கடல் அம்மே...

தாய்க்குலத்தை, பெண் தெய்வத்தை விளிப்பதற்கு "அம்மா,' "அன்னை', "அம்மை' என்ற சொற்களை நாம் பயன்படுத்தி வருகிறோம்.
கடல் அம்மே...

தாய்க்குலத்தை, பெண் தெய்வத்தை விளிப்பதற்கு "அம்மா,' "அன்னை', "அம்மை' என்ற சொற்களை நாம் பயன்படுத்தி வருகிறோம். நம்முடைய அண்டை மாநில கேரள மக்கள் அன்னையை "அம்மே' என்று அழைப்பர். குமரி மாவட்ட மக்களும் "அம்மா' என்ற சொல்லைப் பயன்படுத்துவர். ஏறத்தாழ அரை நூற்றாண்டிற்கு முன் வெளிவந்த "தகழி சிவசங்கரன் பிள்ளை' எழுதிய "செம்மீன்' என்ற நாவலில் (திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது) கடல் தெய்வத்தை "கடல் அம்மே' என்ற சொல்லால் குறிப்பிடுவர்.
ஆறு, நிலம் இவற்றைப் பெண்ணாக (தெய்வமாக) உருவகித்துச் சிறப்பிப்பது இந்திய மரபு. கப்பலில் - மரக்கலங்களில் செல்லும் கடலோடிகள் - வணிகப் பெருமக்களை ஆபத்திலிருந்து காப்பாற்றும் பெண் தெய்வத்தைப் பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் வருகிறது. அந்தக் கடல் தெய்வத்தின் பெயரையே (மணிமேகலை) தன் மகளுக்குக் கோவலன் சூட்டுகிறான்.
மணிமேகலா தெய்வம், மணிமேகலைக்கு எவ்வாறெல்லாம் உதவுகிறது என்பதை "மணிமேகலைக் காப்பியம்' விளக்குகிறது. கடல் தெய்வ வழிபாடு திராவிடப் பண்பாட்டின் எச்சம் என்று நினைக்க வேண்டாம். அமெரிக்கா கண்டத்தின் தெற்குப் பகுதியில் உள்ள இலத்தீன் அமெரிக்க நாடுகளில் "பிரேஸில்' நாடும் ஒன்று. 
அந்நாட்டின் கடற்கரை நகரம் "ரியோ டி ஜெனைரோ' (RIO DE JANEIRO). அந்நகரத்தின் கடற்கரைப் பகுதியை கோபகபனா என்று (COPACABANA BEACH) அழைப்பர். அந்தக் கடற்கரைப் பகுதியில் ஆண்டு தோறும் புத்தாண்டு நாளில் "எமஞ்சா' எனும் பெயருடைய கடல் தெய்வத்திற்கு மரபு மாறாமல் சிறப்பு செய்கிறார்கள். 
ஒரு பெண் உருவபொம்மை செய்யப்படுகிறது. வெள்ளையும் நீலமும் கலந்த ஆடையை அப்பெண் பொம்மைக்கு அணிவிக்கிறார்கள். பின் அப்பெண் பொம்மையை டிரக்கில் ஏற்றி கடற்கரைக்கு கொண்டு வருகின்றனர். பிறகு அப்பொம்மையைக் கடலில் கரைக்கின்றனர். கடல் அன்னை வழிபாடு பிரேஸில் நாட்டில் வாழும் ஆப்பிரிக்க - பிரேஸில் கலப்பின மக்களால் - அதிலும் குறிப்பாக, கண்டோம்பில் மற்றும் உம்பண்டா மார்க்கத்தைப் பின்பற்றும் மக்களால் புத்தாண்டு தினத்தில் இது நிகழ்த்தப்படுகிறது. 
நம் நாட்டைப் போல் கடல் தெய்வத்தைப் பெண்ணாக உருவகித்தலும் நம் நாட்டைப் போல் தெய்வ வடிவச் சிலைகளைக் கடலில் கரைத்தலும் ஆகியவற்றை பிரேஸில் நாட்டிலும் சில "இனப் பிரிவினர்' செய்தல் நம் சிந்தனையைத் தூண்டும் செய்திகளாக உள்ளன.
- முனைவர் சீனிவாச கண்ணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com