அம்மா! - ஸ்ரீமதி சிவசங்கரன்

நமக்காக எதையும் செய்யக் கூடிய ஜீவன் இந்த உலகத்தில் அம்மா மட்டும்தான். ஆத்மார்த்தமாக நமக்காக வாழ்பவர் அம்மா. இந்த ஆத்மார்த்தத்திற்கு வயது வித்தியாசமே இல்லை.
 அம்மா! - ஸ்ரீமதி சிவசங்கரன்

பிரபலங்கள் தங்கள் தாயார் குறித்து எழுதும் தொடர்:
எச். சி.எல் நிறுவனத்தின் இணை - துணைத் தலைவர் ஸ்ரீமதி சிவசங்கரன் தனது தாயார் வசுதா கணேசன் குறித்து பகிர்ந்து கொண்டவை:
 நமக்காக எதையும் செய்யக் கூடிய ஜீவன் இந்த உலகத்தில் அம்மா மட்டும்தான். ஆத்மார்த்தமாக நமக்காக வாழ்பவர் அம்மா. இந்த ஆத்மார்த்தத்திற்கு வயது வித்தியாசமே இல்லை. எனக்கு 50 வயதை நெருங்கிவிட்டது. இப்பவும் என் அம்மாவுக்கு நான் குழந்தைதான். என் பாட்டி, அம்மாவோட அம்மா ஜெயலட்சுமிக்கு 94 வயதாகிறது. ஒரு கோடி "ஸ்ரீராமஜெயம்' எழுதியவர். அவருக்கு என் அம்மா இன்னும் குழந்தை. இதையெல்லாம் வார்த்தைகளால் கோர்த்துவிட முடியாது.
 நாம் இந்த உலகத்தை முதன்முதலில் தொடும்போதே அம்மா என்றுதான் வருகிறோம். எங்காவது நமக்கு அடிபட்டு, வலிக்கிறது என்றால் உடனே நம்மை மீறி வரும் வார்த்தை அம்மா. எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல் நம்மை நேசிப்பவர் அம்மா.
 எங்களது சொந்த ஊர் திருச்சி. அப்பா பிசினஸ் மேனாக இருந்ததால் பிசினஸ் விஷயமாக அடிக்கடி ஊருக்கு சென்றுவிடுவார். அதனால் எனது அத்தனை வளர்ச்சிகளுக்கும் முழுக்க முழுக்க எனக்கு துணையாக நின்றவர் அம்மாதான். நான் எங்கள் வீட்டிற்கு ஒரே மகள். அதனால் அம்மாவுக்கு என்னை ஆணைப் போன்று வளர்க்க வேண்டும் என்று ஆசை. அதனால் நீச்சல், போட் ரைடிங், குதிரை ஏற்றம், பாட்டு, நாட்டியம் என எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்தார். நாங்கள் இருந்தது கிராமம் என்பதால் அதெல்லாம் அங்கு கிடைக்காது. அதனால் பள்ளி கோடை விடுமுறையில் கொடைக்கானல் அழைத்துச் சென்று விடுவார். இரண்டு மாதம் அங்கேதான் இருப்போம். எனக்காகவே கொடைக்கானலில் ஒரு வீட்டை கட்டினார் அம்மா. ஊர் ஊராக போகும் அப்பாவோடு போகாமல் எனக்காகவே வாழ்ந்தார்.
 அம்மா ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர், தற்போது 72 வயதாகிறது. சீர்காழி பக்கத்தில் உள்ள "நெல்பத்து' என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். நெல் அதிகம் விளைகிற ஊர் என்பதால் அதற்கு நெல்பத்து என்று பெயர். காவிரி கரையோரம் இருந்த மிக அழகான கிராமம். தாத்தா ஜமீன்தார் என்பதால், ஜமீன் வீட்டு பெண்கள் வெளியே போய் குளிக்கமாட்டார்கள். அதனால் வீட்டினுள்ளேயே காவிரி ஆறு ஓடும். அம்மா வளர்ந்தது கூட்டுக் குடும்பத்தில். அத்தை, பெரியப்பா சித்தப்பா, அவர்களது குழந்தைகள் என 50}60 பேர் ஒரே வீட்டில் வாழ்ந்தார்கள். அவ்வளவு பெரிய வீடு.
