பழகாத ஆயுதம்! 

வெகு நேரமாக எதையோ தேடிக்கொண்டிருந்த ஆகாஷை கவனித்துக் கொண்டுதான் இருந்தார் அவனது அம்மா கல்யாணி. 
பழகாத ஆயுதம்! 

வெகு நேரமாக எதையோ தேடிக்கொண்டிருந்த ஆகாஷை கவனித்துக் கொண்டுதான் இருந்தார் அவனது அம்மா கல்யாணி. 
"ஆகாஷ்!....என்ன தேடுறே?''
"என்னோட ஸ்ருதி பெட்டி எங்கேம்மா?...இப்ப அது எனக்கு வேணும்!''
"ஒரு மாசமா அதைத் தேடாதவன் இப்ப எதுக்கு தேடுறே? நான்தான் தூசியாயிடுமேன்னு அதை பீரோவுக்குள்ளே எடுத்து வெச்சேன்....இப்ப பாட்டு பயிற்சி பண்ணப் போறியா?...''
""நாளைக்கு பள்ளிக்கூடத்திலே பாட்டுப்போட்டி இருக்கும்மா...அதுக்காகப் பயிற்சி பண்ணப்போறேன்!''
"என்னது நாளைக்கு பாட்டுப் போட்டியா? என் கிட்டே சொல்லவே இல்லையே....என்னிக்கு டீச்சர் சொன்னாங்க?''
""ரெண்டு வாரத்துக்கு முன்னாடியே சொல்லிட்டாங்க''
""ரெண்டு வாரத்துக்கு முன்னாடி சொல்லியும் இன்னிக்குத்தான் பயிற்சி பண்ணனும்னு தோணிச்சா?....இன்னிக்கு மட்டும் பயிற்சி செஞ்சா போதுமா ஆகாஷ்?''
"அம்மா,....நான்தான் ஆறு வருஷமா பாட்டு கத்துக்கறேன்ல....கடந்த ரெண்டு வருஷமா நான்தான் பாட்டுப்போட்டியிலே முதல் பரிசு வாங்கறேன்....எனக்கு ஒரு நாள் பயிற்சி போதும்மா.....மற்ற பசங்க எல்லாம் ஒரு வருஷம்கூட பாட்டு வகுப்புக்கு போனதில்லை!'' 
ஆகாஷின் பேச்சில் சற்று அகங்காரம் இருப்பது அம்மாவுக்குப் புரிந்தது. ஆனாலும் அவனது நம்பிக்கையைக் குலைத்து விடக்கூடாது என்று நினைத்தார். எனவே பீரோவைத் திறந்து சுருதிப் பெட்டியை எடுத்துக் கொடுத்தார். பாட்டு வகுப்பில் ஆகாஷுக்குக் கற்றுக் கொடுத்திருந்த நல்லதொரு தமிழ்ப்பாடலையும் எடுத்துக் கொடுத்து அவனைப் பாடிப் பார்க்குமாறு சொன்னார். ஆகாஷும் ஒரிரு முறை அப்பாடலைப் பாடிப் பார்த்தான். 
மறுநாள் ஆகாஷுடன் அவனது அம்மா கல்யாணியும் பள்ளிக்குச் சென்றார். பள்ளியில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பாட்டுப் போட்டியில் பல மாணவ, மாணவியர் பாடினர். ஆகாஷும் பாடினான். ஆகாஷ் பாடும்போது பாடலின் இடையே நிறைய இடங்களில் அவனுக்கு சுருதி விலகியது. ஒரிரு இடங்களில் தாளமும் தப்பிவிட்டது. எல்லாவற்றையும் அவனது அம்மா கவனித்துக் கொண்டிருந்தார். 
இறுதியில் பாட்டுப் போட்டிக்கான பரிசு அறிவிக்கப்பட்டது. 
முதல் பரிசு கலா என்ற மாணவிக்கும் இரண்டாம் பரிசு ராகவ் என்ற மாணவனுக்கும் கிடைத்தது. பாவம் ஆகாஷுக்கு பரிசு ஏதும் கிடைக்கவில்லை. தனக்குப் பரிசு கிடைக்காமல் போனதை அறிந்த ஆகாஷுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. 
