அம்மா! - டாக்டர் பிரியா ராமசந்திரன்

குழந்தைகள் நல சிகிச்சை நிபுணரான பிரியா ராமசந்திரன், புகழ் பெற்ற பிளாஸ்டிக் சர்ஜனும் தனது தாயாருமான டாக்டர் மாதங்கி ராமகிருஷ்ணனைப் பற்றி கூறுகிறார்
 அம்மா! - டாக்டர் பிரியா ராமசந்திரன்

பிரபலங்கள் தங்கள் தாயார் குறித்து எழுதும் தொடர்:
குழந்தைகள் நல சிகிச்சை நிபுணரான பிரியா ராமசந்திரன், புகழ் பெற்ற பிளாஸ்டிக் சர்ஜனும் தனது தாயாருமான டாக்டர் மாதங்கி ராமகிருஷ்ணனைப் பற்றி கூறுகிறார்:
 என் தாயார், எனது தாத்தா பாட்டிக்கு ஒரே குழந்தை. அதே போலத்தான் நானும். என் பெற்றோருக்கு ஒரே குழந்தை. அந்தக் காலத்திலே எனது தாயாரின் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். கஷ்டப்பட்டு வளர்ந்த குடும்பம். பெண் பிள்ளையாக இருந்தாலும் கஷ்டப்பட்டு அம்மாவை அவர்கள் படிக்க வைத்தார்கள். 1952 -53 ஆம் வருடம் தனது மருத்துவப் படிப்பிற்காக அம்மா அமெரிக்கா சென்றார். பின்னர் இங்கிலாந்து சென்று படித்தார். ஒரு பெண்ணை இவ்வளவு தைரியமாக அந்தக் காலத்திலே தாத்தாவின் குடும்பம் அனுப்பியிருக்கிறது என்றால் என் தாயாரை அவர்கள் ஆண்பிள்ளை போல் வளர்த்தார்கள் என்று தான் கூறவேண்டும். அதே போன்றுதான் என்னையும் எனது பெற்றோர் வளர்த்தார்கள். நான் எனது தந்தையை வெளிநாட்டில் இருந்தபோது பறிகொடுத்தேன். உடனே சென்னை வந்தேன். மகனாகவே வளர்த்ததால், எனது தந்தையின் ஈமச் சடங்குகளை நான் தான் செய்தேன் என்று சொன்னால் இன்று யாரும் நம்ப மாட்டார்கள். நுங்கம்பாக்கம் மயானத்தில் எனது தந்தையின் உடலுக்கு நான் தான் கடைசி மரியாதை செய்து தீ வைத்தேன்.
 அதற்கு எனது தாயார் சொன்ன காரணம் என்ன தெரியுமா? "உன்னை தன் மகளாக மட்டும் அல்ல; மகனாகவும் பார்த்தார் உன் தந்தை. அதனால் நீயே எல்லாவற்றையும் செய்'. என்றார்.
 அதேபோன்று எனது திருமணத்தின்போது எனது தந்தையார் இல்லை. எங்களது வழக்கத்தின்படி தந்தையின் மடியில் என்னை உட்கார வைத்து எனக்கு என் கணவர் தாலி கட்ட வேண்டும். அப்படி தந்தை இல்லாத பட்சத்தில் யாராவது ஒரு நெருங்கிய உறவுக்காரத் தம்பதியை மணமேடையில் உட்காரவைத்து அவர்கள் மடியில் நான் உட்கார தாலியை கட்டிக் கொள்ளவேண்டும்.
 எனக்கு அதில் விருப்பம் இல்லை. அதனால் எனது தாயாரின் மடியில் நான் உட்கார என் கணவர் எனக்கு தாலியை கட்டினார்.
 என்னதான் வெளிநாடு சென்றாலும் எனது தாயார் என்றும் புடவைதான் உடுத்துவார். வெளிநாடுகளில் படித்தபோதும் அவர் இதை மாற்றிக் கொள்ளவில்லை. குளிர் என்று கூறினாலும் "புடவைதான் எனக்கு சுகம்' என்று கூறுவார். அதேபோன்று அரசாங்க வேலையை அவர் விரும்பி செய்தார். காரணம் கேட்டதற்கு "அங்குதான் ஏழைகள் பலருக்கு நம்மால் உதவமுடியும்' என்பார். நான் சிறுவயதாக இருக்கும்போது உடல் முழுவதும் தீக்காயம் பட்ட பலரைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் குணமான பிறகும் பலர் எங்கள் வீட்டிலேயே இருப்பார்கள். "ஏன் அவர்கள் வீட்டிற்குப் போகவில்லை?' என்று நான் ஒருமுறை கேட்டபோது என் தாயார் கூறியது என் காதுகளில் இன்றும் ஒலித்து கொண்டிருக்கிறது.'அவர்கள் வீட்டில் உள்ள ஸ்டவ் வெடித்து இங்கு வரவில்லை. மாமியார் மருமகள் சண்டையினால் இது நிகழ்ந்திருக்கிறது. அவர்களுக்கு ஒரு விடிவு காலம் வரும் வரை இது தொடரும்' என்று கூறினார். இன்று கூட இந்தப் போக்கு ஆங்காங்கே ஒன்றிரண்டு நடக்கத்தான் செய்கிறது. எங்கள் வீட்டில் வைத்து அவர்களைப் பாதுகாக்கும் அளவிற்கு எனது அம்மா மிகுந்த தயாள குணமுடையவர்.
