பனி போல மறைந்த சோதனைகள்!

கொட்டாஞ் சம்பா, கருங்குறுவை, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, தூய மல்லி, இலுப்பம்பூ சம்பா, என்று நாம் கேள்விப்பட்டிராத நூற்றுக்கும்
பனி போல மறைந்த சோதனைகள்!

கொட்டாஞ் சம்பா, கருங்குறுவை, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, தூய மல்லி, இலுப்பம்பூ சம்பா, என்று நாம் கேள்விப்பட்டிராத நூற்றுக்கும் மேலான பாரம்பரிய அரிசி வகைகள் "மண்வாசனை' மேனகாவுக்கு அத்துப்படி. சென்னை, கோடம்பாக்கத்தில் "மண்வாசனை' இயற்கை விலை பொருள் அங்காடி ஒன்றை நிர்வகித்து வரும் மேனகா, பாரம்பரிய அரிசிகளைப் பொடியாக்கி அத்துடன் கருப்பு உளுந்து, கம்பு, கேழ்வரகு போன்றவற்றை சேர்த்து "மதிப்பு கூட்டி' (ஸ்ஹப்ன்ங் ஹக்க்ங்க்) விற்று வருகிறார். நோயில்லாத வாழ்க்கை வாழ இந்த வகை உணவுப் பொருள்கள் உதவுகின்றன என்பது ஒரு பக்கம் இருந்தாலும், பாரம்பரிய அரிசி வகைகள் மண்ணிலிருந்து மறைந்து விடும் அபாயத்திலிருந்தும் காக்க இந்த இயற்கை அங்காடிகள் உதவுகின்றன. குடும்பத் தலைவியாக இருந்து கொண்டு வெற்றிகரமான தொழில் முனைவராகவும் இருக்கும் மேனகா ஒரு முன்னாள் அரசு ஊழியர். மேனகா தொழில் முனைவோரானது குறித்து கூறுகிறார்:
"மண்வாசனை' இயற்கை அங்காடி தொடங்க பிள்ளையார் சுழி போட்டது என் கணவர் திலகராஜன். எம்பிஏ பட்டதாரியான அவர் கணினி மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். எங்களது காதல் திருமணத்தால் இருவீட்டிலும் எதிர்ப்பு இருந்தது. மகன் பிறந்தான். மகனுக்கு ரசாயன உரங்கள், பூச்சி கொல்லி மருந்து அடிக்கப்படாத உணவு வகைகளைக் கொடுக்க வேண்டும் என்று அவரது தேடல் துவங்கியது. அந்த தேடலின் தொடர்ச்சியாக இயற்கை வேளாண் விஞ்ஞானியான அறிமுகம் கிடைத்தது. அவரது நட்பின் தாக்கம் திடீரென்று கணவர் "வேலையை ராஜிநாமா செய்து விட்டேன்..' என்று சொன்னார். நான் அதிர்ச்சியடைந்தேன்.
பாரம்பரிய அரிசி வகைகள் எங்கே விளைகின்றன என்று அறிந்து கொள்ள கணவர் சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார். அவரது தேடல் தமிழகத்தை தாண்டி ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்காளம் மாநிலங்கள் வரை சென்று தகவல்களைத் திரட்டினார். அதில் ஏற்பட்ட தன்னம்பிக்கையின் விளைவாக சென்னையில் பரீட்சார்த்தமாக பாரம்பரிய அரிசிவகைகளை விற்கும் கடையை சென்னை தியாகராய நகரில் தொடங்கினார். "கடை போட்டால் போதுமா.. வியாபாரம் நடந்தால்தானே வருமானம் வரும்... ஃபாஸ்ட் ஃ புட் என்று அனைவரும் ஓடும் போது, பாரம்பரிய அரிசிகளின் பக்கம் யார் வருவார்கள். போட்ட முதல் திரும்பக் கிடைக்குமா... கடை போட்டவர்கள் எல்லாம் வியாபாரத்தில் வெற்றி பெறுவதில்லையே.. நல்ல வேலையை விட்டுவிட்டு விஷப் பரிட்சையில் இப்படி இறங்கணுமா' என்றேன்.