 தாத்தா சுதந்திர போராட்ட வீரராகவும் இருந்தவர். நெல்பத்து பால சுப்பிரமணிய ஐயர் என்றால் அவரைத் தெரியாத காந்தியவாதிகளே அப்போது கிடையாது. அந்த ஊரை சுற்றியுள்ள 120 கிராமத்திற்கு தாத்தா தான் பஞ்சாயத்துத் தலைவர். பெரிய பெரிய காங்கிரஸ் தலைவர்கள் எல்லாம் தாத்தாவுடன் வந்து பேசிவிட்டு போவார்கள். கமலின் "இந்தியன்' படத்தில் வருகிற இந்தியன் தாத்தாவைப் போன்று அச்சு அசலாக இருப்பார். சட்டை அணிந்து கொள்ளமாட்டார், நாலு முழம் வேட்டி, காலில் கட்டையால் ஆன செருப்பு இப்படித்தான் இருப்பார்.
 அந்த காலத்திலேயே அம்மாவை ஒரு முற்போக்குவாதியாக வளர்த்தார் தாத்தா. ஆரம்ப கல்வி மட்டும்தான் அம்மா படித்திருந்தார். படிக்காமலேயே சிலருக்கு பொது அறிவு அபாரமாக இருக்கும். அந்த வகையைச் சேர்ந்தவர் அம்மா. அவருக்கு அனுபவ அறிவும் அதிகம். ஆனால் அவரது உலகமே குடும்பம்தான். ஒரு வட்டம் அமைத்து வாழ்ந்தவர். ஆனாலும் சந்தோஷமா அந்த வட்டத்திற்குள் இருப்பாங்க. அந்த வட்டம் என்பது, என் அப்பா அமைத்து கொடுத்ததில்லை. அவரே அமைத்துக் கொண்டது. அதுதான் எனக்கு அம்மாவிடம் ரொம்பவும் பிடித்தது. நாம் இப்போது பெண்ணியம் பற்றி எல்லாம் நிறைய பேசுகிறோம். ஆனால் நாம் ஒன்றை மறந்துவிடுகிறோம். யார் நமது வட்டத்தை அமைக்கிறார்கள் என்று. நாம அமைத்துக் கொள்கிறோமா அல்லது வேறு ஒருவரை அமைக்க விடுகிறோமா என்று.
 எனக்கு இரண்டு குழந்தைகள் ஒரு மகன், ஒரு மகள். மகன் ஸ்பெஷல் குழந்தை அந்த குறையை எனக்கு அம்மா தெரியவிட்டதேயில்லை. அதையெல்லாம் தாண்டி "நான் இன்று' இவ்வளவு பெரிய உயரத்தை தொட்டிருக்கிறேன் என்றால் அது அவர் கொடுத்த சப்போர்ட்தான்.
 எனக்கும் அம்மாவுக்கும் பெரும்பாலும் எல்லா விஷயமும் ஒத்துப்போகும். இரண்டு பேருக்கும் புதுப்புது ஊர்களை சுற்றி பார்ப்பது மிகவும் பிடிக்கும். புதுப்புது டிரஸ் வாங்குவது பிடிக்கும். நாய் வளர்ப்பது இரண்டு பேருக்கும் ரொம்ப பிடிக்கும். விதவிதமா உணவு தயாரித்து அசத்துவார். சிம்பிளான உணவாக இருந்தாலும் சுவையாக இருக்கும். ரொம்ப நன்றாக சமைப்பார். அம்மாவின் கைமணம் இதுவரை வேறு யாரிடமும் நான் பார்த்ததில்லை. ஒரு தக்காளி ரசம் வைத்தால் அதை தாளித்துக் கொட்டும் மணத்திலிருந்தே அது அம்மாதான் செய்கிறார் என்பதை கண்டுபிடித்துவிடுவேன்.
