்.

வெண்டைக்காய் அவியல்

தேவையானவை
வெண்டைக்காய் - 10- 15
பெரிய வெங்காயம் - 1
தயிர் - கால் கிண்ணம்
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரைக்க
தேங்காய்த் துருவல் - அரை கிண்ணம்
சின்ன வெங்காயம் - 2
பூண்டு பற்கள் - 2
சீரகம் - அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
மிளகாய் வற்றல் - 1
செய்முறை : வெண்டைக்காயை நன்கு கழுவி கொள்ளவும். பின் ஒரு சுத்தமான துணியில் துடைத்து கொள்ளவும். பின் நடுவில் கீறி நறுக்கி கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். ஒரு சிறிய சட்னி ஜாரில் தேங்காய்த் துருவல், சின்ன வெங்காயம், பூண்டு பற்கள், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் மற்றும் சீரகம் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும். பின்னர், வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய வெண்டைக்காயைச் சேர்த்து மிதமான தீயில் வைத்து வதக்கவும். அவை வதங்கியதும் கால் கப் தண்ணீர் தெளித்து வேகவைக்கவும். வெண்டைக்காய் நன்கு வெந்ததும் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். பின் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும். பின் தயிர் சேர்த்து சிறிது நேரம் லேசாக கொதித்ததும் இறக்கவும். சிறிது கறிவேப்பிலை சேர்த்து நன்கு கிளறி விடவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு உளுந்தம்பருப்பு தாளித்து அவியலில் சேர்க்கவும். 

மிளகு தோசை 

தேவையானவை:
இட்லி அரிசி -1 கிண்ணம்
பச்சரிசி - அரை கிண்ணம்
கருப்பு உளுந்து - கால் கிண்ணம்
மிளகுத்தூள் - 3 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கிண்ணம்
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய்த் துருவல் - அரை கிண்ணம்
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை: ஒரு பாத்திரத்தில் அரிசி மற்றும் உளுந்தையும் சேர்த்து கழுவிக்கொண்டு 2 மணி நேரம் ஊறவைக்கவும். பின் தண்ணீரை வடிகட்டவும். மிக்ஸி ஜாரில் வடிகட்டிய அரிசி மற்றும் உளுந்தையும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும். அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றவும். மேலும் 1.5 கப் தண்ணீர் விட்டு கலக்கவும். அரைத்த மாவில் உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். தோசைக்கல்லை சூடாக்கவும். நன்கு சூடானதும் 1 கரண்டி மாவை எடுத்து ரவா தோசை போல் ஓரத்தில் இருந்து மெலிதாக ஊற்றவும். தேங்காய் எண்ணெய்யை தோசையை சுற்றி விடவும். தோசை பொன்னிறமாக மாறியதும் திருப்பி போட்டு 1 நிமிடம் நன்கு முறுகியதும் எடுக்கவும். தேங்காய்ச் சட்னியோடு பரிமாறவும்.

கருப்பு உளுந்து சின்ன வெங்காயம் துவையல் 

தேவையானவை 
சின்ன வெங்காயம் - 15
பூண்டு பற்கள் - 5
கருப்பு உளுந்து - 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 8
புளி - சிறிது
பெருங்காயத்தூள் - அரைத் தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
கல் உப்பு - சிறிது
செய்முறை: சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பற்கள் தோலை உரித்து கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் கருப்பு உளுந்தம் பருப்பை சேர்த்து நன்கு வாசம் வரும் வரை வறுத்து தனியே எடுத்து வைக்கவும். பின் அதே வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் காய்ந்த மிளகாய் சேர்த்து லேசாக வறுத்து தனியே எடுத்து வைக்கவும். பின் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பற்கள் சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக ஆகும் வரை வறுத்துக்கொள்ளவும். அடுப்பை நிறுத்தும்போது புளியை சேர்க்கவும். ஒரு சிறிய சட்னி ஜாரில் கல் உப்பு மற்றும் வறுத்த காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். பின் வதக்கிய சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் புளி சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும். கடைசியாக வறுத்து வைத்துள்ள கருப்பு உளுந்து மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து லேசாக அரைக்கவும். பின் பரிமாறும் கிண்ணத்தில் மாற்றி சிறிது தண்ணீர் விட்டு நன்றாக கலந்து விடவும். 
சுவையான துவையல் ரெடி.

இந்த வார சமையல் குறிப்புகளை வழங்குபவர் முத்துலட்சுமி மாதவகிருஷ்ணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com