உணவு, உடற்பயிற்சி, தியானம் நினைவாற்றல்! நட்சத்திரா

இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் நேற்று நடந்தவற்றையே இன்று மறந்து போகும் அளவில்தான் பெரும்பாலானவர் ஓடிக்கொண்டிருக்கிறோம்
உணவு, உடற்பயிற்சி, தியானம் நினைவாற்றல்! நட்சத்திரா

இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் நேற்று நடந்தவற்றையே இன்று மறந்து போகும் அளவில்தான் பெரும்பாலானவர் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் தனது அசாத்திய நினைவாற்றலால் இந்த உலகத்தைத் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் மதுரையைச் சேர்ந்த நட்சத்திரா. மேலும், இவர் " நட்சத்திரா மெமரி அகாடமி' என்ற நினைவாற்றல் வளர்க்கும் பயிற்சி வகுப்பையும் நடத்தி வருகிறார். இவரைச் சந்தித்தோம்:
"சிறுவயது முதலே வித்தியாசமாக எதையாவது சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஆனால் சாதிப்பதற்குகான வழித்தெரியவில்லை. எனக்கு சிறுவயது முதலே பலதரப்பட்ட விஷயங்களை ஞாபகம் வைத்துக் கொள்வது கைவரப் பெற்றிருந்தது. எனவே, ஞாபக சக்தியை கொண்டே சாதிக்க வேண்டும் என்று எண்ணினேன். அதன் விளைவு இன்று ஞாபகசக்தியில் சாதனையாளர் கௌரவ டாக்டர் பட்டம் வென்றுள்ளேன். 
நான் முதன்முதலில் 2014-இல் இந்திய சாட்சிச் சட்டம் 1872-இன் 183 பிரிவுகளையும் மனப்பாடம் செய்து மேலிருந்து கீழாக 11 நிமிடத்திலும் கீழிருந்து மேலாக 11.44 நிமிடத்திலும் கூறி இந்தியா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பெற்றேன்.
அதன்பிறகு ஞாபக சக்தி துறையில் ஆர்வம் அதிகரித்ததால் அது சம்பந்தமான ஆய்வில் ஈடுபட்டேன். அப்போது, ஞாபக சக்தியை மேம்படுத்திக் கொள்ள அவசியமான விஷயங்களை மட்டும் நினைவில் நிறுத்திக் கொள்ள சில உத்திகளை பின்பற்றினாலே போதும் என்று அறிந்தேன். அவற்றை பின்பற்றியபோது நானே ஆச்சரியப்படும்படி பலதரப்பட்ட விஷயங்களை என்னால் துல்லியமாக நினைவில் வைத்திருக்க முடிந்தது.
நினைவாற்றலை வளர்க்க ஒரு விஷயம் சார்ந்த தேடலில் தன்னம்பிக்கை, ஆர்வம், ஊக்கம், புரிதல், உடல்நலம் அவசியம். 
ஒரு விஷயத்தை படித்தபின் அவற்றை மூளைக்குள் இருக்கும் நினைவாற்றல் மண்டலம் என்ற மெமரி கார்டில் ஏற்றி அடுத்த நொடியில் மறக்காமல் வெளிப்படுத்துவதில் மட்டுமே நினைவாற்றல் உள்ளது. 
என் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள நான் பெரும்பாலும் பாடப்புத்தகங்களையே தேர்ந்தெடுக்கிறேன். இதன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு நினைவாற்றலை வளர்க்கும் பயிற்சியையும் அளித்து வருகிறேன். 
என்னிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் கின்னஸ், இந்தியன் புக் ஆப் ரெக்கார்டு, சில்ரன்ஸ் புக் ஆப் ரெக்கார்டு நிறுவனங்களிடமிருந்து இதுவரை 23 விருதுகள் பெற்றுள்ளனர். 
உதாரணமாக, கே.பி. ராஜேஷ் தேனியைச் சேர்ந்த மாணவர், இவர் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்ள 464 சட்டப்பிரிவு மற்றும் உட்பிரிவுகளை 28 பக்கங்கள் கொண்ட ஆங்கில புத்தகத்தை நேராக 30 நிமிடத்திலும், ரிவர்ஸில் 31 நிமிடத்திலும் கூறி உலக சாதனை படைத்துள்ளார்.