நல்ல வேலை... எனக்கு வேலை இருந்ததால் குடும்பச் செலவுகளுக்கு பிரச்னை ஏற்படவில்லை. கணவர் சேகரித்து வரும் அரிசிவகைகளைச் சமைக்கச் சொல்லி அதன் ருசியைப் பரிசோதித்துப் பார்ப்பார். அவர் சாப்பிடும் போது நான் எப்படி சாப்பிடாமல் இருப்பது? பாரம்பரிய அரிசிவகைகளை உண்ணத் தொடங்கியதும் எனக்குள் ஒரு வித்தியாசம் தோன்றியது. அதுவரை எனக்கிருந்த தைராய்டுக்கான மருந்து மாத்திரைகளைத் தள்ளி வைத்து விட்டு, பாரம்பரிய அரிசிவகைகளைத் தொடர்ந்து உணவாக எடுத்துக் கொள்ள ஆரம்பித்தேன். சில மாதங்களில் தைராய்டு இருப்பதற்கான அறிகுறியே இல்லாமல் போய்விட்டது. எனக்கு ஆச்சரியம். இந்த அற்புதத்தை செய்திருப்பது பாரம்பரிய அரிசிவகைகள்தான் என்று உள்மனம் அழுத்தமாகச் சொல்லியது.
"பாலிஷ் செய்யப்படும் போது அரிசியில் இருக்கும் நார் பொருள் அகற்றப்படுகின்றன. வெறும் மாவுப் பொருளை அரிசியாக சாப்பிடுகிறோம். பாரம்பரிய அரிசிவகைகள் தீட்டப்படாததால் அதில் நார் பொருள் இருப்பதுடன், அதிக விட்டமின்களும் கூடிக் கிடக்கின்றன. ரசாயன உரங்கள், ரசாயன பூச்சி கொல்லி மருந்துகளின் தாக்கமும் பாரம்பரிய அரிசிகளில் இல்லை. இதெல்லாம் நமக்குத் தெரிந்த விஷயம்தான். ஆனால் கடைப்பிடிப்பதில் கவனம் செலுத்துவதில்லை.
"பாரம்பரிய அரிசிவகைகளில் சில பிரச்னைகள் இல்லாமல் இல்லை. இந்த வகை அரிசிகளை நீண்ட நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும். வேகவும் அதிக நேரம் பிடிக்கும். சில வகை பாரம்பரிய அரிசிகள், குழம்புடன் ஒட்டாது. அதனால் சுவையில் வேறுபாடு இருக்கும். இதனால் கடையில் விற்பனை மந்தமாக இருந்தது. பாரம்பரிய அரிசிவகைகளை எளிதாக விரைவாக சமைக்க என்ன செய்யலாம் என்று யோசித்தோம். இந்த அரிசிகளை அரைத்து மாவாக்கினோம். அத்துடன், தோல் எடுக்கப்படாத உளுந்து, கேழ்வரகு, கம்பு போன்றவற்றை சேர்த்தோம். இந்தக் "கூட்டு மாவில் அதிக சத்து உள்ளது. இந்த மாவைக் கொண்டு இட்லி, தோசை, பனியாரம், இடியாப்பம், சத்துமாவு, கஞ்சி உண்டாக்கலாம் . மாவை வாங்கி பயன்படுத்தியவர்கள் திருப்தி அடைய... வியாபாரம் கொஞ்சம் கொஞ்சமாக விறுவிறுப்பு அடைந்தது. கணவரின் கனவும் நனவானது. மக்கள் ஆரோக்கியத்தைப் பேணுவதில் எங்களுக்கும் ஒரு சிறு பங்களிப்பு உண்டு என்பதில் திருப்தியும் உண்டானது.
"வியாபாரம் நன்றாக நடந்ததால் கணவருக்குத் துணையாக நானும் களம் இறங்கினேன். அரசு வேலையை ராஜிநாமா செய்தேன். வியாபாரத்தை விரிவு செய்தோம். எனது குடும்பமும் விரிவானது. மகள் பிறந்தாள். இந்நிலையில், திடீரென்று சென்ற ஜூன் மாதம் வாகன விபத்து ஒன்றில் சிக்கி கணவர் இறந்தார். தனிமரமாக நின்றேன். எல்லா திசைகளும் இருண்டு பயமுறுத்தின. குழந்தைகளைக் கவனிக்க வேண்டும். வியாபாரத்தைக் கவனிக்க வேண்டும். தனியாக பொறுப்புகளை சுமக்க முடியுமா... என்று பரிதவித்தேன். கணவரின் கனவை தொடர்ந்தால்தான் அவரது ஆன்மா சாந்தியடையும். இந்த சூழ்நிலையில், சோதனைகள்.. சவால்கள் என்னை நோக்கி எழுந்துள்ளன. சமாளித்தே ஆக வேண்டும். இல்லையெனில் வீழ்ந்து விடுவோம்.. என்று மனம் எச்சரித்தது. மன உறுதியுடன் குடும்பப் பொறுப்பையும் வியாபாரத்தையும் எனது தோளில் தாங்கினேன். கவனம் சிதறாமல் முன்னோக்கி நடந்தேன். சோதனைகள், சவால்கள் பனி போல மறைந்தன'' என்கிறார் நம்பிக்கை, உழைப்புக்கு எடுத்துக் காட்டாக நிற்கும் மேனகா.
- பிஸ்மி பரிணாமன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com