செய்வன திருந்தச் செய்! 

ஒவ்வொரு பயிற்சியிலும் இருந்து ஒரேயொரு கணக்கைப் போட்டுப் பாரும்மா.
செய்வன திருந்தச் செய்! 

அரங்கம்
காட்சி - 1
இடம் - வித்யாவின் வீடு
மாந்தர் - வித்யா, அவளது தாய் கலைவாணி.

வித்யா: அம்மா வீட்டுப் பாடம் முடிந்தது. இனி நான் டி.வி. பார்க்கப் போறேன். 
கலைவாணி: நாளைக்கு கணக்குத் தேர்வுன்னு சொன்னியே, நல்லாப் படிச்சிட்டியா?
வித்யா: ஆமா அம்மா!....எல்லாப் பயிற்சிகளையும் நல்லாப் பார்த்துட்டேன்!
கலைவாணி: எல்லா சூத்திரங்களையும் படிச்சிட்டியா?
வித்யா: படிச்சிட்டேன் மா!
கலைவாணி: ஒவ்வொரு பயிற்சியிலும் இருந்து ஒரேயொரு கணக்கைப் போட்டுப் பாரும்மா.
வித்யா: வேண்டாம்மா, ரொம்ப நேரம் ஆகும். என்னால முடியாதும்மா...
கலைவாணி: இல்லை வித்யா, சோம்பல்படாதே! ஒரு தடவை எழுதிப் பார்க்கிறது பத்து தடவை படிக்கிறதுக்குச் சமம்னு சொல்லுவாங்க! அதுவும் கணக்குப் பாடத்தைக் கண்டிப்பாய் எழுதிப் பார்த்துத்தான் படிக்கணும்மா...
வித்யா: அம்மா, நான் நல்லாத் தெளிவாப் பார்த்துட்டேன். அதனால் தேர்வுல தப்பு வராதும்மா...
கலைவாணி: சரி வித்யா, உன் இஷ்டம்.

காட்சி - 2

இடம் - வித்யாவின் வீடு, மாந்தர் - வித்யா, கலைவாணி மற்றும் தந்தை சுந்தர். 

வித்யா: அப்பா, அம்மா நாளைக்கு எங்க பள்ளியிலே பேரன்ட்ஸ் மீட்டிங்....நீங்க ரெண்டு பேரும் கண்டிப்பா வாங்க....என்னோட பரீட்சைப் பேப்பரையெல்லாம் அப்பத்தான் கொடுப்பாங்க.
கலைவாணி: சாரி வித்யா, என்னாலே வரமுடியாது. வீட்ல கொஞ்சம் வேலை இருக்கும்மா.
வித்யா: அப்பா, நீங்க எப்படி? 
சுந்தர்: நான் கண்டிப்பா வரேன். நாம ரெண்டு பேரும் போவோம் சரியா? 
வித்யா: சரிப்பா.
சுந்தர்: மீட்டிங் எத்தனை மணிக்கும்மா? 
வித்யா: காலைல பத்து மணிக்குப்பா. 
சுந்தர்: அப்ப சரி, நானைக்கு ஒன்பது மணிக்கெல்லாம் நாம ரெண்டு பேரும் கிளம்பிடுவோம்.
வித்யா: சரிப்பா.
கலைவாணி: தேர்வுல வாங்கின மதிப்பெண்களெல்லாம் நாளைக்குத்தான் தெரியும் அப்படித்தானே? 
வித்யா: ஆமாம்மா, நாளைக்குத்தான் கொடுப்பாங்க!
கலைவாணி: சரி, ஆல் த பெஸ்ட்.
வித்யா: தேங்க்ஸ் மா.

காட்சி - 3

இடம் - பள்ளிக்கூடம்
மாந்தர் - வித்யா, சுந்தர் மற்றும் 
வகுப்பாசிரியை பிரேமா.

