கண்ணைக் கவரும் கட்ச் எம்ப்ராய்டரி!

குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடியினர் தயாரிக்கும் கைவினைப் பொருட்கள் மற்றும் நெசவு துணிகளை குறிப்பிடுவதுதான் கட்ச் எம்ப்ராய்டரி ஆகும்.
கண்ணைக் கவரும் கட்ச் எம்ப்ராய்டரி!

குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடியினர் தயாரிக்கும் கைவினைப் பொருட்கள் மற்றும் நெசவு துணிகளை குறிப்பிடுவதுதான் கட்ச் எம்ப்ராய்டரி ஆகும். மிக நேர்த்தியாக அழகான வேலைப்பாடுகளுடன் உருவாகும் இந்த பாரம்பரிய எம்ப்ராய்டரி ஆடைகள் இந்தியாவுக்கே பெருமை சேர்ப்பதாகும். இந்த பழங்குடியினரில் ராப்ரி, கராசியா ஜாட், முட்டாவா என பல பிரிவுகள் இருந்தாலும், ஒவ்வொரு பரிவினரும் தங்களுக்கென்று தனித்தனி பாணியில் சிறு கண்ணாடிகளைப் பதித்து எம்ப்ராய்டரி செய்வது பிரமிக்க வைக்கும் கலையாகும்.

இந்த கட்ச் எம்ப்ராய்டரி பொருட்கள் கட்ச் மாவட்டத்தில் அப்தாசா, அஞ்சர், பச்சாவ், லக்பத், மண்ட்வி, முத்ரா, நகத்ராணா, ராப்பர் ஆகிய கிராமங்களில் குடிசைத் தொழிலாக தயாரிக்கப்படுகின்றன. 1999-ஆம் ஆண்டு இந்திய அரசு, கட்ச் எம்ப்ராய்டரியை புவிசார் குறியீடு சட்டத்தின் கீழ் பதிவு செய்ததோடு இதற்கென தனி முத்திரையையும் வழங்கியது. கட்ச் எம்ப்ராய்டரி வரலாறு.

ஆப்கானிஸ்தான், கிரீஸ், ஜெர்மனி, ஈரான், ஈராக் ஆகிய நாடுகளிலிருந்து 16-17 ஆம் நூற்றாண்டுகளில் அகதிகளாக வந்து குஜராத்தில் குடியேறியவர்கள்தான் இந்த பழங்குடியினர். மோச்சிஸ் என்றழைக்கப்பட்ட இவர்கள், சிந்து மாநிலத்தை சேர்ந்த சுஃபி துறவிகளிடமிருந்து இந்த எம்ப்ராய்டரி கலையை கற்றனர். கட்ச் பகுதியில் வசித்து வந்த பெண்கள், தங்கள் தேவைக்காக மட்டுமின்றி வாழ்க்கை செலவுக்காகவும் இந்த கலையை கற்றுக் கொண்டனர். அதுமட்டுமின்றி அங்குள்ள அதிகபட்ச வெப்பநிலை, அதிகபட்ச வறட்சி நிலைக்கேற்ப ஆடைகளை தயாரிக்க வேண்டியதாயிற்று. பல தலைமுறையாக எம்ப்ராய்டரி ஆடைகளை தயாரித்து வரும் இந்தப் பழங்குடியினரின் கலைநயத்தை "ராம்லீலா' படத்தின் ஆடை வடிவமைப்பாளர் திரையில் அறிமுகப்படுத்தியபின், கட்ச் எம்ப்ராய்டரி ஆடைகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.

தயாரிப்பு முறைகள்

பதினாறு விதமான எம்ப்ராய்டரி ஆடைகளை இவர்கள் தயாரிக்கிறார்கள். அஹீர் என்ற சமூகத்தினர் தயாரிக்கும் ஆடைகளில் விலங்குகள். பறவைகள் போன்றவை இடம் பெற்றிருக்கும். சிறு கண்ணாடி துண்டுகளைப் பதித்து உருவாக்கும் இந்த ஆடைகளுக்கு "அப்லா' என்று பெயர்.

முகலாயர்களுக்கு உரிய வடிவமைப்பில் தயாரிக்கும் ஆடைகளுக்கு "ஆரி' என்று பெயர், முஸ்லீம்கள் அதிகமாக வசிக்கும் 11 கிராமங்களில் உள்ள மக்கள், விலை உயர்ந்தப் பட்டுத் துணிகளில் உலோக கம்பிகளைப் பயன்படுத்தி கண்ணாடிகளைப் பதித்து "கோட்டணி', "செக்கன்', "சோபாட்', "கத்ரி', "முக்சோ' என்ற பெயர்களில் ஆடைகளை தயாரிக்கின்றனர்.

