பெண் சாதனையாளர்களுக்கு மகளிர்மணி விருது! 

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தினமணி மகளிர்மணி சார்பில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறந்த பெண் சாதனையாளர்களுக்கு விருது வழங்க முடிவு செய்து,
பெண் சாதனையாளர்களுக்கு மகளிர்மணி விருது! 

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தினமணி மகளிர்மணி சார்பில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறந்த பெண் சாதனையாளர்களுக்கு விருது வழங்க முடிவு செய்து, இந்த மாவட்டங்களில் வாசகர்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அறிவிப்புக்கிணங்க ஏராளமான சாதனையாளர் பற்றிய குறிப்புகள் குவிந்த நிலையில், அதில் மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் மூன்றுபேரை நடுவர் குழு தேர்வு செய்து. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயியான ஆ. மனோன்மணி, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வன விழிப்புணர்வு கல்வியாளர் வெ.ஜெயபாரதி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் தொழில் முனைவர் ச. உமா கண்ணன் ஆகியோருக்கு மார்ச் 8- ஆம் தேதி மகளிர் தினத்தன்று, தினமணி மகளிர்மணி மற்றும் திருநெல்வேலி டாண் நீட் - ஜே.இ.இ பள்ளி இணைந்து சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இவ்விருதினை கர்நாடக இசைக் கலைஞரும், திரைப்பட பின்னணிப் பாடகியுமான எஸ். மஹதி வழங்கி சிறப்பித்தார். விழாவிலிருந்து சில துளிகள்...
 தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன்
 "மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா' என்ற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் மகளிர்மணி பெண் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழாவினை பெண்களுக்காக குரல் கொடுத்த பாரதி பிறந்த மண்ணான திருநெல்வேலியில் தொடங்கியுள்ள இந்த முயற்சி மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்தகட்டமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பெண் சாதனையாளர்களை ஆண்டு தோறும் அடையாளம் கண்டு கெüரவிக்கும் பணி தொடரும். வரும் காலங்களில் இந்தியாவில் தலைசிறந்த பெண் சாதனையாளர்கள் தமிழகத்தில் இருந்து உருவாக வேண்டும் என்ற கனவு நனவாக வேண்டும்.
 எஸ்.மஹதி, கர்நாடக இசைக் கலைஞர்
 பெண்களின் முடிவு எப்போதுமே சரியாக இருக்கும் என்பதற்கு உதாரணமாக விருது பெற்ற மூவரும் திகழ்ந்துள்ளது பெருமைப்படக்கூடிய விஷயமாகும். எத்தனை சோதனைகள் வந்தாலும் அவற்றை கண்டு ஒதுங்கிவிடாமல் சாதிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விருது பெற்ற மூவரின் சாதனைகளும் போற்றுதலுக்குரிய தாகும். இன்றைய சமூகத்தில் பெண்களுக்கு சம உரிமை அளிக்க தயாராக இருந்தாலும் அவற்றை ஏற்க பெண்களுக்கே தயக்கமாக இருந்து வரும் நிலை உள்ளது. அந்த தயக்க நிலையை கைவிட்டு சவால்களை எதிர்நோக்கும் மன உறுதியுடன் பெண்கள் வெற்றிநடை போட வேண்டும். மகளிர் தினத்தில் மட்டுமல்ல, வாழ்நாள் முழுவதும் பெண்கள் கொண்டாடப்பட வேண்டும் .
 விருது பெற்ற ஆ. மனோன்மணி
 திருநெல்வேலி மாவட்டம், தென்பத்து கிராமத்தைச் சேர்ந்த நான் 1988 - ஆம் ஆண்டு முதல் மணி மாதிரி பரிசோதனை, விதை நேர்த்தி, திருந்திய நெல் சாகுபடி என தொடர்ச்சியாக தொழில்நுட்பங்களை கையில் எடுத்தேன். இதன் மூலம் சாதாரணமாக சாகுபடி செய்தவர்களுக்கு ஏக்கருக்கு ஒன்றரை டன் நெல் கிடைத்தது. ஆனால், எனக்கு 4 டன் நெல் கிடைத்தது. இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் 2004 -ஆம் ஆண்டு "வேளாண்மைச் செம்மல்' விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து கூட்டுப் பண்ணையம் என்ற புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறேன். விவசாயிகளின் உற்பத்தி பொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய நவீன அரிசி ஆலை அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தை நோக்கி பயணித்து வருகிறேன். தொழில்நுட்பத்தின் துணை கொண்டு வேளாண் துறையில் சாதிக்க முடியும். எங்கோ ஒரு பகுதியில் இருந்த என்னையும் கண்டறிந்து விருது வழங்கிய தினமணிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருது எனக்கு மட்டுமல்ல, என்னைப் போன்று சாதனை படைக்க விரும்புவோருக்கும் ஊக்கத்தை அளிக்கும்.
 விருது பெற்ற வெ. ஜெயபாரதி
 சிறு வயதில் இருந்தே இயற்கையை விரும்பி நேசித்துள்ளேன். பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி மூலம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட கடையம் வனப்பகுதியில் வன மூலிகைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றேன். 39 ஆண்டுகள் பேராசிரியையாக பணியாற்றிய நிலையில் தற்போது பணி ஓய்வுக்குப் பிறகு வனங்கள் குறித்து மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். எனது முயற்சிக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் கிடைக்கப்பெற்ற தினமணி மகளிர்மணி சாதனையாளர் விருதை பெரும் கெüரவமாக கருதுகிறேன்.
 விருது பெற்ற ச. உமா கண்ணன்
 நாகர்கோவில் இருளப்பபுரத்தில் சிவா பேக்கேஜிங் இண்டஸ்ட்ரீஸ் என்ற அட்டைப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகிறேன். எனது கணவரால் மணிக்கட்டிப் பொட்டல் பகுதியில் கடந்த 1999 - ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தொழிற்சாலையை 2006 - ஆம் ஆண்டு எனது பொறுப்பில் எடுத்தேன். லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வந்த தொழிற்சாலையை பல்வேறு தடைகளுக்குப் பிறகு அனைத்து கடன்களையும் அடைத்து தற்போது லாபத்தில் இயங்கும் அளவுக்கு மாற்றி உள்ளேன். பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்.
 2009 - ஆம் ஆண்டு தொழிற்சாலை இயந்திரத்தில் சிக்கி வலது கையில் மூன்று விரல்கள் நசுங்கியது. இருப்பினும், பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் கைவிரல்களை சரி செய்து பணியாற்றி வருகிறேன். போட்டி நிறைந்த உலகில் பெண்கள் நினைத்தால் வெற்றிகரமாக தொழில் செய்ய முடியும். என்னை விருதுக்கு தேர்வு செய்து ஊக்கமளித்த தினமணிக்கு நன்றிகள்.
 - தி. இன்பராஜ்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com