கருவூலம்: நாமக்கல் மாவட்டம்

தமிழகத்தின் மத்தியப் பகுதியில் உள்ள உள்மாவட்டங்களில் நாமக்கல் மாவட்டமும் ஒன்று. 1997இல் சேலம் மாவட்டத்திலிருந்து பிரிந்து தனி மாவட்டமாகச் செயல்படத் தொடங்கியது.
கருவூலம்: நாமக்கல் மாவட்டம்

தமிழகத்தின் மத்தியப் பகுதியில் உள்ள உள்மாவட்டங்களில் நாமக்கல் மாவட்டமும் ஒன்று. 1997இல் சேலம் மாவட்டத்திலிருந்து பிரிந்து தனி மாவட்டமாகச் செயல்படத் தொடங்கியது.
இதன் எல்லையை ஒட்டி சேலம், திருச்சிராப்பள்ளி, கரூர், ஈரோடு, மாவட்டங்கள் சூழ்ந்து உள்ளன. காவிரி ஆறு இம்மாவட்டத்தில் இருந்து ஈரோடு, கரூர், மாவட்டங்களைப் பிரிக்கும் எல்லைக்கோடாக இருக்கிறது.

3428 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், பரமத்தி, வேலூர், சேத்தமங்கலம், குமாரபாளையம், கொல்லிமலை என ஏழு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் எல்லைக்குள் ஆறு சட்டமன் தொகுதிகள் உள்ளன. நாமக்கல் நகராட்சியே இதன் தலைநகரமாகும்.

நாமக்கல் நகராட்சி
ஊர் நடுவில் உள்ள நாமகிரி மலை எனப்படும் பெரும் பாறையினால் நாமக்கல் என்று பெயர் பெற்றது. ஆனால் பழைய கல்வெட்டுக்களில் இவ்வூரின் பெயர் ஆரைக்கல் என்றுள்ளது.
ஆசியாவில் முதன்முதலில் நாமக்கல் நகராட்சியே ஐ.எஸ்.ஓ 14001}}2004 தரச் சான்றிதழினை சுற்றுச் சூழலை சிறப்பாக நிர்வாகம் செய்து மேம்படுத்தியதற்காகப் பெற்று உள்ளது.

இச்சான்றிதழ் குடிநீர் வழங்குதல், திடக் கழிவு மேலாண்மை, கழிவு நீரினை வெளியேற்றும் முறைகள், நகர திட்டமிடல் போன்ற பல செயல்பாடுகள் சிறப்பாக இருந்ததற்காக அளிக்கப்பட்டுள்ளது. மேலும் குப்பை இல்லா நகரம் என்ற சிறப்பினையும் பெற்றுள்ளது.

வரலாற்றுப் பின்னணி!
முற்காலத்தில் கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. சங்க காலத்தில் தகடூர் அதியமான் வம்சத்தினரும், கொங்கு சோழர்களும் ஆட்சி செய்துள்ளனர்.

14ஆம் நூற்றாண்டில் சேர, சோழ, பாண்டியர்களின் வீழ்ச்சிக்குப் பின் ஹெüசாளர்கள், விஜயநகரப் பேரரசர்கள், மதுரை நாயக்க மன்னர்களும் ஆட்சி செய்துள்ளனர்.

மதுரை நாயக்க மன்னர், திருமலை நாயக்கர் காலத்தில், அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ராமசந்திர நாயக்கர் மற்றும் கெட்டி முதலியார் என்னும் இரு பாளையக்காரர்கள் நிர்வாகம் செய்தனர்.

1635க்குப் பின் பிஜப்பூர் சுல்தானும், மைசூர் மன்னர்களும் கைப்பற்றினர். திப்பு சுல்தானின் வீழ்ச்சிக்குப் பின் பிரிட்டிஷார் வசம் வந்தது.

முதலில் மதராஸ் மாகாணத்திற்கு உட்பட்ட திருச்சி மாவட்டத்துடனும், பின்னர் சேலம் மாவட்டத்துடனும் இணைந்த பகுதியாக இருந்தது.

மலைவளம்
இங்குள்ள கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாக கொல்லி மலை உள்ளது. மேலும் சில தனித்தனியான மலைகளும், குன்றுகளும், அவற்றின் சரிவுகளும், இடையேயான சில பள்ளத்தாக்குகளும், மலையடிவாரங்களும் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு பகுதிகளில் பரவலாக தனி அழகுடன் காட்சியளிக்கிறது. எல்லையை ஒட்டி ஓடும் காவிரியும், கொல்லி மலைப்பகுதியில் தோன்றும் அய்யாறும்தான் இங்குள்ள நதிகள்.

விவசாயம்!
பயிர்த்தொழிலே மாவட்டத்தின் முதன்மையான தொழில். பருவமழையும், கிணறுகளும் குளங்களும்தான் முக்கியமான நீர் ஆதாரமாக உள்ளன.

மழை மறைவு பிரதேசம் என்பதால் நன்செய் பயிர்கள் சில பகுதிகளில் மட்டும் பயிரிடப்படுகிறது. புன்செய் பயிரிகளே அதிகம் விளைகிறது.

நெல், வாழை, கரும்பு, சோளம், கம்பு, ராகி, பனிவரகு, குதிரை வாலி, சாமை, கொள்ளு, வரகு, தினை, துவரை, உளுந்து, தட்டைப் பயிறு, வெற்றிலை, பாக்கு, மரவள்ளிக்கிழங்கு, ஆமணக்கு, எள், நிலக்கடலை என பலவகையான உணவுப்பொருட்களும், பருத்தியும் இங்கு பயிரிடப்படுகிறது. கொல்லி மலையில் பழங்கள், காபி, டீ, ஏலக்காய், மிளகு போன்றவை சாகுபடி செய்யப்படுகிறது.

