தகவல்கள் 3

காந்திஜியின் மூத்த புதல்வர் ஹீராலாலுக்கு அவசரமாகப் பணம் தேவைப்பட்டது.
தகவல்கள் 3

மனுநீதிச் சோழனும் மகாத்மா காந்தியும்
காந்திஜியின் மூத்த புதல்வர் ஹீராலாலுக்கு அவசரமாகப் பணம் தேவைப்பட்டது. தனது தம்பி மணிலாலுக்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில், கடனாக 600 ரூபாய் அனுப்பும்படியும், அதை ஒரு மாதத்தில் திருப்பித் தந்து விடுவதாயும் கேட்டிருந்தார்.
 மணிலாலுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சொந்தப் பணமே இல்லை. தந்தை காந்திஜி கொடுத்து வைத்திருந்த பொதுப்பணம்தான் கையில் இருந்தது.
  துணிந்து 600 ரூபாயை அனுப்பி வைத்தார். சில தினங்கள் கழிந்தன. பணத்தைப் பெற்றுக்கொண்டதாகக் கையெழுத்திட்ட மணியார்டர் ரசீது எப்படியோ காந்திஜியின் கையில் கிடைத்துவிட்டது.
 மகனென்றும்  பாராமல் மணிலாலை  கோபத்தோடு, "பொதுப் பணத்தை எடுத்து அண்ணனுக்கு அனுப்ப உனக்கு என்ன உரிமை இருக்கிறது?''
 மணிலாலும்"அண்ணனுக்குத்தானே அனுப்பினேன்'' என்று மன்னிப்பும் கேட்டார். ஆனால், மகாத்மா அது பெரிய தவறே என்று முடிவு கட்டினார். அதற்கு என்ன தண்டனை வழங்கினார் தெரியுமா? தம்முடைய ஆசிரமத்தில் இருந்து தன் மகனையே வெளியேற்றி விட்டார்!
மயிலை மாதவன்

கைகளே சுத்தம்
முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனும் வின்ஸ்டன் சர்ச்சிலும் ஒருமுறை விருந்து ஒன்றில் கலந்துகொண்டனர். ராதாகிருஷ்ணன் கையைச் சுத்தமாகக் கழுவி விட்டு வந்ததும், சர்ச்சில் ஸ்பூனை எடுத்து சாப்பிடத் தொடங்கினார்.
 ராதாகிருஷ்ணன் கையினால் சாப்பிடுவதைக் கண்ட சர்ச்சில், "என்ன பழக்கம் இது? இப்படிச் சாப்பிடுகிறீர்கள்? ஸ்பூனால் சாப்பிடுங்கள். அதுதான் சுகாதாரமானது. கையினால் சாப்பிடாதீர்கள்' என்றார்.
 அதற்கு ராதாகிருஷ்ணன், "கைதான் மிகவும் சுத்தமானதும், சுகாதாரமானதும். ஏன் தெரியுமா? இதை வேறு யாரும் உபயோகிக்க முடியாதே. ஆனால், ஸ்பூன் அப்படியில்லை' என்றாராம் லேசாகச் சிரித்துக்கொண்டே.
மயிலை மாதவன்

சுட்டெரித்த கட்டுரை!
1935-ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் இருந்து வெளிவரும் "மாடர்ன் ரெவ்யூ' ஒரு கட்டுரையில், "நேரு கர்வம் பிடித்தவர். இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்திற்கு இரண்டாவது முறையாக அவருக்குத் தலைமைப் பொறுப்பு கொடுக்கக்கூடாது'' என்றும் இன்னும் பல மோசமான வாசகங்களைத் தாங்கியும் வெளியாகி இருந்தது. ஆனால்  எழுதியவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை.
 படித்தவுடன் மக்களும், இயக்கத் தொண்டர்களும் கடும் கோபம் கொண்டு பத்திரிகை அலுவலகத்தில் தொடர்புகொண்டு "இவ்வளவு மோசமாக அந்தக் கட்டுரையை எழுதியவர் யார்? அவர் பெயரை உடனே வெளியிட வேண்டும்!'' என்று கேட்டுக் கொண்டனர்.
 பத்திரிகை நிர்வாகம் பதில் அளிக்கவில்லை. போராட்டம் வெடிக்கும் நிலை உருவானது.
 திடீரென்று அந்தப் பத்திரிகை நிர்வாகம், "அந்தக் கட்டுரையை எழுதியவர் ஜவஹர்லால் நேருவேதான்!'' என்ற உண்மையை வெளியிட்டது.
கோட்டாறு ஆ.கோலப்பன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com