ஹலோ பாட்டியம்மா..!

"மாணிக்கம்..., சுதந்திரதின விழா காலை 7.00 மணிக்கு ஆரம்பமாயிடும்... சீக்கிரம் கிளம்புடா...!''  என்றாள் ஹரிணி.
ஹலோ பாட்டியம்மா..!

"மாணிக்கம்..., சுதந்திரதின விழா காலை 7.00 மணிக்கு ஆரம்பமாயிடும்... சீக்கிரம் கிளம்புடா...!''  என்றாள் ஹரிணி.  "சுதந்திர தின விழாவுக்குப் போகிறதுக்கு முன்னாடி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்...'' -என்றான் மாணிக்கம். "சாக்லேட் தருவாங்களா... லட்டு தருவாங்களா... இதுதானே உன் சந்தேகம்..?'' -என்று சிரித்தாள் ஹரிணி.  "ஐய்ய.... நான் ஒண்ணும் ஒண்ணாம் கிளாஸ் பையன் இல்ல... நா...லா...ம் கிளாஸ் படிக்கிறேன்... ஞாபகம் வைச்சிக்கோ..!'' என்றான் மாணிக்கம்.  "சரி...சரி... உன் சந்தேகம் என்னன்னு சொல்லு... நான் நிவர்த்தி பண்றேன்..!'' என்றார்  சட்டையை  "அயர்ன்' பண்ணிக்கொண்டிருந்தபடியே  பாட்டியம்மா.

"பாட்டி...! சுதந்திர தினத்துக்கு கொடி ஏத்துறோம்.., தேசிய கீதம் பாடறோம்.., இனிப்பு கொடுக்கிறோம்..!  அதேபோல... குடியரசு தினத்துக்கும் கொடி ஏத்துறோம்.., தேசிய கீதம் பாடறோம்.., இனிப்பு கொடுக்கிறோம்..! ரெண்டுத்துக்கும் என்ன வித்தியாசம் பாட்டி..?'' என்று கேட்டான் மாணிக்கம். 

"நல்ல கேள்வி இது...! தீபாவளிக்கும் புது சட்டை போடறோம்..! பொங்கலுக்கும்  புது சட்டை போடறோம்...! இரண்டு பண்டிகைக்கும் இரண்டு காரணங்கள் இருப்பதுபோல் - இதற்கும் இரு காரணங்கள் இருக்கின்றன! இது சிறியவர்களுக்கு மட்டுமில்லை... நிறைய பெரியவர்களுக்கே சரிவர தெரிவதில்லை..! இப்போது சொல்கிறேன் கேள்...!'' என்றார் பாட்டி. 

"ம்ம்...ம்ம்... சொல்லுங்க பாட்டி..!'' என்று ஆர்வம் காட்டினான் மாணிக்கம். 

"ஆங்கிலேயரிடம் இருந்து இந்தியாவுக்கு விடுதலை கிடைத்த தினத்தை சுதந்திர தினமாகக் கொண்டாடுகிறோம்.  விடுதலை அடைந்த இந்தியாவில் மக்களுக்காக, மக்களுடைய, மக்கள் அரசு அமைப்பதற்காக... பல அறிஞர்கள்... பல மேதைகள்...  பல மாதங்கள்... பல வாரங்கள்... விவாதித்து, இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கி... அது நிறைவேற்றப்பட்ட  தினத்தை  குடியரசு தினமாகக் கொண்டாடுகிறோம். 1947 ஆகஸ்ட் 15-இல் பெற்றெடுத்த "சுதந்திர நாடு' என்ற குழந்தைக்கு "குடியரசு நாடு' என்று பெயர்சூட்டுவிழா  நடைபெற்ற தினம்தான் "குடியரசு தினம்' (1950 ஜனவரி-26). ஆங்கிலேயர்கள் நம்மை ஆள்வதற்கு முன்பு, நம் நாட்டில் மன்னர் ஆட்சி முறைதான் இருந்தது.  மக்கள் மன்னரை விரும்பினாலும், வெறுத்தாலும் அவரின் வம்சமே தொடர்ந்து ஆட்சியில் இருக்கும். மன்னரை மாற்றும் சக்தியும் அதிகாரமும் மக்களுக்குக் கிடையாது. ஆனால், குடியரசு நாடு என்பது அப்படியல்ல..! குடியரசு நாட்டில் மத்திய அரசிலும், மாநில அரசிலும் ஆட்சி செய்யும் உரிமையை வாக்குச்சீட்டு மூலமாக மக்களே வழங்குகிறார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தல் மூலம், மக்களை யார் ஆள வேண்டும் என்று முடிவு செய்யும் சக்தியும், அதிகாரமும் மக்களிடமே  வழங்கப்பட்டது.  குடிமக்களின் அரசு... அதுதான் குடியரசு...! அதுதான் ஜனநாயகம்...!'' என்றார் பாட்டி.

"சரி பாட்டி..! ஆகஸ்ட் 15-இல் சுதந்திரம் கிடைத்ததால் சுதந்திர தினத்தை அன்று கொண்டாடுகிறோம். ஆனால், குடியரசு நாடாக அறிவிக்க ஜனவரி-26 ஆம் தேதியைத் தேர்வு செய்ததில் ஏதேனும் காரணம் இருக்கிறதா... பாட்டி..!'' என்று கேட்டாள் ஹரிணி. 

"ஆகா...! அருமையான கேள்வி...!   மகாத்மா காந்தியடிகள்  தேர்வு செய்த நாள் அது..!''
"அது எப்படி..? குடியரசு நாடாகும்போது காந்தியடிகள் உயிருடன் இல்லையே..!''
"மதங்களாலும், மொழிகளாலும் சிதறிக்கிடந்த இந்திய மக்களை உணர்வுகளால் ஒருங்கிணைத்தவர் காந்திஜி.  இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு 17 ஆண்டுகள் முன்பாகவே...  1930-ஆம் ஆண்டில் ஜனவரி 26-ஆம் தேதியை முழு விடுதலை தினம்  என்று அறிவித்து நாட்டு மக்களுக்கு நம்பிக்கையும், உற்சாகமும் அளித்தார்.  காந்தியடிகள் நினைவைப் போற்றும் வகையில்,  குடியரசு தின நாளாக அதே ஜனவரி-26 ஐ தேர்வு செய்தார்கள்''. 

"அப்படியா பாட்டி..!''
 "ஆமாம்... சுதந்திர தினமும், குடியரசு தினமும் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டதன் நோக்கம், அந்த நாளில் சுதந்திரத்துக்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தவேண்டும்.  வாழ்ந்து கொண்டிருக்கும் தியாகிகளைத் தேடிச் சென்று, சந்தித்து...  வணங்கி நன்றி கூறல் வேண்டும்..!''  என்றார் பாட்டியம்மா!
  -ரவி வர்மன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com