கருவூலம்: அரியலூர் மாவட்டம்

தமிழகத்தின் மத்திய பகுதியில் உள்மாவட்டமாக உள்ள அரியலூர் மாவட்டம் முதலில் 2001, ஜனவரி 1-ஆம் தேதி பெரம்பலூர் மாவட்டத்தில்
கருவூலம்: அரியலூர் மாவட்டம்

தமிழகத்தின் மத்திய பகுதியில் உள்மாவட்டமாக உள்ள அரியலூர் மாவட்டம் முதலில் 2001, ஜனவரி 1-ஆம் தேதி பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து பிரிந்து தனி மாவட்டமாக உருவானது. பின் 15 மாதங்களில் (31-3-2002) பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் 2007-இல் மீண்டும் பிரித்து தனி மாவட்டமாக உருவானது.

பண்டைய சோழ நாட்டின் ஒரு பகுதியாகிய இம்மாவட்டம் 1949 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. இதைச் சுற்றிலும் கடலூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் மாவட்டங்கள் உள்ளன. நிர்வாக வசதிக்காக அரியலூர், உடையார்பாளையம், செந்துறை என்னும் மூன்று வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் எல்லைக்குள் 2 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அரியலூரே (நகராட்சி) இதன் தலைநகரமும், பெரிய நகரமுமாகும்.

கடந்த காலம்: லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இந்நிலப்பகுதி கடலுக்கடியில் இருந்துள்ளது. பின்னர் ஏற்பட் சீதோஷ்ண நிலை மற்றும் புவியியல் மாற்றங்களால் கடல்நீர் கிழக்கு நோக்கி உள்வாங்கிவிட்டது. இந்த மாற்றத்தின்போது கடற்கரையிலும், கடலுக்குள்ளும் வாழ்ந்த பல வகையான உயிரினங்களும், தாவரங்களும் மண்ணுக்கடியில், சேற்றுக்குள் புதைந்து போனது. இவை காலப்போக்கில் கல்படிமங்கள் ஆகி போனது.

இந்த மாற்றம் நிகழ 15 மில்லியன் ஆண்டுகளுக்கு மேலானது. இங்கு பலவகையான மரங்கள் மற்றும் மிருகங்களின் கல் படிமங்கள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மற்றும் நின்னியூர் பகுதிகள் இத்தகைய கல்படிமங்களின் கருவூலமாகவே உள்ளது. இங்கு இந்திய டைனோசர் இனமான "ராஜாசரஸ்'  (Rajasurus) முட்டைகூட கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்கு கிடைக்கும் ஏராளமான கல்படிமங்களினால் இம்மாவட்டம் பலரும் அறிந்த இடமாக உள்ளது.

வரலாற்றுப் பின்னணி: (சரித்திரச் சிறப்பு)
  இந்த மாவட்டம் வளமான வரலாற்றுச் சிறப்பு கொண்டது. வரலாற்றுக்கு முந்தைய பழங்கற்காலம், புதுகற்காலம் போன்ற காலங்களிலேயே இப்பகுதியில் மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்களாக அக்காலத்திய ஆயுதங்கள், முதுமக்கள் தாழிகள்  மண்கலயங்கள் போன்றவை கிடைத்துள்ளன.

சங்க காலத்தில் (கி.மு.500 - கி.பி.300) உறையூர் சோழர்களும், கொல்லிமலை ஒரியும் இப்பகுதியை ஆட்சி செய்துள்ளனர். சங்க கால சோழர்களின் செம்பு நாணயங்கள்கூட அரியலூரில் கிடைத்துள்ளன. பல்லவ பேரரசு காலத்தில் (கி.பி.6 முதல் 9-ஆம் நூற்றாண்டு) அதன் ஒரு பகுதியாகவும் இருந்துள்ளது.