மைசூரை சேர்ந்த, 7- ஆம் வகுப்பு மாணவி வைஷ்ணவி வேதியியலில் உள்ள 118 அட்டவணைகளை குறியீடுகளுடன் 25 விநாடிகளில் ஆங்கிலத்தில் ஒப்புவித்து சாதனை செய்துள்ளார், எல். கோகுல் கமலேஷ் 1 நிமிடத்தில் 30 ஸ்கொயர் 23 கியூப்களை அதிவிரைவாக எழுதியும் ஒப்புவித்தும் சாதனை படைத்துள்ளார்.
அதேபோன்று திண்டுக்கல் சர்வேஷ் 5 வயதில் அறிவியல் சார்ந்த கருவிகள் குறித்து 200 கருவிகளின் பெயர்களை 5 நிமிடம் 36 விநாடியில் கூறி இளம் சாதனையாளர் விருது பெற்றார்.
எனது மகள் லாவண்யா தற்போது 11 -ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர், 10 ஆயிரம் ஆண்டுகளில் எந்தத் தேதி, மாதம் ஆண்டைச் சொன்னாலும் உடனே அந்த தேதிக்கான கிழமையைச் சொல்லுவார். ஆண்டுக்கு 365 நாள் வீதம் லட்சம் கிழமைகளை மூளையில் பதிவு செய்துள்ளார். கின்னஸ் சாதனை, 2 மாவட்ட விருது, 5 தேசியளவிலான விருது பெற்றுள்ளார். தற்போது என் நிறுவனத்தின் பாதி பொறுப்பை அவர்தான் நிர்வகித்து வருகிறார். பள்ளிகளுக்குச் சென்று நினைவாற்றால் பயிற்சி அளித்து வருகிறார். அவருக்கு "யங் மெமரி டிரைனர்' பட்டம் வாங்க வேண்டும் என்ற முயற்சியில் இருக்கிறார். எனது மகன் விஷ்வாவும், உலக விளையாட்டு வீரர்களின் பெயர்களை சொல்லி "வேல்ர்ட் ரெக்கார்ட்' செய்திருக்கிறார்.
நாங்கள் நார்மல் குழந்தைகள் மட்டுமல்லாமல் டிஸ்லெக்சியாவில் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பாரன்சிஸ், ஹைபர் ஆக்டிவிட்டி குழந்தைகளுக்கும் பயிற்சி அளிக்கிறோம். இந்த குழந்தைகளைப் பொருத்தவரை முதலில் இவர்களது பெற்றோருக்குத்தான் பயிற்சி, பிறகுதான் குழந்தைகளுக்கு. 
பொதுவாக நினைவாற்றலை பெருக்கிக் கொள்ள ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, தியானம், யோகா தினமும் அவசியம். உணவில் எதை எல்லாம் உண்ணக்கூடாது என்பது முக்கியமான ஒன்று. 
தற்போது மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதும் சமயம் என்பதால், மாணவர்கள், விழுந்து விழுந்து படித்துவிட்டு பரிட்சை ஹாலுக்கு சென்றதும் படித்ததெல்லாம் மறந்துபோனது போன்று தோன்றும், இந்த பயத்திலேயே பரீட்சை நன்றாக எழுத மாட்டார்கள். அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது, பரீட்சை தொடங்குவதற்கு 15 நிமிடம் முன்பு பள்ளிக் சென்றால் போதும். அதைவிட்டுவிட்டு 1 மணி நேரம் முன்பே சென்றுவிட்டு மற்ற பிள்ளைகளுடன் ஒப்பிட்டுக் கொண்டு, நான் இதைப் படிக்கலையே, அதைப் படிக்கலையே என்ற பதட்டத்தில் முழு புத்தகத்தையும் புரட்டிக் கொண்டு பயத்தை ஏற்றிக் கொள்ளாதீர்கள், அதேபோன்று பரீட்சை ஹாலுக்குள் சென்றதும் படிக்காத கேள்வி வந்துவிட்டால் பயப்படாதீர்கள், படித்தவற்றை, தெரிந்தவற்றை முதலில் எழுதுங்கள். எல்லாவற்றையும் விட பரீட்சைக்கு கிளம்பும் முன் நாம் படித்தது வருமா, வராதா, படித்தது வரவில்லை என்றால் என்ன செய்வது? என்று எண்ணாதீர்கள், நான் படித்ததுதான் வரும் என்ற நம்பிக்கையுடன் செல்லுங்கள், முடிந்த வரை ரிலாக்ஸாக இருங்கள் அப்போதுதான் மூளை நீங்கள் படித்தவற்றையெல்லாம் உங்களுக்கு ஞாபகப்படுத்தித் தரும்'' என்றார். 
- ஸ்ரீ தேவி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com