சுந்தர்: வணக்கம் மேடம், வித்யா எப்படி படிக்கிறா? 
பிரேமா: வணக்கம் சார், வித்யாதான் எல்லாப் பாடத்திலேயும் முதல் இடத்திலே இருக்கா, ஆனா இந்தத் தடவை கணக்குப் பாடத்திலே மட்டும் பத்து மதிப்பெண் குறைவா வாங்கியிருக்கா.
சுந்தர்: அப்படியா?
பிரேமா: ஆமா சார், இதோ அவளோட கணக்கு பேப்பரைப் பாருங்க, மார்க் எல்லாம் கவனக்குறைவாலதான் போயிருக்கு...எல்லாமே சின்னச் சின்னத் தவறுகள்தான். கூட ஒரு தடவை போட்டுப் பார்த்திருந்தா இந்த தப்பெல்லாம் வந்திருக்காது.
சுந்தர்: என்ன வித்யா, மேடம் சொன்னதைக் கேட்டியா? பரீட்சை எழுதி முடிச்சதும் ஒரு தடவை செக் பண்ணியிருக்கலாமேம்மா....
பிரேமா: நீங்க சொல்றது ரொம்பச் சரி. ஒரு தடவை செக் பண்ணியிருந்தா அவளே இந்தத் தப்பையெல்லாம் அவளே கண்டுபிடிச் சிருக்கலாம். வித்யா, நீ செக் பண்ணிப் பார்த்தியாம்மா? 
வித்யா: இல்லை மேடம்....எல்லாக் கணக்கையும் செய்யறதுக்குத்தான் நேரம் இருந்தது. செக் பண்ண டைம் இல்லை. 
பிரேமா: ஓ!....அப்படியா!....அப்போ இனி நீ அடிக்கடி நேரம் கிடைக்கும்போதெல்லாம் கணக்குகளைப் போட்டுப் பார்க்கணும். அப்பதான் உன்னாலே பரீட்சையிலே வேகமாகக் கணக்குகளைச் செய்ய முடியும். அதனைச் சரிபார்க்கவும் நேரம் இருக்கும்.
வித்யா: சரி மேடம். அப்படியே செய்யறேன். 

காட்சி- 4

இடம் - வித்யாவின் வீடு
மாந்தர்- வித்யா, 
கலைவாணி, மற்றும் தந்தை சுந்தர். 

(கலைவாணி கோலப் புத்தகத்தில் உள்ள கோலங்களை பேப்பரில் வரைந்து பார்த்துக் கொண்டிருக்கிறாள். வித்யாவும் சுந்தரும் உள்ளே வருகின்றனர்.)

கலைவாணி: வித்யா, என்ன மார்க் வாங்கியிருக்கா? 
சுந்தர்: வழக்கம் போல முதல் ரேங்க்தான். ஆனா கணக்குப் பாடத்திலே மட்டும் ஒரு பத்து மார்க் குறைவா வாங்கியிருககா. 
கலைவாணி: ஏன் வித்யா? 
வித்யா: சாரிம்மா, திரும்ப ஒரு தடவை செக் பண்ண முடியலே. நேரம் ஆகிவிட்டது. 
கலைவாணி: நான்தான் அன்னைக்கே உன்னைச் செய்து பார்க்கச் சொன்னேனே? நீ போட்டுப் பார்த்திருந்தா இந்தத் தப்பே வந்திருக்காதே?
சுந்தர்: இங்க பாரு வித்யா, கோலத்தைக்கூட உங்கம்மா நல்லாப் போட்டுப் பார்த்த பிறகுதான் வாசலிலே போடுவா....நானும் கட்டிடம் கட்ட பிளான் போடும்போது ஒரு தடவை வரைந்து பார்த்துட்டுதான் கம்பெனியிலே குடுக்கிற பேப்பரிலே வரைந்து கொடுப்பேன்....உங்க மேடமும், அம்மாவும் சொன்ன மாதிரி இனி ஒவ்வொரு பயிற்சியையும் வகுப்பிலே நடத்தி முடிச்ச பிறகு, கணக்குகளைச் செய்து பாரு. அப்பதான் நல்லா மனதிலே பதியும். உனக்குப் பரிட்சையிலே வேகமும் கிடைக்கும். சரியா? 
வித்யா: சரிப்பா. 
கலைவாணி: தேர்வுக்கு முந்தின நாள், நான் உன்னைச் செய்து பார்க்கச் சொன்னேனே......ஆனால் நீ டி.வி. பார்க்கிற ஆர்வத்திலே இருந்ததாலே உன்னாலே முழுக் கவனத்தோட படிக்க முடியலே. அதனாலதான் மதிப்பெண்களை இழக்க வேண்டியதாப் போச்சு. 
வித்யா: சாரிம்மா....இனிமே நான் நீங்க சொன்ன மாதிரியே செய்றேன்மா.
சுந்தர்: வெரிகுட்! ரொம்ப சந்தோஷம் வித்யாக்கண்ணு!

திரை
வே.சரஸ்வதி உமேஷ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com