நிழலின் அருமை!

சார், விடுதியிலே சிலரோட தொல்லை தாங்க முடியலே... மாணவர் விடுதிதானா இதுன்னு சந்தேகமும் வருது...
நிழலின் அருமை!

காட்சி - 1
இடம்: பள்ளி - துணைத் 
தலைமை ஆசிரியர் அறை.
மாந்தர்: அருணகிரி, விடுதி மாணவர்

(மாணவர் சிலர் பரபரப்போடு உள்ளே வருகின்றனர். துணைத் தலைமை ஆசிரியர் அருணகிரி அவர்களை அமர வைக்கிறார்).
அருணகிரி: ஏன்... உங்க முகத்திலே இவ்வளவு பதற்றம்?
குமரன்: சார், விடுதியிலே சிலரோட தொல்லை தாங்க முடியலே... மாணவர் விடுதிதானா இதுன்னு சந்தேகமும் வருது...
அருணன்: மொட்டை மாடியிலே இருக்கற தண்ணீர்த் தொட்டியைத் திறந்துவிட்டு... அருவியிலே குளிக்கறமாதிரி குளிக்கிறானுங்க...
குமார்: ...வர்ற செய்தித்தாளை மற்றவங்க படிக்க முடியாதபடி கிழிக்கிறானுங்க.
கோவிந்தன்: ... தொலைக்காட்சி இருக்கிற கூடத்திலே ஓடி விளையாடறாங்க... கிரிக்கெட் விளையாட்டு வேற... அலமாரியிலே இருக்கற முதலுதவிப் பெட்டியெல்லாம் கீழே விழுது.
ரமேஷ்: உணவை வீணாக்கறாங்க.. இரவு நேரத்திலே யாருக்கும் தெரியாம சினிமாவுக்குப் போறாங்க
(அவர் பொறுமையாகக் கேட்கிறார்)
அருணகிரி: சரி... இவங்களை என்ன செய்யலாம்?
குமரன்: விடுதியை விட்டு நீக்கிடலாம்.
அருணகிரி: நடவடிக்கைன்னு சொல்லி... அவங்க உணவிலேயும் தங்குற இடத்திலேயும் கை வைக்கக்கூடாது. ... 
 வீடு தூரத்திலே இருக்கு. அங்கே கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லே... சாக்கடை... கொசுத்தொல்லை... மழை பெய்தா ஒழுகும் வீடு.
 ...படிக்கிற மாணவனுக்கு இதுமாதிரி தொல்லைங்க கூடாது. கவலை கூடாதுன்னுதானே விடுதியிலே இடம் கொடுத்தோம்.
அருணன்: ..ஆனா... அவங்க படிப்பைத் தவிர மற்ற வேலைகளைச் செஞ்சா... எங்களுக்குத் தொல்லையா இருக்கே... படிக்கவே முடியலே சார்.
குமார்: .. நிழல் அருமை வெய்யில்லதான் தெரியும்னு நீங்க சொல்வீங்க... வீட்டில இருந்து வந்தாத்தான் கஷ்டம் தெரியும்.
அருணகிரி: தலைமை ஆசிரியரிடம் போக வேண்டாம். நான் விடுதிக்கு வர்றேன்.

காட்சி - 2
இடம்: பள்ளி
மாந்தர்: அருணகிரி, விடுதி மாணவர்கள் / கிரி

குமரன்: சார்... நீங்க விடுதிக்கு வர்றேன்னு சொன்னீங்க. அதுக்குள்ளே... இன்னொரு வேண்டாத செயலும் நடந்திடுச்சு...
அருணகிரி: என்ன... அது...
ரமேஷ்: கூடத்திலே கிரிக்கெட் விளையாடி... தொலைக்காட்சியை உடைச்சிட்டானுங்க.
(அருணகிரி விடுதிக்கு வருகிறார்)

இடம்: விடுதி -(விடுதி மாணவர்களை கூடத்தில் அமர வைக்கிறார்)

