முத்திரை பதித்த முன்னோடிகள்! ரவீந்திரநாத் தாகூர்

உலகின் இரு நாடுகளுக்கு ஒரே கவிஞர் தேசிய கீதத்தை எழுதி உள்ளார்!  அவர் யாரென்று தெரியுமா?
முத்திரை பதித்த முன்னோடிகள்! ரவீந்திரநாத் தாகூர்

உலகின் இரு நாடுகளுக்கு ஒரே கவிஞர் தேசிய கீதத்தை எழுதி உள்ளார்!  அவர் யாரென்று தெரியுமா?
 மகாத்மா காந்தி அன்போடு "குரு தேவர்'  என்று ஒருவரை அழைத்தார்! அவர் யாரென்று தெரியுமா?
"இந்தியாவின் டால்ஸ்டாய்' என்று ரஷ்யர்கள் இந்தியக் கவிஞர் ஒருவரைப் புகழ்ந்தனர்! அவர் யாரென்று தெரியுமா?
அவர்தான் "ரவீந்திர நாத் தாகூர்!'  இவருக்கு  மற்றொரு பெருமையும் உண்டு. நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியரும் இவரே ஆவார். 
பாரத நாட்டிற்கு இவர் எழுதிய "ஜன கண மன' பாடல் தேசிய கீதமானது.
"அமர் சோனார் பங்ளா' என்ற இவரது தனிப்பாடல் ஒன்று பங்களாதேஷ் நாட்டின் தேசிய கீதமானது!
 இவர் 1861ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி பிறந்தார். தந்தையின் பெயர் தேவேந்திர நாத் தாகூர். தாயின் பெயர் திருமதி.சாரதா தேவி. 
ரவீந்திரர் 8ஆவது வயதிலேயே வங்க மொழியில் கவிதைகள் புனையத் தொடங்கினார். தமது 16ஆவது வயதிலேயே "பானு சிம்ஹா' என்ற புனை பெயரில் தமது முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். 
இவரது தந்தை இவருக்கு உலக அனுபவங்களைக் கற்றுக் கொடுக்க விரும்பினார். எனவே 1873ஆம் ஆண்டு இந்தியாவின் பல நகரங்களுக்கும் தன் மகனை அழைத்துச் சென்றார். இந்தியாவின் "வேற்றுமையில் ஒற்றுமை' என்ற கருத்தை தாகூர் அறிந்து கொண்டார். 
1901ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் உள்ள "சாந்தி நிகேதனுக்கு' வந்த தாகூர் அங்கு வசித்த மக்களுக்கு இலவசமாகக் கல்வி புகட்ட விரும்பினார். எனவே பள்ளி ஒன்றையும் நூலகம் ஒன்றையும் திறந்தார். அப்பகுதியில் பல இடங்களிலும் மரக்கன்றுகள் பலவற்றை நட்டார். 
மிக இளவயதிலேயே தமது தாயை இழந்த தாகூர் பணியாட்களால் வளர்க்கப்பட்டார். காரணம் இவரது தந்தை தமது தொழில் நிமித்தமாகப் பல வெளிநாடுகளுக்கு  பயணம் செய்தபடியே இருந்தார். தமது சகோதரர் "ஹேமேந்திர நாத் தாகூர்' என்பவரிடம் உடற்கூறு இயல், வரலாறு, புவியியல், இலக்கியம், கணிதம், சமஸ்கிருதம், ஆங்கிலம் போன்ற பலவற்றைக் கற்றுக் கொண்டார்.
1877ஆம் ஆண்டு இவரது இயற்பெயரிலேயே சிறுகதைத் தொகுப்பு ஒன்றும், சில நாடகங்களும் நூல் வடிவில் வெளிவந்தன. இவர் பல நாவல்கள், சிறுகதைகள், நாட்டிய நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் ஆகியவற்றை எழுதி உள்ளார். இவர் ஒரு சிறந்த இசைக் கலைஞரும் ஆவார். 