 வீட்டுக்கு யாராவது வந்துவிட்டால் அவர்களைப் பார்த்து பார்த்து கவனிப்பார். யாராவது வந்து பணம் வேண்டும் என்று கேட்டுவிட்டால், உடனே கையில் 4 ரூபாய் இருந்தாலும் சரி, 40 ரூபாய் இருந்தாலும் சரி, கையில் உள்ளதை தனக்கென்று வைத்துக் கொள்ளாமல் கொடுத்துவிடுவார். அதே சமயம் பொய் சொன்னால் பிடிக்காது. அது நானாக இருந்தாலும் சரி வேலை செய்பவர்களாக இருந்தாலும் சரி ஒரே மாதிரிதான் நடத்துவார்.
 அம்மாவுக்கு ரொம்ப கடவுள் பக்தி. ஆச்சாரம், அனுஷ்டானம் எல்லாம் நிறைய உண்டு. ஆனால் அதை எதையும் என்மீது திணித்ததில்லை. ஒரு பிராமண சமூகத்தில் உள்ளவர்கள் எல்லாரும் மடியா இருக்கணும், மாதவிடாய் காலங்களில் தனியா இருக்கணும் என்று எல்லாம் சொல்லுவார்கள். அந்தக் காலத்திலேயே அந்தமாதிரி எதையும் என் மீது திணித்ததில்லை.
 அந்தகாலத்தில் புட்பால் விளையாடுவேன். அப்போ பெண்கள் யாரும் கூட விளையாட வரமாட்டார்கள். ஆண் பிள்ளைகளோடுதான் விளையாடுவேன். பைக் ஓட்டுவேன், கார் ஓட்டுவேன், லாரி ஓட்டுவேன், பாராசூட்டில் பறந்திருக்கிறேன், பாராசூட்டிலிருந்து குதித்திருக்கிறேன், ஆழ் கடலில் நீந்தியிருக்கிறேன். "நீ பொம்பள பிள்ளை, வீட்டில்தான் இருக்கணும் இதையெல்லாம் செய்யக்கூடாது. பசங்களோட பேசக்கூடாது' என்று அம்மா எப்பவுமே சொன்னது கிடையாது.
 நான்கு தலைமுறை கண்டவர் அம்மா. நான்கு தலைமுறை உறவுகளுடனும் இன்னும் தொடர்பில் இருக்கிறார். இது கண்டு பலமுறை பிரமித்திருக்கிறேன்.
 இப்பவும் சனிக்கிழமையானால் ஊரில் இருந்து போன் செய்து தலைக்கு எண்ணெய் வைத்து குளித்தாயா, குழந்தைகளுக்கு எண்ணெய் வைத்து குளிப்பாட்டினாயா, மிளகு குழம்பு வைத்தாயா, சீரக ரசம் வைத்தாயா என்பார். இப்பவும் எனக்கு உடம்பு முடியவில்லை என்றால் உடனே கிளம்பி இங்கு வந்துவிடுவார்.
 பாதி நாள் வெளிநாடுகளில்தான் நான் இருப்பேன். எந்த வெளிநாட்டில் இருந்தாலும் சரி, தூங்க போறதுக்கு முன்னாடி போன் செய்து, கட்டிலுக்கு கீழே பார்த்தாயா, கதவு எல்லாம் சாத்திட்டாயா, ஜன்னல் ஸ்கீரின் எல்லாம் தள்ளிப்பார்த்தாயா யாராவது இருக்க போறா என்று சொல்லுவார். அந்தளவிற்கு பாதுகாப்பு உணர்வு அதிகம். அவரை பொருத்தவரை நான் இன்னும் 10 வயது குழந்தைதான்.