அருணகிரி: தொலைக்காட்சிப் பெட்டியை உடைச்சது யார்?
மாணவர்கள்: சார்... நாங்க யாருமே உடைக்கலே...
அருணகிரி: தானாவே உடைஞ்சிடுச்சா...
மாணவர்கள்: யார் உடைச்சதுன்னு தெரியலே... (உடைத்தது யார் என்று சொன்னால்... அவன் தொல்லை தருவான் என்ற அச்சம்... அமைதியாக இருக்கின்றனர்)
அருணகிரி: சரி... கண்டுபிடிக்கற வழி எனக்குத் தெரியும். ...நீங்க எல்லாரும் சமமா ஒரு தொகை போடுங்க... இதேபோல தொலைக்காட்சி வாங்கலாம்....நல்லதோ... கெட்டதோ... எல்லாருக்கும் பொறுப்பு உண்டு... பங்கு உண்டு!
(மாணவர்கள் ஒருவருக்கொருவர் ஆலோசனை செய்கிறார்கள்)
குமரன்: ... ஒருத்தன் பந்தை அடிச்சான்... அதனால உடைஞ்சுது... நாங்க எதுக்கு பணம் தரணும்..
..அவனையே முழுப்பணமும் போடச் சொல்லுங்க.
அருணகிரி: யார் அவன்?
ரமேஷ்: மனோகர்... உடைச்சுட்டு... அவனோட சொந்த ஊரான சொர்ணாவூருக்கு ஓடிட்டான்.
..ஏற்கெனவே பந்தடிச்சு பல்லை உடைச்சான்.. 
..படிக்கவிடாம அரட்டை அடிக்கிறான்.. ..அவன் கொடுக்கற தெம்பிலே... வேற சிலரும் அவன் பின்னால போறாங்க..
அருணகிரி: இதையெல்லாம் நீங்க... முன்பே சொல்ல வேண்டியதுதானே...
..தெருவில ஒருவாரமா தெரு விளக்கு எரியலே... நாம வேடிக்கை பார்த்திட்டுப் போனா எப்படி விளக்கு எரியும்.. அதுபோலத்தான்.. ..படிக்கணும் முன்னேறணும் என்கிற உணர்வோட வந்துள்ள நீங்க.. இதுபோன்ற விஷயங்களிலே விழிப்பா இருக்கணும்.
 ..சரி ..பொறுமையா இருங்க ..தலைமை ஆசிரியரிடம் பேசி ஒரு தீர்வுக்கு வரலாம்.

காட்சி - 3 
இடம்: சொர்ணாவூர் கிராமம். 
மாந்தர்: அருணகிரி, மாரிமுத்து, மனோகர், சேகர்

(காலை நேரம்.. தெருவில் சிறுவர் இருவர் ஓடுகிறார்கள். மனோகரின் தந்தை மாரிமுத்து அவர்களைத் துரத்துகிறார். எதிரே வந்த ஒருவர் ஒருவனைப் பிடிக்கிறார். மற்றவன் ஓடிவிடுகிறான். மாரிமுத்து... அகப்பட்ட சேகர் என்பவனின் முதுகில் அடிக்கப் போகிறார்)
அருணகிரி: (மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்குகிறார். விரைந்து சென்று தடுக்கிறார்) .. அடிக்காதீங்க...
மாரிமுத்து: ...இவன் என்ன செஞ்சான்னு கேளுங்க.. ..தெருவிலே கிரிக்கெட் விளையாடி... பந்தை வீட்டுக்குள்ள அடிச்சு... டி.வி.யை உடைச்சிட்டான்.. 
(நண்பன் ஒருவனைப் பார்த்துவிட்டு மனோகர் வருகிறான். அருணகிரியைப் பார்த்ததும் திகைப்போடு வணங்குகிறான்).
சேகர்: (மாரிமுத்துவிடம்) ஐயா... இனிமே இப்படி தெருவில் கிரிக்கெட் விளையாட மாட்டேன்... வீட்டுக்குள்ளே பந்தை அடிக்க மாட்டேன்.
மாரிமுத்து: சொல்லிட்டா போதுமா.. கொஞ்சம் நில்லு. டி.வி. போயிடுச்சே.. அதுக்குப் பதில் சொல்லு. (அருணகிரியிடம்) ஐயா... நீங்க யாரு?
அருணகிரி: மனோகர் படிக்கிற பள்ளிக்கூட ஆசிரியர்..
மாரிமுத்து: ஐயா... நீங்களே சொல்லுங்க.. டி.வி.யை உடைச்ச இவனை என்ன செய்யலாம்.. (மனோகரின் இதயம் படபடக்கிறது)
அருணகிரி: (சேகரிடம்) உங்க வீடு எங்கே இருக்கு?
சேகர்: பக்கத்துத் தெருவிலே...
அருணகிரி: உன்னைப் பார்த்தா வசதியான வீட்டுப் பிள்ளையைப்போல இருக்கு... உங்க வீட்டில டி.வி. உடைஞ்சா.. உடனே வாங்கிடுவீங்க.. இது குடிசை வீடு.. .."எருது வருத்தம் காக்கைக்குத் தெரியாது'.. நீங்க செய்யறதும் அப்படித்தான். ..உங்க வீட்டுக்கு நான் வர்றேன்.. விஷயத்தைச் சொல்றேன்.. இவங்களுக்கு ஒரு டி.வி. வாங்கிக் கொடுங்க.
சேகர்: நான் டி.வி.யை உடைச்சதைக் கேள்விப்பட்டா.. எங்க அப்பா என் தோலை உரிச்சிடுவார்.. ..என்னை மன்னிச்சிடுங்க.. (அவன் போகிறான்)
மாரிமுத்து: ஐயா... மனோகர் டி.வி. கேட்டான்.. கழிப்பறை கட்ட வைச்சிருந்த பணத்திலே டி.வி. வாங்கினோம். .. இவன் ஒரு நிமிஷத்திலே உடைச்சிட்டானே.. 
(அருணகிரி மனோகரைப் பார்க்கிறார். அவன் விழிக்கிறான். 
..அவனை அழைத்துக்கொண்டு சற்றுத் தூரத்தில் உள்ள மாந்தோப்புக்குப் போகிறார்).