இவர் எழுதிய 2000க்கும் அதிகமான பாடல்கள் "ரவீந்திர சங்கீத்' என்ற பெயரில் மேற்கு வங்கத்தில் இன்றளவும் பாடப்பட்டு வருகின்றன.
1912ஆம் ஆண்டு "கீதாஞ்சலி' என்ற பெயரில் கவிதைத் தொகுப்பு ஒன்றை இவர் வெளியிட்டார். இதற்காக 1913ஆம் ஆண்டு இவருக்கு "நோபல் பரிசு' கிடைத்தது! 1915ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு இவருக்கு "சர்' பட்டம் வழங்க முடிவு செய்தது. ஆனால் "ஜாலியன் வாலாபாக்' படுகொலையை எதிர்த்த இவர் அப்பட்டத்தை பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார். 
இவரது மற்றொரு சகோதரர் "ஜோதீந்திர நாத் தாகூர்' என்பவருடன் இணைந்து தமது 16ஆவது வயதிலேயே நாடகங்களை இயற்றி நடிக்கத் தொடங்கினார். இவர் இயற்றிய முதல் நாடகம் "வால்மீகி பிரதீபா' என்பதாகும். இவர் எழுதிய முதல் சிறுகதை "பிக்காரிணி' என்பதாகும். 
ஏறக்குறைய 30 நாடுகளுக்கு இவர் பயணம் மேற்கொண்டார். சர்வ தேசத் தலைவர்கள் பலரையும் சந்தித்தார். தாம் சென்ற பல நாடுகள் பற்றிய பயணக் கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார் வங்கத்தின் மிகப் பெரிய சமூக சீர்திருத்தவாதியாக இவர் கருதப்படுகிறார்.  அந்நாளில் நிலவி வந்த குழந்தைத் திருமணம், தீண்டாமை போன்ற சமூகத் தீமைகள் குறித்துத் தமது படைப்புகளில் எழுதி வந்தார். 
1971ஆம் ஆண்டு இவர் எழுதிய "நினைவுகள்' என்ற நூலில் தமக்கு இலக்கிய ஆர்வத்தை ஊட்டிய தமது நண்பர் "அக்ஷய் செüத்ரி' என்பவர் பற்றிப் புகழ்ந்து கூறியுள்ளார். தாகூர் ஒரு திறமையான பாடகரும் கூட! வங்க மொழியில் ஏறத்தாழ 2300 படல்களை எழுதியுள்ளார். இவர் ஒரு தலைசிறந்த ஓவியரும் கூட!
1937ஆம் ஆண்டு இவர் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டார். அத்தீவின் அழகில் மயங்கிய இவர் "ஸ்ரீலங்கா மாதா' என்று வங்க மொழிப் பாடல் ஒன்றை இயற்றினார். சாந்தி நிகேதனில் அவரது பல்கலைக் கழகத்தில் "ஆனந்த சமரக் கூன்' என்ற இலங்கையைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கல்வி பயின்று வந்தார். அவர் இலங்கை பற்றி தாகூர் எழுதியிருந்த பாடலை சிங்கள மொழியில் மொழி பெயர்த்தார். அதுவே பிந்நாளில் இலங்கையின் தேசிய கீதமானது! 
உலகின் மூன்று நாட்டு தேசிய கீதத்தை எழுதியவர் இவர் ஒருவரே! 
இவரது பல இலக்கிய படைப்புகள் உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன. இந்தியாவின் எல்லாப் பல்கலைக் கழகத்திலும் இவரது படைப்புகள் படநூல்களில் இடம் பெற்றுள்ளன. 
7-8-1941 அன்று காலமானார் இந்த நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர், வங்கத்தின் இலக்கிய தீபம்!
இவரைப் பற்றி மேலும் சில தகவல்களை அறிந்து கொள்வோமா?

