ஒரு தாயின் மாண்பு!

இந்திய சுதந்திரப் போராட்டம் நடந்து கொண்டிருந்த நேரம். சுதந்திரப் போராட்ட வீரர்களைத் தீவிரமாகத் தேடித்தேடக் கைது செய்து கொண்டிருந்தனர்
ஒரு தாயின் மாண்பு!

இந்திய சுதந்திரப் போராட்டம் நடந்து கொண்டிருந்த நேரம். சுதந்திரப் போராட்ட வீரர்களைத் தீவிரமாகத் தேடித்தேடக் கைது செய்து கொண்டிருந்தனர். 

இந்தியரின் நிலை மிகவும் வருந்தும்படியாக இருந்தது.  பசி. நோய், அறியாமை, கண்மூடித்தனமான பழக்க வழக்கங்கள், சாதிக் கொடுமை ஆகியவை சமுதாயத்தையே சீரழித்துக் கொண்டிருந்தன. 

நள்ளிரவு. அலைந்து களைத்துப் போன மூன்று போராட்ட வீரர்கள் ஒரு குடிசைக்குள் நுழைந்தனர். ஒரு விதவைத் தாய் காய்ச்சலால் துவண்டுபோன தன் ஒரே மகனைக் கட்டிலில் கிடத்தி இருந்தாள். அவனுக்குச் சில பச்சிலைகளைக் கலக்கி மூலிகை மருந்து கொடுத்துக் கொண்டிருந்தாள்.  போராட்ட வீரர்களை அந்த நேரத்திலும் முகம் சுளிக்காமல் வரவேற்று அவர்கள் தாகம் தீர தண்ணீர் கொடுத்தாள். 

"அம்மா, கடுமையான பசி! சாப்பிட்டு  இரண்டு நாளாகின்றன!'' என்றார்கள்.
 "சற்று ஓய்வெடுங்கள்....இதோ!...,ஒரு நொடியில் சாப்பாடு தயார் செய்து விடுகின்றேன்'' என்று கூறிவிட்டு விரைந்து செயல்பட்டாள் அந்தத் தாய்.

கம்பு ரொட்டியும், வெங்காயச் சட்னியும் தயாராகிவிட்டது. அனைவரும் சாப்பிட்டனர். போராட்ட வீரர்களுக்கு த் தெம்பு பிறந்தது. 

" தாயே மிக்க நன்றி!...."இந்த "மகன்லால் பாகடி' இந்த உதவியை மறக்க மாட்டான்.  பொழுது விடிவதற்குள் நாங்கள் போக வேண்டிய இடத்திற்குப் போய்ச் சேர வேண்டும். உங்கள் உதவிக்கு நாங்கள் மிகவும் கடமைப் பட்டிருக்கின்றோம்....சுதந்திர இந்தியா உருவாக தாங்களும் பங்கு கொண்டிருக்கிறீர்கள்.  இதை வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பணத்தைக் கொண்டு நோயால் வாடும் உங்கள் மகனுக்கு நல்ல மருந்தும், உணவும் வாங்கிக் கொடுங்கள்'' என்று கூறி இரண்டாயிரம் ரூபாயைக் கொடுத்தார்கள். 

"இந்தப் பணம் விடுதலைக்காகப் போராடும் உங்களுக்குப் பயன்படும்'' என்று வாங்க மறுத்தாள் அந்தத் தாய்!

அந்தத் தாயின் பெருந்தன்மை "மகன்லால் பாகடி'யை வியக்க வைத்தது! மேலும் ஒரு வேண்டுகோள் விடுத்தான் அவன்!

"தாயே,  என் தலைக்கு ஒரு லட்சம் ரூபாய் விலை வைத்திருக்கிறது வெள்ளைய அரசாங்கம்!....சிப்பாய்கள் எங்களைக் கைது செய்யத் துரத்திக் கொண்டிருக்கிறார்கள்...எந்த நேரம் பிடிபடுவோம் என்று தெரியவில்லை....என்னைச் சிப்பாய்களிடம் ஒப்படைத்து ஒரு லட்சம் ரூபாயைப் பெற்று உங்கள் வறுமையைப் போக்கிக் கொள்ளுங்கள். 

அந்த வார்த்தையைக் கேட்ட அந்தத் தாய் பெண்புலி போலச் சீறினாள்!  தீயை மிதித்தவள் போலத் துடித்தாள்! கண்கள் கலங்கின!....."மகன்லால்!....எப்படிப்பட்ட யோசனையைச் சொல்கிறாய்!....என் கண்ணே!....,நீயும் என் மகனல்லவா?....இந்தத் தாய் தன்னுடைய  சில வெள்ளிக் காசுகளுக்காக வெள்ளையனிடம் காட்டிக் கொடுத்து விடுவாளா?.....தன் பிள்ளைக்குக் கொடிய சிறை வாசத்தை வலிய வாங்கிக் கொடுத்து விடுவாளா?....இல்லை!....இல்லை!....உன் போன்ற வீரர்களைப் பெற இந்தியத் தாய் என்ன புண்ணியம் பண்ணியிருக்க வேண்டும்!'' என்றாள். 

அவள் மேலும், " உன் லட்சியத்தில் உறுதியாய் இரு!.....எப்போதாவது உணவுக்குச் சிரமமாக இருந்தால் இங்கே வந்துவிடுங்கள்....கஞ்சியோ, கூழோ பகிர்ந்து உண்ணலாம்!  என் மகன் குணமடைந்தவுடன் அவனையும் விடுதலை இயக்கத்திற்குப் பயன் படுத்திக் கொள்ளுங்கள்!'' என்றாள்.

எஃகு போன்ற நெஞ்சுரம் பெற்ற மகன்லாலின் கண்களில் நீர் துளிர்த்தது! அவள் பாதங்களைத் தொட்டு, "தாயே!....உன்னுடைய ஆசி இருக்கும்வரை இந்திய விடுதலையின் நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த நாடு கட்டாயம் விடுதலை அடைந்து விடும்! எங்களுக்கு ஊக்கத்தையும், வலிமையையும் ஊட்டியிருக்கின்றது உங்களுடைய வார்த்தைகள்!'' என்று கூறி விடைபெற்றான் மகன்லால் பாகடி!

ஏழ்மை நிலையிலும் இந்தத் தாயின் குலையாத உறுதியும், தியாகமும் பின்வரும் குறளை ஓவியமாக்கிக் காட்டுகின்றது.
"பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை.''

பொருள்: பழி ஏற்படும் வழியில் மேற்கொண்டு ஒருவர் அடைந்த செல்வத்தைக் காட்டிலும் அதனைக் கருதாது கொண்ட கொடிய வறுமையே சிறப்பு உடையதாகும்!
கதை, சித்திரம் : ஓவியர்  தாமரை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com