இளமையில் வெல்!பிஸ்மென் ட்யூ (BISMAN DEU)

தனது 15ஆவது வயது வரை லண்டனில் கழித்தாள் அந்தச் சிறுமி. பின் தனது சொந்த மாநிலமான பஞ்சாப் அமிர்தசரஸிலுள்ள தனது பூர்வீக பண்ணை வீட்டில் தங்குவதற்காக இந்தியா வந்தாள்.  
இளமையில் வெல்!பிஸ்மென் ட்யூ (BISMAN DEU)

தனது 15ஆவது வயது வரை லண்டனில் கழித்தாள் அந்தச் சிறுமி. பின் தனது சொந்த மாநிலமான பஞ்சாப் அமிர்தசரஸிலுள்ள தனது பூர்வீக பண்ணை வீட்டில் தங்குவதற்காக இந்தியா வந்தாள்.  

மே மாத இறுதியில் பஞ்சாப் விவசாயிகளின் நிலங்களில் அறுவடைக்குப் பின் கோதுமைக் கழிவுகள் (கால் நடைத் தீவனங்களை அகற்றிய பிறகு எஞ்சியுள்ள பொருட்கள்) கொளுத்தப்படுகின்றன. அதற்கு ஒரு மாதத்திற்குப் பிறகு, மீண்டும் உழப்பட்டு நெல் பயிரிடப்படும். நவம்பர் மாத இறுதியில் நெல் அறுவடை முடிந்த பிறகு விவசாயக் கழிவுகள் கொளுத்தப்படுகின்றன. இதன் காரணமாக மிகப்பெரிய அளவில் காற்றில் மாசுபாடு ஏற்பட்டது. 

அப்பகுதியில் வசித்த பெரும்பாலானோர் சுவாசக் கோளாறுகளால் அவதிப்பட்டனர். இதைக் கண்டு மிகவும் வருத்தம் அடைந்தார் லண்டனிலிருந்து இந்தியா வந்த "பிஸ்மன் ட்யூ' என்ற பெயர் கொண்ட அந்தச் சிறுமி!

"இதைத் தவிர்க்க வேறு வழியில்லையா?'' எனத் தன் வீட்டிலுள்ளவர்களிடம் கேட்டாள் அவள்! "இந்த நடைமுறைதான் பஞ்சாப் மாநிலம் முழுவதும் பின்பற்றப்பட்டு வருகிறது. இதற்கு மாற்று வழி வேறெதுவும் இல்லை.'' என்றனர் அனைவரும்!

மாசுபாட்டைக் குறைக்க வேண்டும்..., அதே சமயம் இத்தகைய விவசாயக் கழிவுகளைப் பயன் தரத்தக்க வகையில் மாற்றிக் கொள்ளவும் வேண்டும் என்று அவர் சிந்தித்தபடியே இருந்தாள். தமது வயலில் சிதறிக் கிடந்த கோதுமை மற்றும் நெற்கழிவுகளைச் சேகரித்து வந்து அவற்றை ஆராய்ச்சி செய்தாள் அந்தச் சிறுமி!

அவை அதிக சிலிக்கா நிறைந்தவையாகவும், தண்ணீரை உட்கிரகித்துக் கொள்ளும் தன்மை இல்லாதவையாகவும், இதன் காரணமாக கரையான்களால் அரிக்கப்படாத தன்மை கொண்டவையாகவும் விளங்கின. உடனே அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. இத்தகைய கழிவுப் பொருட்களுடன் ஒரு வித பசையைக் கலந்து அவற்றை உருட்டிக் கையாலேயே பலகை போல் தயாரித்தார். அப்படி அவர் தயாரித்த  பலகை வெகு விரைவிலேயே காய்ந்து போனது. அதே நேரம் உறுதி மிக்கதாகவும் இருந்தது. இப்படித் தான் தயாரித்த பலகைக்கு "க்ரீன் உட்' (GREEN WOOD) என்று பெயரிட்டார் பிஸ்மென்!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரûஸச் சேர்ந்த "பிஸ்மன் ட்யூ' என்ற இந்தச் சிறுமியின் கண்டுபிடிப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது!

பிளைவுட் தயாரிக்கும் நிறுவனங்களை அணுகித் தனது கண்டுபிடிப்பை அவர்களுக்கு விளக்கிக் கூறினார். அந்நிறுவனங்கள் தொழிற்சாலையில் இயந்திரங்களின் உதவியுடன் தயாரித்த பலகைகள், அதிக கனம் இல்லாமலும், அதே சமயம், அதிக உறுதி மிக்கவையாகவும் விளங்கின!

இதன் மூலம் மாசுபாட்டைத் தவிர்க்க முடிந்தது! மரங்களை வெட்டுவதை பெருமளவில் குறைக்க முடிந்தது! உறுதியான மற்றும் மலிவான பலகைகளைத் தயாரிக்க முடிந்தது! கட்டுமானத்துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்த முடிந்தது! 

எனவே பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு இவ்விதப் பலகைகளைத் தொழில் முறையில் பெருமளவில் தயாரிக்க முன் வந்தன! 

இந்த அரிய கண்டுபிடிப்பை உருவாக்கிய பொழுது அவருக்கு வயது 18 மட்டுமே!

பல தொண்டு நிறுவனங்கள் இவரைப் பாராட்டின! HP என்ற பன்னாட்டு நிறுவனம் 2013 ஆம் ஆண்டு `SOCIAL INNOVATION RELAY' என்ற போட்டியைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கென பிரத்யேகமாக நடத்தியது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 43,000 பேர் பங்கு கொண்ட இப்போட்டியில் இவரது "க்ரீன் வுட்' பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது!!

இதன் காரணமாக நியூயார்க்கில் நடைபெற்ற உலகக் குழந்தைகள் மாநாட்டில் 2014 ஆம் ஆண்டு UNICEF நிறுவனத்தால் இவர் சிறப்புரை ஆற்ற அழைக்கப்பட்டார்!

எத்தியோப்பியா, உகாண்டா போன்ற ஆப்பிரிக்க நாடுகள் இவர் தயாரித்த `GREEN WOOD' பலகைகளைத் தயாரிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. அதிக நில நடுக்கம் ஏற்படும் இந்தோனேஷியா, ஜப்பான் போன்ற பகுதிகளில் இப்பலகைகளைக் கொண்டு கட்டப்படும் வீடுகளை எளிதில் புனரமைக்கலாம் என்பதால் அந்த நாடுகளும் இவரது தயாரிப்பு முறையைக் கேட்டு விண்ணப்பித்து உள்ளன. இது கட்டுமானத் தொழிலில் ஒரு பெரும் புரட்சியாகக் கருதப்படுகிறது. 

இத்தகைய பெருமைகளைத் தேடித்தந்த பிஸ்மன், சுற்றுச் சூழல் மாசுபாட்டைத் தவிர்க்கும் பல்வேறு முறைகளைக் கண்டறிய அதிக ஆர்வம் காட்டுகிறார்! தமது கண்டுபிடிப்புகள் யாவும் இந்திய நாட்டிலேயே அதிகம் பயன்படுத்தப்பட வேண்டும்! இதுவே தனது இலட்சியம்! என்கிறார் இந்த இளம் பெண்!  

"ஆயுதம் செய்வோம்! நல்ல காகிதம் செய்வோம்! 
ஆலைகள் வைப்போம்! கல்விச் சாலைகள் வைப்போம்"....

....என்ற பாரதியின் பாடல் நனவாகும் என்பதில் ஐயமில்லை!

தொகுப்பு: லக்ஷ்மி பாலசுப்ரமணியன், 
கடுவெளி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com