கருவூலம்: நாமக்கல்  மாவட்டம்

நாமக்கல் மாவட்டத்தின் முதன்மையான சுற்றுலாத்தலம்! நாமக்கல்லிலிருந்து 25கி.மீ. தொலைவு சமவெளிப் பகுதியில் பயணித்தால் மலை அடிவாரத்தை
கருவூலம்: நாமக்கல்  மாவட்டம்

சென்ற இதழ் தொடர்ச்சி....
சுற்றுலாத் தலங்கள்!
கொல்லிமலை!

நாமக்கல் மாவட்டத்தின் முதன்மையான சுற்றுலாத்தலம்! நாமக்கல்லிலிருந்து 25கி.மீ. தொலைவு சமவெளிப் பகுதியில் பயணித்தால் மலை அடிவாரத்தை அடையலாம்! அதன் பின்னர் மலை மீது 70 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய 42 கி.மீ. தூரத்தைக் கடந்து கொல்லி மலையை 
அடையலாம்! 
 பசுமை மாறாக் காடுகள் நிறைந்த இந்த மலைப்பகுதி சுமார் 280 ச.கி.மீ. பரப்பளவும், 1000மீ முதல் 1300 மீ உயரமும் கொண்டது! சங்க காலத்தைச் சேர்ந்த கடைஏழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி இம்மலைப் பகுதியை ஆட்சி செய்துள்ளார். 

கொல்லிப் பாவை!
 இந்த மலையில் வீற்றிருக்கும் கொல்லிப்பாவை  (எட்டு கை அம்மன்) என்கிற தெய்வம் பதினைந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்குள்ளதாக சித்தர்களின் ஓலைச் சுவடிக் குறிப்புகளில் உள்ளது. 
 முன் காலத்தில் இருந்த (கிறிஸ்து பிறப்பதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்) குமரிக் கண்டத்தில் பாவைக்கு 9 கோயில்கள் இருந்துள்ளன. அதில் 8 கோயில்கள் ஆழிப் பேரலை (சுனாமி) வந்தபோது நிலப்பகுதிகள் கடலில் மூழ்கியதால் அழிந்து போனதாகவும் கொல்லிமலை பாவைக்கோயில் மட்டும் இருப்பதாகவும் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டுள்ளது!

பழம் பெருமை!
சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, நற்றிணை, ஐங்குறுநூறு, போன்ற தமிழ் இலக்கிய நூல்களில் கொல்லி மலை பற்றிய குறிப்புகள் உள்ளன. 
ராமாயணத்தில் சுக்ரீவன் ஆட்சி செய்ததாகக் குறிப்பிடப்படும்  "மதுவனம்" என்னும் மலைப்பிரதேசம் இதுவாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மேலும் அர்த்த சாஸ்திரம் நூலினை எழுதிய சாணக்கியர் இம்மலைப் பகுதியில் பிறந்து வளர்ந்து, பின்னர் வட இந்தியாவின் தட்ச சீலத்திற்குச் சென்றிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
 
அறப்பாளீஸ்வரர் கோயில்!

 கொல்லிமலையில் உள்ள அறைப்பள்ளி என்ற பகுதியில் இந்த கோயில் இருக்கிறது. இந்த ஆலயம் வல்வில் ஓடி கட்டியது. இதற்குச் சான்றாக சங்க காலத்தில் இயற்றப்பட்ட "அறப்பாளீஸ்வரர் சதகம்" என்ற நூல் உள்ளது.  திருஞானசம்பந்தர் தன்னுடைய "úக்ஷத்திரக் கோவையில் இந்தக் கோயிலைக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் தற்போது உள்ள ஆலயம் 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 
 இக்கோயிலைத் தவிர இம்மலைப் பகுதியில் "எட்டு கை அம்மன்" (கொல்லிப்பாவை), பெரிய சாமி கோயிலும் உள்ளன.

