ஒரே நாளில்... நாற்பது நூல்கள்!

ஓரிரு நூல்களை எழுதி, அதற்கு வெளியீடு செய்வதற்குள் பெண்களுக்குப் போதும் போதும் என்றாகிவிடும் சூழலில் ஆறு மாதங்களில் 40 நூல்களை எழுதிக் குவித்திருக்கிறார் ஒரு பெண்மணி.
ஒரே நாளில்... நாற்பது நூல்கள்!

ஓரிரு நூல்களை எழுதி, அதற்கு வெளியீடு செய்வதற்குள் பெண்களுக்குப் போதும் போதும் என்றாகிவிடும் சூழலில் ஆறு மாதங்களில் 40 நூல்களை எழுதிக் குவித்திருக்கிறார் ஒரு பெண்மணி.
ஆவடி விஜயந்த்தா உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகவும், திருமுல்லைவாயில் ரங்கசாமி கல்லூரியில் பேராசிரியையாகவும் பணியாற்றி ஓய்வு பெற்ற முனைவர் மரிய தெரசா, ஆறு மாதத்திற்குள் 40 நூல்களை எழுதியுள்ளார்.
இந்நூல்கள் மரபுக் கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ, எதுகை, மோனைகூ கவிதை, சிறுவர் கதைகள், நாவல், ஆன்மிகம் என 11 வகைமைகளில் அமைந்துள்ளன.
பன்முகத் திறமை கொண்ட, மும்மொழிப் புலமையாளரான மரிய தெரசா, தமிழில் எம்.ஏ., பிஎச்.டி, ஆங்கிலத்தில் பி.ஏ., இந்தியில் இரண்டு எம்.ஏ., மற்றும் பி.எட். பட்டம் பெற்றவர். இவருடைய நூல்களை 15 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆய்வுக்குட்படுத்தி, இளம் முனைவர் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார்கள்.
பேராசிரியர் மரிய தெரசா, இதுவரை புதுக்கவிதை, மரபுக் கவிதை, சிறுகதை, நாவல், சிறுவர் சிறுகதைகள், சிறுவர் பாடல்கள், ஆன்மிகம், உரைநூல்கள் என 77 நூல்களை எழுதிக் குவித்திருக்கிறார். அவற்றுள் பெரும்பாலானவை கவிதை நூல்கள். மேலும், மன்னை பாசந்தி, பேரா. கஸ்தூரி ராஜா, சுடர் முருகையா, இரா.ரவி, கவிஞர் மோகனரங்கன் போன்றோரின் ஆறு நூல்கள் இவரால் தமிழிலிருந்து இந்திக்கு மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.
எழுத்துப் பணியே தம் வாழ்க்கைத் துணை என்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் இவர் திருமணமாகாதவர். கவியருவி, தமிழருவி, கவிமதி, மனிதநேயப் படைப்பாளர், சேவா ரத்னா, நல்லாசிரியர், பாவலர் திலகம், கவிதை ஞானி, சிந்தனைச் சிற்பி, ஹைக்கூ செம்மல் துளிப்பாச் சுடர், எழுத்து இமயம் , திருக்குறள் விருது, தமிழ் மாமணி, வாழ்நாள் சாதனையாளர் முதலிய 111 விருதுகளைப் பெற்றுள்ளார். மேலும், உள்நாடு, வெளிநாடுகளில் நடந்த கருத்தரங்குகள் பலவற்றில் கலந்துகொண்டு கட்டுரை வாசித்திருக்கிறார்.
இவரது சிறப்புப்பணியாக இவர் பெருமையுடன் குறிப்பிடுவது, திருவள்ளுவர் பைந்தமிழ் இலக்கிய மன்ற மகளிரணி செயலாளராகவும், கிறிஸ்துவின் தமிழ் எழுத்தாளர் ஒன்றிணைப்பின் தலைவராவும் இருப்பதுதான்.
11வகைமைகளில் பேராசிரியர் மரிய தெரசா எழுதிய 40 நூல்களும் ஒரே நாளில் ஒரே மேடையில் வெளியிடப்பட்டுள்ளன என்பதுடன், அவற்றுள் 36 நூல்களை மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டுப் பெருமை தேடிக்கொண்டிருப்பது சிறப்பு என்றால், கூடுதல் சிறப்பு, இந்த 40 நூல்களின் முதல் பிரிகளை 40 முக்கிய பிரமுகர்கள் பெற்றுக்கொண்டு சிறப்பித்திருக்கிறார்கள் என்பதுதான்.
முனைவர் தாயம்மாள் அறவாணன் தலைமையிலும், மணிவாசகர் பதிப்பகம் ச.மெ.மீனாட்சி சோமசுந்தரம் முன்னிலையிலும், சென்னை, கன்னிமாரா நூலகத்தின் எதிரில் அமைந்துள்ள இக்சா அரங்கத்தில் மார்ச் 4ஆம் தேதி இந்நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
-இடைமருதூர் கி. மஞ்சுளா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com