 இன்று நான் பல்வேறு புத்தகங்களையும், கம்பனையும், தமிழ் இலக்கியங்களையும் படிக்கிறேன். ஆனால் எனது தாயார் தனது துறையைச் சார்ந்த புத்தகங்களை மட்டுமே இன்றும் படிக்கிறார். யார் வீட்டிற்கு வந்தாலும் அவர்கள் என் தாயாரை புத்தகமும் கையுமாகத்தான் பார்ப்பார்கள். "கஷ்ட காலத்திலிருந்து என்னை மீட்டது இந்த படிப்புதான்' என்று கூறுவார்கள். அவர் "பத்மஸ்ரீ' விருது வாங்கி விட்டார். "பி.சி.ராய்' விருதும், பல்வேறு விருதுகளையும் பெற்ற பின்னரும் இன்றும் புத்தகம் படிப்பதை அவர் நிறுத்துவதாக இல்லை. அவரைப் பொருத்தவரை படிப்பு அவரது உயிர் என்றே நான் நினைக்கிறேன்.
 எங்கள் வீட்டை பொருத்தவரையில் ஆண்- பெண் என்ற பாகுபாடு கிடையாது. ஏழை பணக்காரன் என்ற பாகுபாடும் கிடையாது. எல்லோரும் ஒன்று. அதேபோன்று நான் ஒரே குழந்தையென்ற செல்லமும் கிடையாது. அவர் எப்படி கஷ்டப்பட்டு படித்து முன்னேறினாரோ அதே போல் நானும் படித்து முன்னேறவேண்டும் என்று அவர் விரும்பியதால்தான் நான் இன்று அதே மருத்துவத் துறையில் இருக்கிறேன். எனக்கு வேறு சாய்ஸ் அம்மா கொடுக்கவில்லை. "நீயும் மக்களுக்கு சேவை செய்யவேண்டும். அதனால் இதே மருத்துவத் துறையில் படி' என்று கூறினார். அவரைப் போன்றே நானும் வெளிநாடு சென்று படித்தேன்.
 எங்கள் உலகம் சிறிய உலகம். நான், என் கணவர், அம்மா. இப்பொழுது எனது இரு மகன்கள். அவர்களுக்கும் அம்மா எனக்கு என்ன சொன்னாரோ அதையே சொல்லிக் கொடுத்து வளர்க்கிறார்கள். என் மகன்கள் இருவரும் தங்களது அம்மம்மாவை எந்த இடத்திலும் வீட்டுக் கொடுக்க மாட்டார்கள். அதேபோன்று எனது தாயாருக்கும் தன் பேரன்கள் மேல் பாசம் அதிகம்.
 எனது தாயார் தனது பெற்றோரை கடைசி வரை பார்த்துக் கொண்டார்கள். இன்று எனது ஒரே விருப்பம் எனது அம்மாவையும் அவர்கள் விரும்பும் எல்லாவற்றையும் கொடுத்தது சந்தோசமாக பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதுதான். அது இன்று வரை நடக்கிறது; நாளையும் தொடரும். நான் வெளிநாட்டில் பத்து ஆண்டுகள் வாழ்ந்தாலும் எனக்கு அங்கு நிரந்தரமாக தங்க வேண்டும் என்ற விருப்பம் என்றுமே வந்ததில்லை. ஏன் திரும்பவும் சென்னை வந்தேன் தெரியுமா? என் தாயாருடன், சந்தோஷமாக வாழவேண்டும் என்பதால் தான்.
 தனி ஒரு மனுஷியாக நின்று என்னை ஆளாக்கி இன்று நான் ஒரு புகழ் பெற்ற மருத்துவராக இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் எனது தாயார்தான். இன்றுள்ள குழந்தைகளுக்கு படிப்பின் முக்கியத்துவம் தெரியாமல் வளர்கிறார்கள். ஒன்று மட்டும் நிச்சயம். நாம் எவ்வளவு கடுமையாக உழைத்து படிக்கிறோமோ அந்த அளவு சந்தோசம் நம்மை தேடி ஓடி வருகிறது என்பது நிச்சயம். இதை நான் என் வாழ்க்கையில் பார்த்து உணர்ந்து கொண்டேன். அதனால் தான் என்னிடம் வரும் இளம் மருத்துவர்களுக்கும் இதையே நான் சொல்கிறேன். என் தாயார் அன்று என்னிடமும் தன்னைச் சுற்றியிருப்பவர்களிடமும் சொன்னதையே இன்று என்னை சுற்றி இருப்பவர்களுக்கும் நான் சொல்கிறேன். "படியுங்கள். படிப்பு உங்களை பல மடங்கு உயர்த்தும். இன்று படித்தால் நாளை அதன் பலன் நீங்கள் கேட்காமலேயே உங்களை வந்தடையும்'. இது என் தாயாரின் தாரக மந்திரம். எனக்கும் தான்.
 - சலன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com