ஆதித்ய சோழன் (871-907) முதல் மூன்றாம் ராஜேந்திர சோழன் வரையிலான இடைக்கால சோழர்களின் 450-க்கும் அதிகமான கல்வெட்டுகள் இங்கு உள்ளன. உடையார்பாளையம் தாலுகாவில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகரமாகக் கொண்டு 16 சோழ மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர்.

இவர்களையடுத்து பாண்டியர்களும், ஹெளசாளர்களும் (Hoysalas), விஜயநகரப் பேரரசர்களும், பாளையக்காரர்களும் இப்பகுதியை நிர்வகித்துள்ளனர்.
மராத்திய மன்னர் வீரசிவாஜி திருமழப்பாடியில் சிறிது காலம் தங்கியிருந்துள்ளார்.

ஹைதர் அலியின் காலத்திற்குப்பின் பாளையக்காரர்கள் பிரிட்டிஷாருக்குக் கட்டுப்பட்ட ஜமீன்தார்களாக மாறி இருந்துள்ளனர். இவர்களே நாடு சுதந்திரம் அடையும் வரை இப்பகுதியை நிர்வாகம் செய்துள்ளனர்.

நீர்வளம் 
 வடபகுதியில் வெள்ளாறும், தென் பகுதியில் கொள்ளிடமும் இம்மாவட்டத்திற்கு வளம் சேர்க்கிறது. மேலும் பல ஏரிகளும் குளங்களும் இம்மாவட்டத்தில் உள்ளன.

விவசாயம்:  இங்கு விவசாயமே முக்கிய தொழில். இங்குள்ள திரமானூர், தா.பழூர், திருமழப்பாடி உள்ளிட்டவை டெல்டா பகுதிகளாகும். ஆனால் ஜெயம்கொண்டம், செந்துறை, ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகள் வானம் பார்த்த பூமியாகவும் உள்ளது. முந்திரி, கம்பு, நெல், சோளம், நிலக்கடலை, கரும்பு, கொத்தமல்லி போன்றவை இங்கு பயிரிடப்படுகிறது.

கனிம வளம்
 இம்மாவட்டம் முன்பு கடலாக இருந்து நிலமாக மாறியதால், தற்போது கனிம வளம் மிகுந்துள்ளது. கால்சியம்,  இரும்பு, அலுமினியம் உள்பட வேதிப்பொருள்கள் பல கொண்ட கடல் அடி வண்டல், இன்று உருமாறி சுண்ணாம்பு கல், ஜிப்சம், நாடியூல்ஸ் (படிகவகை பாறைகள்) என நிலத்தடியில் நிறைந்து உள்ளன.

அரியலூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் 60 கோடி டன் சுண்ணாம்பு படிவம், ஒரு கோடி டன் ஜிப்சம் படிவம் இருக்கிறதாம். அதனால் இப்பொழுது இங்கு ஏறக்குறைய 5 ஆயிரம் ஹெக்டேர் வரையிலான நிலம் கனிமச் சுரங்கங்களாக உள்ளன.

மேலும் ஜெயங்கொண்டான் பகுதியில் நெய்வேலிக்கு அடுத்தபடியாக நிலக்கரி அதிகம் உள்ளது. இங்கு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவும் கூட இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது ஜெயங்கொண்டம் அனல்மின் திட்டத்திற்கான பூர்வாங்கப் பணிகள் நடைபெறுகிறது.

தொழில் வளம்!
  அரியலூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனிமங்கள் நிறைந்துள்ளதால்,  தமிழகத்திலேயே அதிகமான சிமெண்ட் தொழிற்சாலைகள் இங்குள்ளது. டான்செம், ராம்கோ, டால்மியா, செட்டிநாடு, இந்தியா சிமெண்ட் உள்ளிட்ட 8 பெரிய சிமெண்ட் தொழிற்சாலைகள் உள்ளன. மேலும் 160-க்கும் மேற்பட்ட கல் சுரங்கங்களும் இங்கு உள்ளது. அரியலூர் "சிமெண்ட் சிட்டி'  என்ற சிறப்புப் பெயரும் பெற்றுள்ளது.