ஆகாஷும் அவனது அம்மாவும் பள்ளியிலிருந்து திரும்பினார்கள். ஆகாஷ் வழியில் அம்மாவிடம் எதுவுமே பேசவில்லை. 
"ஆகாஷ்! ஏன் எதுவுமே பேசாமல் வர்றே?''
"இல்லம்மா! கடந்த இரண்டு வருஷமா பாட்டுப் போட்டியில் எனக்குத்தான் முதல் பரிசு கிடைச்சுது....ஆனா இன்னிக்கு என்னால சரியா பாடவே முடியல....பரிசு கிடைக்கல...'' 
"பரிசு கிடைக்காம போனதுக்காக எதற்கு வருத்தப்படறே ஆகாஷ்! அடுத்த வருஷம் நல்லா முயற்சி செஞ்சு பரிசு வாங்கிக்கலாம்'' என்றார் அம்மா ஆறுதலாக.
"அதில்லம்மா....நான் ஆறு வருஷம் பாட்டு கத்துக்கிட்டும் பரிசு கிடைக்கலயே....ஆனா ரெண்டு வருஷம் பாட்டு கத்துக்கற லதாவுக்கும், ராகவ்வுக்கும் எப்படி பரிசு கிடைச்சுது?'' 
"அவங்க நல்லா பாடினாங்கல்ல....அதான் பரிசு கிடைச்சது!''
"அப்போ என்னோட பாட்டு டீச்சரைவிட அவங்க டீச்சர் நல்ல டீச்சராம்மா?''
"எல்லா பாட்டு டீச்சரும் நல்ல டீச்சர்தான் ஆகாஷ்! ஆனால் உனக்கு பரிசு கிடைக்காம போனதுக்கு நீதான் காரணம்னு புரியுதா?'' 
" நான்தான் காரணமா? ஏன்ம்மா?''
"ஆமா ஆகாஷ்! பள்ளிக்கூடத்திலே பாட்டுப்போட்டி நடக்கிறதுன்னு உனக்கு ரெண்டு வாரத்துக்கு முன்பே தெரியும்....அப்படியும் அதைப்பற்றி நீ அக்கறை எடுத்தக்கவே இல்லை. காரணம், நான்தான் ஆறு வருஷமா பாட்டு கத்துக்கறோமேங்கிற எண்ணம்!.... நேத்துதான் சுருதி பெட்டியை எடுத்து பயிற்சி செஞ்சே. கலாவும், ராகவ்வும் நிறைய நாட்கள் பயிற்சி செஞ்சிருப்பாங்க....அதனாலதான் அவங்களுக்கு பரிசு கிடைச்சிருக்கு!''
ஆகாஷுக்கு உண்மை புரிய ஆரம்பித்தது.
"ஆகாஷ்! நாம எதை எவ்வளவுதான் கற்று வைத்திருந்தாலும் தொடர்ந்து பயிற்சி செய்யணும். அப்பதான் நாம கத்துக்கிட்டதுல தகுதியோட இருக்க முடியும். இதைத்தானே ந ம்ம முன்னோர்கள்
"பழகாத ஆயுதம் துருப்பிடிக்கும்' னு சொல்லியிருக்காங்க... பள்ளிக்கூட பாடம்னா அதை தினமும் படிக்கணும். பாட்டுன்னா அதை தினமும் பாடிப் பழகணும். "சித்திரமும் கைப்பழக்கம்' னு நீ கேட்டிருக்கிறாய் அல்லவா? ....போனது போகட்டும்!....இனி தினமும் சுருதிப் பெட்டியை எடுத்து பாடிப் பழகு. பள்ளிக்கூடப் பாடங்களை தினமும் படி. 
எந்தக் கலையைக் கற்றுக் கொண்டாலும் தொடர்ந்து பயிற்சி செய்பவரே வெற்றி பெறுவர்' என்று அம்மா சொல்லி முடித்தார். 
தான் பாட்டுப் போட்டியில் சரியாக பாட இயலாமல் போனதன் காரணம் ஆகாஷுக்குப் புரிந்தது,. 
"சரிம்மா!.....நீங்க சொன்னபடியே இனி நான் தினமும் பயிற்சி செய்யறேன்! அடுத்த முறை நல்லா பாடிக் காட்டுவேன்'' என்று உறுதியாகச் சொன்னான் ஆகாஷ்!
-கீர்த்தி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com