ஹலோ பாட்டியம்மா...!

பாட்டியம்மாவின் பேரன் பேத்தி படிக்கும் பள்ளிக்கூடத்தில் ஒருநாள்: "அந்தக் காலத்தில், எங்கள் பாட்டி பள்ளியில் படித்தபோது,
ஹலோ பாட்டியம்மா...!

பாட்டியம்மாவின் பேரன் பேத்தி படிக்கும் பள்ளிக்கூடத்தில் ஒருநாள்: "அந்தக் காலத்தில், எங்கள் பாட்டி பள்ளியில் படித்தபோது, "நீதி போதனை' என்று ஒரு வகுப்பு இருந்தது. அந்த வகுப்பை நடத்துவதற்கு, பள்ளி ஆசிரியர் அல்லாத வேறு ஒரு சிறப்பாசிரியர் வெளியிலிருந்து வருவாராம். அவர் குழந்தைகளுக்கு நல்ல நல்ல நீதிக் கதைகளையும், அறிஞர்கள் வாழ்க்கையில் நடந்த மறக்கமுடியாத சாதனை நிகழ்ச்சிகள் பற்றியும் கூறுவார். நீதி போதனை வகுப்பு என்றாலே மிக மிக மகிழ்ச்சியாக இருக்குமாம்; வாழ்க்கையில் நாமும் எதையாவது சாதிக்கவேண்டும் என்ற உணர்வு மனதில் ஆழமாகப் பதியும் என்று எங்கள் பாட்டி கூறுவார்.

ஏன் சார்..? நமது பள்ளியிலும் நீதி போதனை வகுப்பை ஏன் தொடங்கக்கூடாது?'' என்று இந்த அருமையான கேள்வியை, சிறுமி ஹரிணி சில நாள்கள் முன்பு நமது பள்ளியின் தலைமையாசிரியரிடம் கேட்டாள். ஹரிணியின் கேள்வியை ஒரு வேண்டுகோளாகவே ஏற்று நிறைவேற்றி விட்டார் நம் தலைமையாசிரியர்.

இதோ...! இன்றுமுதல் நமது பள்ளியில் நீதி போதனை வகுப்பு தொடங்குகிறது'' என்று தமிழ் ஆசிரியர் சாமிநாதன் அறிவிப்பு செய்ததும் மாணவ-மாணவிகள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அடுத்ததாக, இந்த வகுப்பை ஹரிணி, மாணிக்கம் ஆகியோரின் பாட்டி பானுமதியம்மாள் அவர்களே முதல் சிறப்பாசிரியராக இருந்து நடத்திவைப்பார் என்று ஆசிரியர் அறிவித்ததும் மீண்டும் எழுந்த கைதட்டல் ஓசை வெகுநேரம் கழித்தே அடங்கியது..!

பாட்டி: "குழந்தைகள் மீது பெற்றோர்கள் எப்போதுமே ஒரு குற்றச்சாட்டை கூறுவார்கள். எம் புள்ள எப்போ பாத்தாலும் டிவியே கதி; கார்ட்டூன் சேனலே விதின்னு கிடக்கான்; டேய்... டிவி பார்த்தது போதும்டான்னு ஒரே ஒரு வார்த்தை சொல்லிட்டா போதும்... அவ்ளோதான்... அடுத்த நிமிஷமே ரிமோட்டை தூக்கி எறிஞ்சிட்டு... கையில செல்போனை எடுத்துக்குவான். அப்புறம்... படிக்கிற புத்தகம், சாப்பாடு... பால்... எதுவுமே நினைப்பிருக்காது-ன்னு... பெத்தவங்க புலம்பறது உண்டு...! அதே பெத்தவங்களைப் பாத்து, நான் ஒரு கேள்வி கேக்குறேன்...! நீங்க என்னைக்காவது டிவியை மூடி வைச்சுட்டு, ஒரு கதை புத்தகத்தையாவது படிச்சிருக்கீங்களா? (பசங்க கை தட்டறாங்க...) படிக்கிற பழக்கம் பெத்தவங்ககிட்டேயிருந்து பிள்ளைக்கு வரணும். நீங்க வரவேற்பறையில உக்காந்து ஒரு புத்தகத்தை எடுத்துப் படிச்சீங்கன்னா; உங்க பிள்ளைங்க மட்டும் இல்ல..! நீங்க வளக்குற நாய்க்குட்டி... பூனைக்குட்டி கூட புத்தகத்தை வந்து எட்டிப் பாக்கும்..! 

சின்ன வயசில காந்திஜி அரிச்சந்திரன் நாடகம் பார்த்தார். அன்னைக்கு டிவி நாடகம் இல்லை; தெருவில போடற நாடகந்தான்..! காந்தியோட அம்மா அவரைத் தடுக்கல..! இந்த நாடகத்தை மகன் பாக்கணும்னு ஆசைப்பட்டாங்க..! அதே மாதிரி... உண்மைக்காக அரிச்சந்திரன் பட்ட கஷ்டங்கள் எல்லாம் காந்தியோட மனசைப் பாதிச்சுது. வாழ்வில் எந்த நிலை வந்தாலும் நாம உண்மை மட்டுமே பேச வேண்டும் என்ற உறுதிமொழியை அவர் அரிச்சந்திரன் நாடகம் பார்த்தபிறகுதான் எடுத்துக்கொண்டார் என்பது வரலாறு கூறும் உண்மை...! அதன் பிறகு அவர், சிறந்த புத்தகங்களைத் தேடித்தேடிப் படித்தார். ஜான் ரஸ்கின் எழுதிய "கடையனுக்கும் கடைத்தேற்றம்' என் வாழ்க்கையை மாற்றிய நூல் என்கிறார் காந்திஜி. லியோ டால்ஸ்டாயின் நூல்கள் என் உள்ளத்தில் சத்தியத்தின் ஒளியைப் பாய்ச்சின என்றார். மாணவச் செல்வங்களாகிய நீங்கள் சிறந்த புத்தகங்களைத் தேடிப் படியுங்கள்..! பெற்றோர்களும் அவற்றை விரும்பி வாங்கிக்கொடுக்கவேண்டும்..!'' என்று சொல்லித் தனது உரையைப் பாட்டி நிறைவு செய்தபோது, கைதட்டிய மாணவர்கள் எல்லோரும் எழுந்து ஓடி வந்து பாட்டியிடம் கைகுலுக்குவதற்குப் போட்டியிட்டார்கள்..! 

(ஏப்ரல்-2 சர்வதேச குழந்தைகள் புத்தக தினம்)
-ரவிவர்மன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com