இளமையில் வெல்! மேகா-மாளபிகா ஸ்வைன்

அந்தக் குழந்தை துறுதுறுவென்று ஓடிக்கொண்டே இருந்தாள். அவளுக்கு 5 வயதுதான் இருக்கும்.
இளமையில் வெல்! மேகா-மாளபிகா ஸ்வைன்

(MEGHALI MALABIKA SWAIN)
 அந்தக் குழந்தை துறுதுறுவென்று ஓடிக்கொண்டே இருந்தாள். அவளுக்கு 5 வயதுதான் இருக்கும். அவளை ஓரிடத்தில் அமர வைக்க அவள் பெற்றோர் மிகவும் சிரமப்பட்டனர். தற்செயலாக அவள் தந்தையைச் சந்திக்க வந்த உறவினர் ஒருவர் தன் கையில் உலக வரைபடப் புத்தகம் ஒன்றைத் தன் மகனுக்காக வாங்கி வந்திருந்தார். அது ஒரிய மொழியில் அச்சடிக்கப்பட்டிருந்தது.

அவர் அதை அக் குழந்தையின் கையில் கொடுத்து "மேகாலி! இதோ பார் நீல நிறத்தில் தெரியும் இதன் பெயர் கடல்! பழுப்பு நிறத்தில் தெரியும் இதன் பெயர் மலை! பச்சை நிறத்தில் தெரியும் இதன் பெயர் சமவெளி!

மலை மேல் இருந்த ஒரு பொருளை மந்திரவாதி ஒருத்தன் கடலில் ஒளித்து வைத்துவிட்டான்! சமவெளியில் வாழ்ந்த மனிதன் ஒருவன் அதைத் தேடிப் பயணம் போனான்!' என்று கற்பனைக் கதை ஒன்றைக் கூறினார்.

இந்தக் கதையிலும், வண்ணங்கள் நிரம்பிய உலக வரைபடத்தின் அழகிலும் அவள் ஆழ்ந்து போனாள். அன்றிலிருந்து அப்புத்தகத்தை அவள் தன்னுடனேயே வைத்துக் கொண்டாள். தினமும் அதன் பக்கங்களைப் புரட்டிப் பார்ப்பதும் தான் கேட்ட கதை பற்றி கேள்விகள் கேட்பதும்தான் அவள் வேலை!

வருடங்கள் கடந்தன. ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில் வசிக்கும் அவர், இப்பொழுது 5-ஆம் வகுப்பில் படிக்கிறாள். இன்னமும் உலக வரைபடப் புத்தகத்தின் மேல் அவளுக்கிருக்கும் ஈர்ப்பு குறையவே இல்லை. உலக வரைபடப் புத்தகத்தை ஆழ்ந்து கவனித்து வந்ததன் விளைவாக அவள் புவியியல் பற்றிய அனைத்து விவரங்களையும் எடுத்துக்கூறும் திறன் பெற்றாள்.

ஒருசமயம் அவள் பள்ளியில் மாணவிகள் தங்கள் தனித்திறனை வெளிப்படுத்தும் போட்டிகள் நடைபெற்றன. மாணவிகளுள் சிலர் நடனமாடினர், பாடினர், கவிதைகள் வாசித்தனர், ஓவியம் வரைந்தனர். மேகாலி என்ன செய்தாள் தெரியுமா? உலக வரைபடத்தில் உள்ள 196 நாடுகளின் பெயர்களையும் அவற்றின் தலைநகரங்களையும் கூறினாள்.

ஒரிசா கல்லூரி ஒன்றின் புவியியல் துறை பேராசிரியர் ஒருவர் நடுவராக அவ்விழாவிற்கு வந்திருந்தார். அவர் மேகாலியின் திறமையை மேலும் சோதிக்க எண்ணினார். அதன்படி அவர் ஆறுகளின் பெயரைக் கூற, அந்த ஆறு ஓடும் நாட்டின் பெயரை மேகாலி கூறினாள்.

இப்படியாக ஒரு நாட்டில் ஓடும் ஆறுகள், பீடபூமிகள், பள்ளத்தாக்குகள், பாலைவனங்கள், கடல்கள் என அத்தனை புவியியற் கூறுகளையும் அவள் தவறின்றிக் கூறினாள். இவளது திறமையால் கவரப்பட்ட அந்தப் பேராசிரியர் இவளுக்கே முதற் பரிசை வழங்கினார். மேலும் "இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' என்ற சாதனைப் புத்தகத்திற்கு இவளது பெயரைப் பரிந்துரை செய்தார்.

"இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் பிஸ்வதீப் ராய் சௌத்திரி முன்னிலையில் மேகாலி ஒரு நிமிடத்திற்குள் அதிக எண்ணிக்கையிலான ஆறுகளின் பெயர்களைக் கூறி பாராட்டுப் பெற்றார். இவர் ஒரு நிமிடத்திற்குள் 165 ஆறுகளின் பெயர்களைக் கூறினார். இது ஓர் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு இவர் பெயர் சாதனைப் புத்தகத்தில் பதிக்கப்பட்டது.

"ஜீ செய்திகள் (Zee News) என்னும் தொலைக்காட்சி நிறுவனம் இவரது அபரிமிதமான புவியியல் அறிவைக் கருத்திற்கொண்டு "இந்தியாவின் கூகுள் பெண்' (Google girl of India)என்ற விருதை வழங்கிச் சிறப்பித்தது.

சிறு வயது முதலே வரைபடப் புத்தகத்தை ஆழ்ந்து கவனித்து வந்ததன் விளைவாகத் தன்னால் இந்த சாதனையைப் படைக்க முடிந்தது என்று கூறுகிறார் இந்தப் புவியரசி!

மலைகள், பீடபூமிகள், தீபகற்பங்கள், தீவுகள், பாலைவனங்கள், பெருங்கடல்கள், விரிகுடாக்கள், வளைகுடாக்கள், நீர்ச்சந்திகள், ஆறுகள், கால்வாய்கள், கழிமுகத்துவாரங்கள் என அனைத்துப் புவியியற் கூறுகளைப் பற்றியும் அறிந்து வைத்திருக்கும் இவரைப் "புவியரசி' என்று அழைப்பது பொருத்தம்தானே?
 
 என்.லக்ஷ்மி பாலசுப்ரமணியன்,
 கடுவெளி.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com