• 1917 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள சான்டா பார்பரா பல்கலைக் கழகத்திற்குச் சென்றார் தாகூர். அங்கு கல்வி அளிக்கும் முறை பற்றியும், பாடத்திட்டங்கள் பற்றியும் அறிந்து களிப்படைந்தார். அதைப் போன்ற பல்கலைக் கழகத்தை இந்தியாவில் துவக்க நினைத்தார். எனவே 1918ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய பிறகு சாந்தி நிகேதனில் பல்கலைக் கழகம் கட்டும் பணியைத் துவங்கினார். 1921ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் நாள் "விஸ்வ பாரதி பல்கலைக் கழகம்' துவக்கப்பட்டது! தாம் பெற்ற நோபல் பரிசின் முழுத்தொகையையும் இப்பல்கலைக் கழகத்திற்கென செலவழித்தார். 

• இமயமலைத் தொடருக்கு அடிக்கடி பயணம் செய்வது அவருக்குப் பிடித்த ஒன்றாகும்! தன் மகனின் உடல்நிலை மேம்பட ஹிமாச்சலில் உள்ள "ராம் கார்க்' (RAM GARGH) என்ற இடத்திற்கு 1903ஆம்  ஆண்டு சென்றார். அதன் உச்சிப் பகுதியில் அமர்ந்து அவர் எழுதியதே "கீதாஞ்சலி' ஆகும். அதன் ஆங்கில மொழி பெயர்ப்பே அவருக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது. தாகூர் அமர்ந்து எழுதிய இடம் "தாகூர் உச்சி' (TAGORE TOP)  என்று இன்றளவும் அழைக்கப்படுகிறது!

• தாகூரின் கொள்கைகள் மீது மிகுந்த மரியாதை கொண்டவர்கள் இருவர். ஒருவர் மகாத்மா காந்தி!....மற்றொருவர் ஜவஹர்லால் நேரு! தாகூர்தான் காந்தியை முதன்முதலில் "மகாத்மா' என்று அழைத்தார்!

• மத்திய ஐரோப்பாவிலுள்ள "ஸ்லோவேனியா' என்ற சிறிய நாடு தாகூரை மிகவும் நேசிக்கிறது. காரணம் தாகூரின் பல படைப்புகள் ஸ்லோவேனிய மொழியில் மொழிபெயர்க்கப் பட்டு அவை மக்களால் பெரிதும் விரும்பிப் படிக்கப் பட்டு வருகின்றன.  தாகூரின் 154ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக மே 7ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை பல இலக்கிய விழாக்களைக் கொண்டாடியது. 

• தமது 60ஆவது வயதில்தான் அதிக ஓவியங்களைத் தாகூர் வரைந்தார்.  இவரது பல ஓவியங்கள் சர்வதேச ஓவியக் கண்காட்சிகளில் இடம் பெற்றுப் பரிசுகள் பல வென்றன. 

• வங்க மொழிக்கு அடுத்த படியாக அவர் அதிகம் நேசித்த மொழி ஆங்கிலம்! ஆனால் அவர் ஆங்கிலேயர்களின் ஆட்சியை வெறுத்தார். "ஒவ்வொரு இந்தியனும் ஆங்கிலம் கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டும்.ஏனெனில் இனி வரும் நாட்களில் ஆங்கிலம் மட்டுமே உலகின் ஒரே தொடர்பு மொழியாக இருக்கும்! என்று அவர் கூறினார்.

• 1920களிலேயே தாகூரின் பல படைப்புகள் ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. இதனால் அவர் அங்கு பிரபலமடைந்து இருந்தார். 1930 ஆம் ஆண்டு தாகூர் ரஷ்யா சென்றார்.அங்கிருந்த ஆதரவற்றோர் இல்லம் ஒன்றைப் பார்வையிடச் சென்றார். 

• அங்கிருந்த குழந்தைகளை மகிழ்விக்க "ஜன கண மன' என்ற வங்க மொழிப் பாடல் ஒன்றைப் பாடினார். மொழி புரியாவிட்டாலும் அக்குழந்தைகள் இசையின் இனிமையிலும், தாகூரின் குரல் இனிமையிலும் மயங்கி அசையாமல் சிலை போல அமைதியாக நின்றனர்.  அப்பாடலே பின்னாளில் நமது தேசிய கீதமானது!

• தாகூர் வருகை புரிந்த 88ஆவது ஆண்டு  நிறைவை 2015ஆம் ஆண்டு ரஷ்ய அரசு கொண்டாடியது. ரஷ்ய மக்கள் இவரை "இந்தியாவின் டால்ஸ்டாய்' என்று அன்போடு அழைக்கின்றனர். 
லக்ஷ்மி பாலசுப்ரமணியன், கடுவெளி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com