தொழில் வளம்!
சரக்கு ஏற்றிச் செல்ல உதவும் லாரி, டிரக், டிரெய்லர், டேங்கர், மற்றும் ஆழ்துளைக் கிணறு போட உதவும் ரிக் வாகனங்களின் உடல் கட்டுமான தொழிற்கூடங்களும், பட்டறைகளும் இங்கு ஏராளமாக உள்ளன. இந்தத் தொழிலில் நாமக்கல் பகுதியில் சுமார் 300 தொழிற்கூடங்களும், திருச்செங்கோட்டுப் பகுதியில் சுமார் 100 தொழிற்கூடங்களும், இவற்றைச் சார்ந்த உதிரிபாக உற்பத்தி மற்றும் பழுதுபார்த்தல் போன்ற தொழில்களில் சுமார் 350 தொழிற்கூடங்களும், ஈடுபட்டுள்ளன. கனரக சரக்கு வாகன உடல் கட்டுமானத்தில் இந்திய அளவில் பெயர் பெற்றது நாமக்கல் மாவட்டம்!

இந்தியாவில் இயங்கும் ஆழ்துளை கிணறு தோண்டும் இயந்திரத்துடன் கூடிய வாகனம் பெரும்பாலானவை திருச்செங்கோட்டில் கட்டமைக்கப்பட்டவைதான். திருச்செங்கோடு ரிக் யூனிட் கட்டுமானத்தில் இந்தியாவின் முன்னோடி நகரமாகத் திகழ்கிறது.

இந்த வாகனங்கள் உள்நாட்டின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்படுவதுடன், கென்யா, கானா, நைஜீரியா, ஓமன், சூடான், தான்சானியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

சரக்குப் போக்குவரத்து
தமிழகத்தில் நாமக்கல்லில் மட்டும் சுமார் 56,000 பதிவு செய்யப்பட்ட லாரிகள் உள்ளன. இதனால் மாநிலத்தின் சரக்கு போக்குவரத்தில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. தமிழகத்தின் லாரி உரிமையாளர்கள் சங்கம் இங்குதான் உள்ளது.

ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி
நாமக்கல்லில் உள்ள அசோக் லேலண்டின் ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியில் நவீன முறையில் தற்கால சாலை அமைப்பு மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பயிற்சியளிக்கப்படுகிறது. 25ஏக்கர் பரப்பளவில் அமைந்த இந்த பயிற்சி மையம்தான் இந்தியாவின் நவீன வசதிகளுடன் கூடிய முதல் பயிற்சி மையம் என்ற பெருமைக்குரியது.

கோழிப்பண்ணை
கோழி வளர்ப்பு மற்றும் முட்டை உற்பத்தி நாமக்கல் மாவட்டத்தின் முதன்மையான தொழில்களில் ஒன்று. 1500க்கும் அதிகமான கோழிப்பண்ணைகள் இங்குள்ளன. இவற்றின் மூலம் தினமும் சுமார் மூன்றரை கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழகத்தின் மொத்த முட்டை உற்பத்தியில் சுமார் 65% இங்குதான் உற்பத்தியாகிறது. முட்டை உற்பத்தியில் இம்மாவட்டம் இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது!

இங்கிருந்து முட்டைகள் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, ஆகிய அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. அத்துடன் தினமும் சுமார் 25 லட்சம் முட்டைகள் பக்ரைன், ஆப்கானிஸ்தான், ஓமன் ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகிறது.

இதனை சார்ந்த கோழி மற்றும் மாட்டு தீவன உற்பத்தி ஆலைகளும் 350க்கும் மேல் இங்கு இயங்குகிறது.

ஜவுளி உற்பத்தி
திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம், மற்றும் குமாரபாளையத்தில் கைத்தறி மற்றும் விசைத்தறிக் கூடங்கள் பல உள்ளன. இங்கு நெய்யப்படும் உயர்ரகத் துணிகள் பிற நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. மேலும் ராசிபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் கைத்தறியில் நெய்யப்படும் ராசிபுரம் பட்டுப் புடவைகள்' பெயர் பெற்றவை.

ஜவ்வரிசி தயாரித்தல்
மரவள்ளிக்கிழங்கிலிருந்து ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் தயாரிக்கும் நிறுவனங்கள் சேலத்திற்கு அடுத்தபடியாக இங்குதான் அதிகம் உள்ளன. சுமார் 350 நிறுவனங்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளன.

மேலும் சில தொழில்கள்!
பள்ளிப்பாளையம் ஷா காகித ஆலை, மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை, இந்தியா சிமென்ட் தொழிற்சாலையும் இங்குள்ள சில பெரிய நிறுவனங்கள். இவற்û தவிர கயிறு திரித்தல், கற்பூரம், சோப்பு தயாரித்தல் என பல வகையான தொழில்களுடன் பெரிய தொழிற்சாலைகளும் ஆயிரக்கணக்கான(சுமார் 14500) சிறு தொழிற்சாலைகளும் இம்மாவட்டத்தில் உள்ளன.

பேளுக்குறிச்சி சந்தை!
கொல்லி மலை அடிவாரத்தில் உள்ள இந்த சந்தை மலைப் பகுதியில் விளையும் மிளகு, சீரகம், ஏலக்காய் போன்ற மளிகை பொருட்களுக்கு தமிழக அளவில் பெயர் பெற்றது.
தொகுப்பு: கே.பார்வதி,
திருநெல்வேலி டவுன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com