 அந்தக்காலத்தில் திருமணம் செய்யாமல் அமெரிக்காவிற்கு எல்லாம் அனுப்ப மாட்டார்கள். எனக்கு மேல் படிப்பு படிக்க அமெரிக்காவில் சீட் கிடைத்தது. அப்பா என்னை தனியா அனுப்ப பயந்தார். ஆனால் அம்மா சொன்னாங்க இந்தியா எப்பவும் இங்கதான் இருக்கும். திருமணம் எப்ப வேண்ணா செய்யலாம். ஆனால் அமெரிக்காவுல படிக்க இன்னொரு முறை வாய்ப்பு கிடைக்காது. அதனால அமெரிக்கா போய் படின்னு சொன்னாங்க. எனக்கு துணையாகவும் வந்தாங்க. அங்க நடந்த ஒரு சுவாரசியமான விஷயம் என்னன்னா அப்போ விநாயகர் சதுர்த்தி வந்துவிட்டது. உடனே இங்க நாம செய்வது போன்று விநாயக சதுர்த்திக்கு தேவையானது எல்லாம் வாங்கி பூஜைக்கு எல்லாம் ஏற்பாடு செய்துவிட்டு தேங்காய் உடைத்து கொண்டு வர வாசலுக்குச் சென்றார்கள். ஒரு மணி நேரம் ஆளைக் காணோம். என்னாச்சு என்று பார்க்க சென்றேன். அம்மாவைச் சுற்றி பெரிய கூட்டம். சுமார் 100 லோக்கல் அமெரிக்கன் மாணவர்கள். அம்மா தேங்காயை எப்படி சரியான வட்டத்தில் உடைத்தார் என்ற ஆச்சரியம் அவர்களுக்கு. மேலும், தேங்காய் எதற்கு? வெற்றிலை பாக்கு எதற்கு? என்று சுற்றி நின்றவர்கள் கேட்டுக் கொண்டே உள்ளே வந்தார்கள். அதிலிருந்து அவர்கள் எல்லாம் அம்மாவுக்கு ரசிகர்களாகி விட்டார்கள். அம்மா மணக்க மணக்க தமிழ்நாட்டு சமையல் செய்து அவர்களுக்கு கொடுப்பார்கள். அதனால் வீட்டில் எப்போதும் நண்பர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். நான் கல்லூரியில் இருப்பேன். அவர்கள் என் வீட்டில் இருப்பார்கள். கல்லூரி படிப்பு முடிந்ததும் என் நண்பர்கள் எல்லாரும் ஒவ்வொரு வாரம் அம்மாவை அவர்களோடு அழைத்துச் சென்று வைத்துக் கொண்டனர். இப்படியே அம்மா ஆறுமாதம் பல வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளார். என்னைவிட அவர்தான் வெளிநாடுகளுக்கு அதிகம் சென்றவர்.
 எங்களோட பெரிய கூட்டுக் குடும்பத்திலிருந்து திருமணத்திற்கு முன்பு அமெரிக்கா சென்று படித்துவிட்டு வந்தவள் நான் மட்டும் தான். நான் தான் எங்கள் குடும்பத்தில் முதல் பெண் இன்ஜினீயர். இந்த மாதிரி துணிவு கிராமத்து பெண்களிடம் மட்டும்தான் பார்க்கலாம். சிட்டி பெண்களிடம் இது வரவேவராது. இப்போது, அம்மாவுக்கு என்னை விட என் கணவர்மீதுதான் பாசம் அதிகம். என்னை மருமகளாகவும், அவரைத்தான் மகனாகவும் பார்க்கிறார். இது எல்லா அம்மாவிடமும் வராது.
 என்னிடம் யாராவது உங்க அம்மா எப்படி என்று கேட்டால், உடனே நான் சொல்லுவேன், என் அம்மா "மசாலா அம்மா' என்று. காரசாரம், கலர், வாசம், புளி, உப்பு என மசாலா அனைத்தும் சரிவிகிதத்தில் இருந்தால்தான் அந்த சமையல் ருசிக்கும். அதுபோன்று என் அம்மா எல்லா வகையிலும் சிறந்த குணம் உள்ள மசாலா அம்மா.
 - ஸ்ரீதேவி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com