ஆனால் தற்போது இங்கு இத்தொழிற்சாலைகளால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததுடன், காற்று மாசும் மிக அதிகமாகி உள்ளது.

இவற்றைத் தவிர கீழப்பளூரில் தனியார் சர்க்கரை ஆலை ஒன்று உள்ளது. மற்றபடி இம்மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க தொழிற்சாலைகள் எதுவும் இல்லை.

உடையார்பாளையம் பருத்தி சாகுபடிக்கும், நெசவுக்கும் பெயர் பெற்றது.

சுற்றுலா தலங்கள்!

கங்கைகொண்ட சோழபுரம்!
  தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திர சோழன். இவர் 1022-இல் கிழக்கு கடற்கரை பிரதேசத்தை வென்று, கங்கை வரை தன் வெற்றிக்கொடியை நாட்டினார். இந்த வெற்றியினால் "கங்கை கொண்ட சோழன்' என்ற பட்டப்பெயர் பெற்றார்.

மேலும் இவ்வெற்றியின் அடையாளமாக "கங்கைகொண்ட சோழபுரம்' என்ற ஊரினையும், "கங்கைகொண்ட சோழீஸ்வரம்'  என்ற சிவன் கோயிலையும், கங்கைகொண்டசோழப்பேரேரி (சோழ கங்கம்) என்கிற பெரிய ஏரியையும் உருவாக்கினார்.

ராஜேந்திரனுக்கு ஒப்பாரும், மிக்காரும் இல்லை என்று பெருமையுடன் பேசப்பட்ட ராஜேந்திர சோழர் காலத்தில்தான் சோழ நாட்டின் தலைநகரமாக கங்கைகொண்ட சோழபுரம் ஆனது. இவ்வூர் 13-ஆம் நூற்றாண்டு வரை சுமார் 256 ஆண்டுகள் சோழர்களின் தலைநகரமாக பொலிவுடன் திகழ்ந்தது. அன்றைய தலைநகரம் இன்று உடையார்பாளையம் வட்டத்தில் கங்கைகொண்ட சோழபுரம் என்ற கிராமமாக உள்ளது.

ராஜேந்திர சோழனால் நிர்மாணிக்கப்பட்ட இக்கோயிலைப் பற்றியும், ஊரைப் பற்றியும் கருவூர்த் தேவரின் திருவிசைப்பா, ஜெயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி, ஒட்டக்கூத்தரின் மூவருலா ஆகிய இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன. மேலும் பல்வேறு இடங்களில் கிடைக்கப்பெற்ற செப்பேடுகளிலும் காணப்படுகின்றன.

இவற்றைத் தவிர கோயிலைச் சுற்றி நடத்தப்பட்ட அகழ்வாய்வுகள் மூலம் கிடைத்த முடிவுகள் அந்நாளில் இவ்வூரின் சிறப்புக்கு ஆதாரமாக உள்ளது. இப்பொழுதும் இதைச் சுற்றியுள்ள ஊர்களில் உள்ள கோயில்களில், போருக்குச் சென்றபோது எடுத்து வரப்பட்ட சாளுக்கிய, கலிங்க கலைப் பாணியில் அமைந்த சிற்பங்கள் காணப்படுகின்றன.

கங்கைகொண்ட சோழீஸ்வரம் (சிவன் கோயில்)
  தஞ்சையைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயில் போன்ற தோற்றத்துடன் இக்கோயிலும் கட்டப்பட்டுள்ளது.

இந்த ஆலயத்தில் அனைவரையும் கவரும் வண்ணம் ஆலய விமானம் அமைந்துள்ளது. மாடக்கோயில் என்று அழைக்கப்படும் அமைப்பிலான இவ்விமானம் 180 அடி உயரமும், எட்டு பட்டை வடிவில் 7 தளங்களைக் கொண்டது. தமிழகத்தின் இரண்டாவது உயரமான விமானம் இதுதான்.

