பதினாறு ஆண்டுகளில் நாற்பத்தைந்து அறுவை சிகிச்சைகள்!

அழகான பெளலமிக்கு அந்த விபத்து நடந்த போது வயது பன்னிரண்டு. விபத்தில் வலது கையை இழந்தார்.
பதினாறு ஆண்டுகளில் நாற்பத்தைந்து அறுவை சிகிச்சைகள்!

அழகான பெளலமிக்கு அந்த விபத்து நடந்த போது வயது பன்னிரண்டு. விபத்தில் வலது கையை இழந்தார். அதன் பிறகு பதினாறு ஆண்டுகளில் நாற்பத்தைந்து அறுவை சிகிச்சைகள் தற்போது தனது கையைக் காப்பாற்றிக் கொண்டுள்ளார். தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டான பெளலமி தனக்கு நேர்ந்த விபத்து பற்றியும், திருமணம் குறித்தும் சொல்கிறார்.
 "மும்பையிலிருக்கும் நான் பள்ளி விடுமுறைகளில் ஹைதராபாத்தில் இருக்கும் தாய்மாமா வீட்டிற்கு வந்துவிடுவேன். அங்கே கசின்களுடன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று பொழுது போகும். நாங்கள் இரண்டாவது தளத்தில் ஓடி விளையாடுவோம். அப்படி விளையாடும் போது என் கையிலிருந்த விளையாட்டுப் பொருள் அதிக மின் அழுத்தம் உள்ள மின்கம்பியில் பட... என் வலது கை, இடது கால், அணிந்திருந்த உடைகள் கருகி தூக்கி எறியப்பட்டேன்.
 ஏறக்குறைய எண்பது சதவீதம் கருகிப் போயிருந்தது. அனுபவமுள்ள மருத்துவர்கள் "ஆண்டவன் புண்ணியத்தில் உயிர் பிழைத்தது. முற்றிலும் கருகிய வலது கையைத் துண்டித்து எடுக்க வேண்டும்.. வேறு வழியே இல்லை' என்று சொல்லிவிட்டார்கள். பெற்றோர், உறவினர் துடிதுடித்துப் போனார்கள். கடைசியில் வலது கை துண்டிக்கப்பட்டது. அப்போது நான் ஆறாவது படித்துக் கொண்டிருந்தேன். ஒரு மாத சிகிச்சைக்குப் பிறகு என்னை மும்பைக்கு விமான ஆம்புலன்சில் கொண்டு சென்றார்கள். பிரீச் கேண்டி மருத்துவமனையில் சேர்த்தார்கள். எட்டு மாத சிகிச்சை நடந்தது.
 தோல், தசை இல்லாதிருந்த எனது இடது கையையும், இடது பாதத்தையும் சீரமைக்க மருத்துவர்கள் படாத பாடுப் பட்டார்கள். எனது அடிவயிறை வெட்டித் திறந்து அத்துடன் எனது இடது கையை வைத்து கட்டு போட்டார்கள். அப்படிச் செய்தால் சதை கையில் வளருமாம்.
 இரண்டு மாதம் கழித்து கால்களிலிருந்து நரம்புகளை எடுத்து இடது கையில் பொருத்தினார்கள். இடது கை மீண்டும் சுமாரான வடிவத்தைப் பெற்றாலும், பட்டன் போடவோ, கீழே விழுந்த பின்னை எடுக்கவோ, கூந்தலை வரவோ என்னால் முடியாது.
 அம்மாவிடம்... எனது வலது கை ஏன் இப்படி சூம்பிப் போய் இருக்கிறது என்று விடாமல் கேட்பேன். முன் பாகம் கழன்று கீழே விழுந்துருச்சு... அது தானா சீக்கிரம் வளர்ந்துவிடும்.. கவலைப்படாதே..' என்பார். வெட்டிய கை வளராது என்று அப்போது தெரியவில்லை... அப்பா அம்மாதான் எனக்கு பலமாக இருந்தார்கள். மிகவும் சிரமப்பட்டார்கள். எனது கவனத்தைத் திருப்ப, எப்பவும் எதையாவது சொல்லி என்னை சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால் என்னைப் பார்க்க வருபவர்கள்.. "பெளலமியின் வாழ்க்கை அவ்வளவுதான்...' என்று என் காதுபட சொல்லிவிட்டுப் போவார்கள்.
 பள்ளி ஆசிரியர்கள், மருத்துவமனையில் நான் படிக்க நோட்ஸ் கொடுத்து உதவினார்கள். நான் விடை சொல்ல இன்னொருவர் பதில் எழுத ஆவண செய்து உதவினார்கள். அதனால் நடுத்தர மதிப்பெண்களைப் பெற்று தேர்வில் தேர்ச்சி பெற முடிந்தது. சில மாதங்களில் வலது கையில் செயற்கைக் கையை பொருத்தினார்கள். ஆனால் என்னால் அதை கையாள முடியவில்லை. அதிக எடை காரணமாக அதை பொருத்திக்கொள்ள முடியவில்லை. அதனால் இடது கையால் எழுதப் பழகினேன்.
 "எம்பிஏ படித்து முடித்து, அப்பா செய்யும் பிசினஸில் ஈடுபட்டுள்ளேன். எனது பள்ளித் தோழனான சந்தீப் ஜோத்வானியைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறேன். திருமணமாகி மூன்றாண்டுகள் ஆகின்றன. என்னை நன்றாகப் புரிந்து கொண்டிருப்பதுடன் கரிசனமாகவும் கவனித்துக் கொள்கிறார்.
 என்னால் கார் ஓட்ட முடியும். பங்கீ ஜம்ப் கூட செய்வேன். வானத்திலிருந்து குதித்திருக்கிறேன். வாழ்க்கையில் பல இழப்புகள் வரலாம். துவண்டு அங்கேயே நின்றுவிடக் கூடாது. விபத்தில் கைகளை இழந்தாலும், முழுமையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்'' என்கிறார் பெளலமி.
 - அங்கவை
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com