ஆகாய கங்கை அருவி! 
 கோயிலை அடுத்து 150 அடி உயரத்தில் இருந்து ஐந்து நதிகளின் கூடலான அய்யாறு நதி ஆகாய கங்கை அருவியாய் ஆரவாரமாய் இறங்குகிறது. வெள்ளியை உருக்கி ஊற்றியதைப்போல் மழைக்காலத்தில் கீழிறங்கும் இந்த அருவியின் அழகு கண்கொள்ளாக் காட்சியாகும். அருவிக்குச் சற்று தள்ளி சித்தர்கள் தவம் செய்த குகைகள் உள்ளன. 
  இம்மலைப்பகுதியில் அரியூர் சோலை, குண்டூர் நாடு, புளியன் சோலை என மூன்று ரிசர்வ் வனப்பகுதிகள் உள்ளன. 
  இவற்றைத் தவிர இங்கு சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில்  உருவாக்கப்பட்ட தாவரவியல் பூங்கா,  மூலிகைப் பண்ணை மற்றும் பழத்தோட்டங்களும் உள்ளன.
 மலை மேலே ஏறும்போதே பாதையின் இருமருங்கிலும் பசுமையான உயர்ந்த மரங்கள், அதிலும் குறிப்பாக மிளகுக்கொடி சுற்றிய சில்வர் ஓக் மரங்கள் என ரம்மியமான காட்சிகளை காணலாம். மலைமேலே இருந்து பரந்த வானத்தையும், பசுமையான சுற்றுப்புறத்தையும் பார்த்து ரசிக்க சிக்குப் பாறை, செல்லூர் நாடு என இரண்டு காட்சி முனைகளும், தொலைநோக்கி கூடமும் இருக்கிறது. இங்கு நின்று தாழ்வாக மிதந்து செல்லும் மேகங்கள் நம்மை வருடிச் செல்வதை உணர்ந்து ரசிக்கலாம்!
இங்கு வல்வில் ஓரி சிலையும், படகு சவாரி செய்வதற்கான படகுத் துறையும் உள்ளன.  ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் வல்வில் ஓரி விழாவும் நடத்தப்படுகிறது. இம்மலைக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சுற்றுலா வருகின்றனர். 

நாமகிரி மலையும் கோட்டையும்!
 நாமக்கல் மாவட்டம் வரலாறு மற்றும் ஆன்மிகப் பெருமை மிக்க சுற்றுலாத் தலம்! நாமக்கல் என்ற பெயருக்குக் காரணமான ஊர் நடுவே இருக்கும் நாமகிரி பாறை 65மீ. உயரமும், ஒரு கி,மீ, க்கும் அதிகமான சுற்றளவும் கொண்டது. இப்பாறையின் உச்சி மீதுதான் 10 மீ உயரமும், சுமார் ஒன்றரை ஏக்கர் சமதளப் பரப்பும் கொண்ட நாமகிரிக் கோட்டை இருக்கிறது. இக்கோட்டையை பாளையக் காரர் கட்டினார் என்றும் ராமச்சந்திர நாயக்கர் கட்டினார் என்றும் இருவேறு விதமாகக் கருதப்படுகிறது. 
 கோட்டைக்குள் செல்ல பாறையின் தென்மேற்குப் பகுதியில் பாறையைச் செதுக்கி ஏற்படுத்திய சிறிய படிக்கட்டுகள் உள்ளன. கோட்டை ஒரே சீராக வெட்டப்பட்ட நாமகிரி மலையின் பாறைத்துண்டுகள், செங்கற்கள், மற்றும் சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்டப்பட்டுள்ளது. கோட்டைக்குள் ஒரு கோயிலும், மசூதியும் உள்ளன. 
 திப்பு சுல்தான் சிறிது காலம் இங்கு மறைந்திருந்து, பின் கிழக்கிந்தியக் கம்பெனியாரை எதிர்த்துப் போரிட்டுள்ளார். அவர் காலத்திற்குப் பின் பிரிட்டிஷார் வசம் கோட்டை இருந்தது. தற்போது இந்தியத் தொல்லியல் துறையினரின் பாதுகாப்பில் சுற்றுலாத் தலமாகி விட்டது. 

