முத்துக் கதை: வாரிசு!

ஒரு ராஜாவுக்கு ரொம்ப வயசாயிடுச்சு! அவருக்குப் பிறகு ஆட்சி செய்வதற்கு அவருக்கு வாரிசு இல்லை! ராஜா ரொம்ப நல்லவரு! நல்லா ஆட்சி செய்தாரு!
முத்துக் கதை: வாரிசு!

ஒரு ராஜாவுக்கு ரொம்ப வயசாயிடுச்சு! அவருக்குப் பிறகு ஆட்சி செய்வதற்கு அவருக்கு வாரிசு இல்லை! ராஜா ரொம்ப நல்லவரு! நல்லா ஆட்சி செய்தாரு! அவரோட ஆட்சியிலே யாருக்கும் குறையில்லாம பார்த்துக்கிட்டாரு! ஆனா என்னதான் சிறந்த முறையிலே ஆட்சி செஞ்சாலும் ஜனங்களுக்குக் குறை இல்லாம இருக்குமா? முடிஞ்ச வரைக்கும் எல்லாரோட குறையையும் தீர்க்க முயற்சி செஞ்சாரு. 

தனக்குப் பிறகு ராஜ்ஜியத்தை ஆள பொறுப்பான, புத்திசாலியான, வீரமும் வலிமையும் இருக்கிற வாலிபனைத் தேடிக்கிட்டு இருந்தாரு. லேசான காரியமா அது? ஒரு திறமை இருந்தா இன்னொண்ணு இருக்காது! ராஜாவுக்கு ரொம்ப கவலையா ஆயிடுச்சு! 

அப்ப அவருக்கு ஒரு யோசனை ஏற்பட்டது! தானே சொல்வதுபோல ஒரு வாசகத்தை எழுதி அதை ஊர் பூரா தண்டோரா போட ஏற்பாடு செஞ்சாரு! தண்டோரா சத்தம் கேட்டு மக்கள் கூடினாங்க....

"அன்புடைய தாய்மார்களே! பெரியோர்களே!....மன்னரின் அறிவிப்பு!.... உங்கள் அனைவருக்கும் வணக்கம்! இந்த ராஜ்ஜியத்தின் மன்னனான நான் உங்களுக்கு அறிவிப்பது என்னவென்றால்.... நான் இதுவரை சிறந்த முறையில் ஆட்சி செய்திருந்தாலும், உங்களுக்கு ஏதாவது குறை இருக்கும்! அவைகளை நிறைவேற்ற இப்பொழுது நான் சித்தமாயிருக்கிறேன்! உங்கள் குறைகளை உங்களுக்கென்று வழங்கப்படும் ஓலையில் எழுதி அருகில் இருக்கும் பெட்டியில் போட்டுவிடுங்கள்..... ஒரு வாரத்திற்குள் அவற்றைப் படித்துப் பின் அவைகளுக்கான தீர்வுகள் மக்களவையில் நிறைவேற்றப்படும்!...இது சத்தியம்!''

இதைக்கேட்ட மக்கள் ஆர்வத்தோடு ஓலையில் பிரச்னைகளை எழுதிப் பெட்டியிலே போட்டாங்க!

ஒரு வாரத்தில் அரசவை கூடியது. மன்னரின் வருகைக்காக மக்கள் காத்திருந்தாங்க! 

கம்பீரமாக அரசவையில் மன்னர் நுழைஞ்சாரு! 

மன்னர் மக்களவையில், "உங்கள் குறைகளை நான் பார்த்தேன்...., அவைகள் விரைவில் நிறைவேற்றப்படும்....மேலும் நம் நாட்டிற்கு எனக்குப்பின் வாரிசு இல்லை! அதற்கும் நீங்கள் எழுதிய விண்ணப்பத்திலிருந்தே தீர்வு கிடைத்து விட்டது!....''

மக்கள் மன்னனை ஆர்வத்தோட ஆச்சரியமா பார்த்தாங்க! 

மன்னர் தொடர்ந்து, "நீங்கள் எல்லோரும் உங்கள் குறைகளை எழுதியிருந்தீங்க....அதிலே உங்கள் வாழ்க்கைக்கான வசதிகளைப் பெருக்கி வளமோட வாழ வழி கேட்டிருந்தீங்க...உங்க உடல் நலம், உங்கள் குழந்தைகளின் கல்வி, செல்வம், குடும்ப நலம், பற்றிய பிரச்னைகள் இருந்தன....ஆனால் சிலம்பரசன் என்ற ஒரு வாலிபன் மட்டும் நமது ராஜ்ஜியத்தின் குறைகளைச் சுட்டிக்காட்டியிருக்கிறான்! அதில் நமது நாட்டின் பாதுகாப்பு, தொழில்கள் முன்னேற்றம்....,நீர்வளத்தைப் பெருக்குவது...., கல்விச்சாலைகள் பெருக்க வேண்டியதன் அவசியம், வைத்தியசாலைகள் ஊருக்கு ஊர்.....என்று நாட்டின் பொதுத் தேவைகளையும், அவற்றை நிறைவேற்றும் வழிமுறைகளையும் எழுதிப் பெட்டியில் போட்டிருந்தான்! சிறந்த திட்டமிடலும், அறிவுக்கூர்மையையும் பெற்றிருக்கிறான் அவன்! அவனையே தற்போது உங்கள் மன்னனாக இந்த நன்னாளில் அறிவிக்கிறேன்! அந்த வாலிபன் சபையில் இருக்கிறானா? இருந்தால் இங்கு என்னருகே வரவும்....''அப்படீன்னு கூப்பிட்டாரு!

சபையில் இருந்த சிலம்பரசன் மேடையிலே ஏறினாரு! இளைஞனா கம்பீரமா இருந்தாரு! அடக்கமாகவும் இருந்தாரு! மக்கள் ஆரவாரமா கை தட்டினாங்க! சிலம்பரசன் மன்னனை வணங்கிப் பின் மக்களையும் வணங்கினாரு, ராஜாவும் சிலம்பரசனுக்கு மகுடத்தைச் சூட்டினாரு! (ராஜாவா ஆகப்போறாரு இல்லே....இனிமே மரியாதையாத்தான் கூப்பிடணும்)

அப்புறம் என்ன......அந்த நாடு இப்போ செல்வச் செழிப்போட அமைதியா அமர்க்களமா அமோகமா இருக்கு!
-ச.மணிகண்டன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com