இடம்: மாந்தோப்பு

அருணகிரி: டி.வி. உடைஞ்சதுக்கு உங்க அப்பா துடிச்சதைப் பார்த்தியா..
.. விடுதியிலே ஒரு பொழுதுபோக்கா இருந்த டி.வி.யை நீ ஒரு நிமிஷத்திலே உடைச்சிட்டே..
..விடுதியை உன் வீடுன்னு நினைச்சிருந்தா இது நடந்திருக்காது.
(அவனுடைய கண்கள் கலங்குகின்றன).
மனோகர்: சார்.. இனிமே என் மீது எந்தப் புகாரும் வராது. விடுதி டி.வி.யை நான் உடைச்சேன். அதுக்குத் தண்டனையா என் வீட்டு டி.வி. உடைஞ்சு போச்சு.

காட்சி - 4
இடம்: வீடு - மாந்தர்: அருணகிரி, மாரிமுத்து, மனோகர், தாய்

மாரிமுத்து: ஐயா.. விடுதியிலே தண்ணீர்ப் பிரச்னை. அதனால வீட்டுக்கு வந்தேன்னு சொன்னான்.
அருணகிரி: அதெல்லாம் சரியாயிடுச்சு.. நான் அவனை அழைச்சுகிட்டுப் போறேன்.
(மனோகரின் தாய் தேநீர் தருகிறார்)

(மாரிமுத்துவிடம்).. இந்தாங்க.. ஆயிரம் ரூபாய்.. மீதியை நீங்க போட்டு... புதுசா டி.வி. வாங்குங்க.
மாரிமுத்து அவரைக் கும்பிடுகிறார்... மனோகரின் உள்ளம் நெகிழ்கிறது..
"பள்ளி.. விடுதி.. ஆசிரியர்கள்.. காப்பாளர் என எல்லோரும் நல்லதையே செய்யும்போது.. நான் எதிரான வேலைகளில் ஈடுபடுவதா?' என நினைக்கிறான்.
 அருணகிரியோடு புறப்படுகிறான். ..மனோகருக்கு என்ன தண்டனையோ என விடுதி மாணவர்கள் நினைக்கிறார்கள். அருணகிரி எதுவும் சொல்லாமல் அவனை அங்கே விட்டுவிட்டுப் புறப்படுகிறார்.

காட்சி - 5
இடம்: விடுதி
மாந்தர்: தலைமை ஆசிரியர் தணிகைத் தம்பி, அருணகிரி, காப்பாளர், மாணவர்கள்.

(கூடத்தில் மாணவர்கள் குழுமி உள்ளனர். தணிகைத் தம்பி அவர்களின் நலன் விசாரிக்கிறார். ..பின்னர் நிகழ்ச்சி தொடங்குகிறது)

அருணகிரி: ...தொலைக்காட்சி நல்லதையும் காட்டும்.. தேவையில்லாததையும் காட்டும். எது நல்லதோ அதை மட்டும்தான் நாம் பார்க்க வேண்டும்.
 ..அதுபோலவே.. மனம் நினைப்பதையெல்லாம் மாணவர்கள் செய்யாமல்... நமக்கும் மற்றவர்களுக்கும் நன்மை தருவதை மட்டும் செய்யணும். அதுதான் முன்னேறும் வழி.
 .. நமக்காக அரசு கொண்டு வர்ற நல்ல திட்டங்களை... நம்ம அறியாமையால வீணாக்கிடக்கூடாது.
 ..இந்த விடுதியால் நான் பெருமை அடையணும்.. என்னால் இந்த விடுதி பெருமை அடையணும்னு ஒவ்வொரு மாணவனும் செயல்படணும்.
மாணவர்கள்: இனிமே... இங்கே எந்தத் தவறும் நடக்காம பார்த்துக்குவோம்.
அருணகிரி: பெருந்தன்மைக்கும் மன்னிக்கும் குணத்துக்கும் நம் தலைமை ஆசிரியர் ஒரு உதாரணம். இங்கே நல்ல மாற்றம் ஏற்படும்னு நம்புகிறார்.
 .. அவர் தன் பணத்தில்.. இந்த விடுதிக்கு ஒரு புதுத் தொலைக்காட்சிப் பெட்டியை வழங்கியிருக்கார்.
 ..இது உங்களுக்கு அவர் தரும் பரிசு..
 (மகிழ்ச்சியோடு கைகளைத் தட்டுகிறார்கள்)
.. தொலைக்காட்சியை.. மாணவர் மனோகர் இயக்கி வைப்பார். (அந்த அறிவிப்பைக் கேட்டு அவர்கள் வியப்புக்கு உள்ளாகிறார்கள். .. அவன் இயக்குகிறான். அவனிடம் ஏற்பட்ட மாற்றத்தை முகம் தெளிவாகக் காட்டுகிறது).
தொலைக்காட்சி: (பாடல் ஒலிக்கிறது)
....பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும்
அவரவர் எண்ணங்களே..
போகும் இடம் எதுவோ..
போய் வரும் உயரமும் புதுப்புது உலகமும்
அவரவர் எண்ணங்களே!

திரை
- பூதலூர் முத்து

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com