குடைவரைக்கோயில்கள்!
 நாமகிரிப் பாறையின் பக்க வாட்டில் இரண்டு குடைவரைக் கோயில்கள் இருக்கின்றன. இவை அதியமான் வம்சத்தைச் சேர்ந்த மன்னன் குணசீலன் என்பவரால் 7ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இவர் பல்லவர்களுடன் திருமண சம்பந்தம் செய்து கொண்ட பின்னர் அவர்களின் பாணியில் இக்கோயிலைக் கட்டியுள்ளார். 
 பாறையின் கிழக்கு பகுதியில் உள்ள அரங்கநாதர் சந்நிதியில் விஷ்ணு பாம்பரசன் ஐந்து தலைகளை உடைய பாம்பரசன் கார்கோடகன் மீது படுத்தவாறு காட்சியளிக்கிறார்! 
 பாறையின் மேற்குப் பகுதியில் உள்ள நரசிம்மர் கோயிலின் நரசிம்மர் சிலை பாறையினைக் குடைந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் கோயிலின் மண்டபங்களும், பிற சந்நிதிதிகளும் பின்னாளில் கட்டப்பட்டவை. அம்பாள் நாமகிரி தாயார் தனியாக கட்டப்பட்ட சந்நிதிதியில் எழுந்தருளியுள்ளார். கணித மேதை ராமானுஜர் நாமகிரித் தாயாரின் தீவிர பக்தராக இருந்துள்ளார். 
 ஸ்ரீபுரந்ததாசர் பாடிய புகழ் பெற்ற பாடலான,  "சிம்ஹ ரூபநாபா ஸ்ரீஹரி'  என்ற பாடல் இத்தல நரசிம்மர் மீது பாடப்பட்டது.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்!
புகழ் பெற்ற இந்த ஆலயம் பாறையின் மேற்குப் பக்கம் நரசிம்மர், நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரே உள்ளது. 
 இந்த ஆஞ்சநேயர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி, வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். 18 அடி உயரத்தில் ஒற்றைக் கல்லினால் ஆன இந்த ஆஞ்சநேயர் மேற்கூரை இல்லாமல் வெயில் மழை பட நிற்கிறார். 
 இங்குள்ள கோட்டை  மாரியம்மன் கோயிலும் பெயர் பெற்றதே! இவற்றைத் தவிர சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக கோட்டையின் கிழக்கே  படகுத் துறையுடன் கூடிய நேரு பூங்காவும், தென்மேற்கில் செல்லப்ப கவுண்டர் பூங்காவும் சுற்றுலாப் பயணிகள் சற்று இளைப்பாறி, பொழுது போக்கும் வகையில் அமைந்துள்ளது. 
 1934 இல் மகாத்மா காந்திஜி இக்கோட்டைக்கு அருகில்தான் பொதுக்கூட்டத்தில் பேசினார். 

திருச்செங்கோடு காந்தி ஆசிரமம்!
 இந்த காந்தி ஆசிரமம் திருச்செங்கோடு அருகே புதுப்பாளையம் கிராமத்தில் உள்ளது. கிராம சுயராஜ்ஜியத்தை ஏற்படுத்தும் நோக்கில் 1925இல் ராஜாஜி அவர்களால் தொடங்கப்பட்டது. இதனை தந்தை பெரியார் அவர்கள் திறந்து வைத்தார். 
 காந்திக்கு மரியாதை செலுத்தும் வகையில் தொடங்கப்பட்ட முதல் ஆசிரமம்! இங்கு 1925 மற்றும் 1934 ஆம் ஆண்டு என இருமுறை காந்திஜி இங்கு வந்து தங்கியிருந்துள்ளார். அப்பொழுது அவர் தன் கையினால் எழுதிய குறிப்புகள் இங்கு உள்ளன. 
அதே போல் நேரு, லால்பகதூர் சாஸ்திரி, காமராஜர் உள்ளிட்டோரும் இங்கு வந்துள்ளனர். இவை தொடர்பான புகைப்படங்கள், அவர்கள் கையால் எழுதிய குறிப்புகளும்கூட இங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறது.  இந்த ஆசிரமம் மூலம் தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு, கல்வி, மருத்துவம், குடிநீர் போன்ற பல்வேறு சமூக சீர்திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் கதர் கிராமத் தொழில் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மாவட்டம் தோறும் கடைகள் அமைத்து விற்பனை செய்யப்படுகின்றன. 