சிறு கண்ணாடிகளை அமைத்து குறுக்கும் நெடுக்குமாக தையலிட்டு ஜாட் சமூகத்தினர் தயாரிக்கும் ஆடைகளுக்கு "ஜாட் கராஸியா', "ஜாட் பஃபகிராணி' என்று பெயர், கிரேட் ராண் எல்லைப் பகுதியில் உள்ள பன்னிபுல் வெளியில் வசிக்கும் தலித்துகள் தயாரிக்கும் ஆடைகளுக்கு "கம்பீரா', "குழதெபா' என்று பெயர்.

கறுப்பு இரட்டை தையல் மற்றும் சாட்டின் தையல் முறைகளில் úஸாதா , ரஜ்புத், மேக்வார் சமூகத்தினர் தயாரிக்கும் ஆடைகளுக்கு "காரெக்' என பெயரிட்டுள்ளனர். கண்ணின் புருவம் என்ற அர்த்தத்தில் நெரன் எனும் ஆடை, பட்டன் துளைகள் வைத்து வித்தியாசமாக தயாரிக்கப் படுபவையாகும். அருகருகே தையலிட்டு பட்டன் துளைகளுடன் அஹிர் பாணியில் தயாரிக்கப்படும் மற்றொரு ஆடைக்கு "பக்கோ' என்று பெயர்.

கிரி பகுதியைச் சேர்ந்த ராபரில் சமூகத்தினர், "ராபரி' என்ற பெயரிலேயே புராண கதைகளை ஆடைகளில் பிரதிபலிக்கும் வகையில் தயாரிக்கும் ஆடைகள் மிகவும் பிரபலமானவையாகும். ராபரில் சமூகத்தினர் சிந்து மாகானத்திலிருந்து வெளியேறி 14-ஆவது நூற்றாண்டில் கிரி பகுதியில் குடியேறியவர்களாவர். மற்றவர்கள் தயாரிப்பிலிருந்து இவர்களது தயாரிப்பு முற்றிலும் வேறுபட்டவை என்பதுடன், இதற்கு வாடிக்கையாளர்களும் அதிகம். தரமானது, நேர்த்தியானது என்ற அர்த்தத்தில் தயாரிக்கப்படும் "சூஃப்' என்ற ஆடை வடிவமைப்புகள் இவர்களது புதிய அறிமுகமாகும்.

கட்ச் எம்ப்ராய்டரிக்கென ஷோரூம்

இந்த எம்ப்ராய்டரி தொழிலில் பல கூட்டுறவு சங்கங்கள், தனியார் நிறுவனங்களுக்கு தொடர்பு இருப்பதால், சுமார் 6 ஆயிரம் பெண்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். எம்ப்ராய்டரி தொழிலில் பயன்படுத்தபடும் நூல்கள், பருத்தி, பட்டு மற்றும் மெலிதான உலோக கம்பிகளால் தயாரிக்கப்படுகின்றன. டிசைன்களை வரைவதற்கும், பிரதி எடுப்பதற்கும் டிரேசிங் பேப்பர் மிகவும் முக்கியமானதாகும். ஊசி கை கருவிகள், கண்ணாடிகள், நாணயம் போன்ற சிறு உலோகங்கள், எம்ப்ராய்டரி பிரேம்கள் மிகவும் தேவையான பொருட்களாகும். 
தினசரி வாழ்க்கை சம்பவங்கள் அடிப்படையிலேயே டிசைன்கள் உருவாக்கப்படுவதுண்டு. விலங்குகள், பறவைகள், மலர்கள், கோயில்கள், நடன மங்கைகள் போன்ற வடிவங்களும் இடம் பெறும். ஒவ்வொரு தையலுக்கும் மோச்சிபாரத், அபலா கண்ணாடி வேலை, ஹீர்பாரத். சூஃப் காரெக், பக்கோ என பெயரிட்டுள்ளனர். அரச குடும்பத்தைச் சேர்ந்த, செல்வந்தர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்படும் எம்ப்ராய்டரிகள் தரமானதாக இருக்க வேண்டுமென்பதற்காக சிறப்பு அக்கறை எடுத்துக் கொள்வதும் உண்டு.

இந்த கட்ச் எம்ப்ராய்டரி ஆடைகள், மேஜை விரிப்புகள், போர்வைகள், திரைச்சீலைகள், தரைவிரிப்புகள், சோபா, தலையனை உறைகள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் அகமதாபாத்தில், அனார் பட்டேல் என்பவர் ஷோரூம் ஒன்றை துவங்கி கட்ச் எம்ப்ராய்டரியைப் பிரபலபடுத்தியுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் சுமார் 3.5 லட்சம் இளம் ஓவிய கலைஞர்கள் இருப்பதால், அவர்களுக்கும் வேலை வாய்ப்புகள் அளிக்கும் வகையில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மானேஜ்மென்ட்டின் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன் மற்றும் தி சென்டர் பார் என்விரோன்மெண்ட் ஆஃப் பிளானிங் அண்ட் டெக்னாலஜி புதிய கண்டுபிடிப்புகளையும், டிசைன்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. இதனால் அகமதாபாத்தில் மேலும் பல ஷோரூம்கள் திறக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com