கோயிலானது இரு வாசல்கள், கருவறை, அர்த்த மண்டபம், இடைநாழி, மணி மண்டபம், மகா மண்டபம்,  முன் மண்டபம், நந்தி மேடை என அமைக்கப்பட்டுள்ளது.

கருவறையில் 13 அடி உயரமும், 20 அடி சுற்றளவும் கொண்ட ஒரே கல்லில் செதுக்கப்பட்ட லிங்கம், 45 அடி சுற்றளவு கொண்ட ஆவுடையார் மேல் பொருத்தப்பட்டுள்ளது. பழமையான லிங்கங்களில் உலகின் மிகப்பெரிய லிங்கம் இதுதான். சுமார் 6 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் பெரியநாயகி அம்மன் பிரகாரத்தில் காட்சியளிக்கிறார்.

கோயில் முழுவதும், காணும் இடமெல்லாம், பார்த்தவர்களை மலைத்துப் போக வைக்கும் அழகிய அரிய சிற்பங்கள் கண்களுக்கு விருந்தாக உள்ளது. இவற்றில் கருவறை தேவ கோட்டங்களில் காணப்படும் சிற்ப வடிவங்களும், சூரிய பீடமும் (சூரியனின் தேர் போன்று ஒரே கல்லில் வடிக்கப்பட்ட நவகிரகங்கள்) குறிப்பிடத்தக்கவை. மேலும் நடனமாடும் கணபதி, ஆடவல்லான், ஞான சரஸ்வதி, 10 அடி உயர துவார பாலகர்கள், ஹரிகரன், கணக்கு பிள்ளையார் என எண்ணற்ற அழகிய தெய்வ வடிவங்களும் காட்சியளிக்கின்றன.

இந்த ஆலயத்தின் கர்ப்பக்கிரகம் சந்திரகாந்தக் கல்லால் ஆனது. அதனால் வெளியே வெப்பமாக இருக்கும்போது கர்ப்பக்கிரகம் குளிர்ச்சியாக இருக்கும். வெளியே குளிராக இருந்தால் உட்பகுதி வெப்பமாக மாறிவிடும்.

ராஜேந்திர சோழர் இங்குள்ள துர்க்கை மங்கள சண்டி அம்பாளிடம் தன் வாளை வைத்து வணங்கிவிட்டுத்தான் போருக்குச் செல்வார் என்று வரலாறு கூறுகிறது.

இக்கோயிலில் ஐப்பசி மாதம் நடைபெறும் அன்ன அபிஷேகம் மிகச்சிறப்பு வாய்ந்தது. சிவலிங்கத் திருமேனிக்கு 108 மூட்டை அரிசியை அன்னமாகச் சமைத்து அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

அக்காலத்திலேயே மன்னர் ராஜேந்திர சோழர் வட இந்தியாவிலிருந்து கங்கை நீரைக் கொண்டு வந்து இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்வித்தார்.

அதேபோன்று இந்த ஆண்டு (2017) பிப்ரவரி 2-ஆம் தேதி கங்கை நீரைக் கொண்டு மகாகும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது.

ராஜேந்திர சோழருக்குப் பின்வந்த சோழ மன்னர்கள், பாண்டிய மன்னர்கள், விஜயநகர மன்னர்கள், உடையார் பாளையக்காரர்கள் என பலரும் இக்கோயிலைப் போற்றிப் பராமரித்துள்ளனர்.

இன்று வரலாற்றுச் சிறப்பும், வழிபாட்டுச் சிறப்பும் உடைய இந்த ஆலயம் மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறையால் போற்றிப் பராமரிக்கப்படுகிறது. தமிழக இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் நித்ய பூஜை முதலியன செய்யப்பட்டு வழிபாட்டுத் தலமாகவும் சிறப்பாக விளங்குகிறது. இதனை 2004-இல் உலக பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
(தொடரும்)
தொகுப்பு : கே. பார்வதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com