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில்
 சிவன் தன் மனைவியாகிய சக்தியை தன் உடலின் சரிபாதியாக ஏற்றுக் கொண்டு  மாதொரு பாகனாகக் காட்சி தரும் புகழ்பெற்ற இக்கோயில் குன்றின் மீது அமைந்துள்ளது. இந்த மலை செந்நிறத்தில் உள்ளதால் ஊரும் திருச்செங்கோடு என்று பெயர்  பெற்றது. 
முன் காலத்தில் இந்த ஊர் திருக்கொடி மாடச் செங்குன்றலூர், திருச்செங்கோட்டான்குடி, என்ற பெயர்களில் இருந்துள்ளது.  சிலப்பதிகாரத்தில் இவ்விடம் நெடுவேல்குன்று என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மலையின் உச்சியில் கிழக்கு நோக்கி செங்கோட்டு வேலவர் சந்நிதியும், மேற்கு நோக்கி அர்த்தநாரீஸ்வரர் சந்நிதியும் உள்ளன. முதலில் இம்மலைமீது வேலவன் சந்நிதியே கட்டப்பட்டது. 
 இத்தல இறைவன் மாதொருபாகன் ஆண், பெண் இணைந்த வடிவில் 6 அடி உயரத்தில் வெள்ளை பாஷாணத்தால் ஆன முழு திருமேனியாக காட்சியளிக்கிறார்.  இவருக்கு பாதி வேஷ்டி, பாதி புடவை என அலங்காரம் செய்யப்படுகிறது. இந்த ஆலயத்தில் நம்மாழ்வாரால் பாடப்பெற்ற ஆதிகேசவ பெருமாள் சந்நிதியும் உள்ளது. 
 திருஞானசம்பந்தர் திருநீலகண்டபதிகம்  இயற்றியது இத்தலத்தில்தான்! முத்துசாமி தீட்சிதர், "அர்த்த நாரீஸ்வரர் குமுத கிரியா'' பாடல்களை எழுதியுள்ளார். 
பழமையான சுவர்கள், மண்டபங்கள் மற்றும் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த தூண்கள் என மலை மீது அழகு மிளிர கோயில் அமைந்துள்ளது. பராந்தகச் சோழன், கங்கை கொண்ட சோழன், விஜய நகரப் பேரரசர்கள், மைசூர் அரசர்கள் மற்றும் நாயக்கர்கள் காலத்துக் கல்வெட்டுகள் இங்குள்ளன. மலை மேல் செல்வதற்கு 1256  படிகள் கொண்ட பாறையும் வாகனங்கள் செல்லும் சாலையும் உள்ளன. மலைப்பாதையில் 60 அடி நீளம் கொண்ட பாம்பின் சிற்பம் மலைமீது செதுக்கப்பட்டுள்ளது!
 பழமையான புகழ் பெற்ற இந்த கோயிலுக்கு சொந்தமான உற்சவ மூர்த்தி தற்போது அமெரிக்காவின் "க்ளீவ்லேண்ட் அருங்காட்சியகத்தில்''  உள்ளது. 
 எண்ணற்ற பழமையான சிவாலயங்கள் இருந்தபோதும், இறைவன் மாதொருபாகனாக முழு திருமேனியுடன் காட்சியளிப்பது இத்தலத்தின் சிறப்பு! 

மேலும் சில ஆலயங்கள்!
 தாத்தகிரி முருகன் கோயிலும், கபிலர் மலை விநாயகர் ஆலயமும், நைனா மலை வரதராஜர் பெருமாள் கோயிலும் நாமக்கல் மாவட்டத்தின் பழமையான பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலங்களாகும்.

பிற சுற்றுலாத் தலங்கள்!
ராசிபுரத்திற்கு 8 கி.மீ. தூரத்தில் உள்ள பரும்பள்ளி அருவி, வாசலூர்பட்டி படகுத்துறை, ஜோடர்பாளையம் அணை போன்றவையும் இங்குள்ள சுற்றுலாத் தலங்களாகும்!
முற்றும்

தொகுப்பு: கே.பார்வதி, திருநெல்வேலி டவுன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com