ஹலோ பாட்டியம்மா!

"ஓர் எழுத்தாளரின் பிரபலமான நாவலைத் திரைப்படமாக எடுக்க விரும்பினார் ஓர் இளைஞர்.
ஹலோ பாட்டியம்மா!

பாட்டி: இன்னைக்கு ஒரு உண்மைக்கதை சொல்லப்போறேன். கேக்கறீங்களா?
பேரன், பேத்தி: எஸ்!  பாட்டி..!
பாட்டி: "ஓர் எழுத்தாளரின் பிரபலமான நாவலைத் திரைப்படமாக எடுக்க விரும்பினார் ஓர் இளைஞர். அந்த நாவலின் ஒவ்வொரு காட்சியையும் சித்திரங்களாக (ஸ்டோரி போர்டு) அந்த இளைஞரே வரைந்தார். பல தயாரிப்பாளர்கள் இளைஞர் வரைந்த ஸ்டோரி போர்டை பார்த்துப் பிரமித்தார்கள். ஆனால், திரைப்படத்துறையில் அனுபவம் இல்லாமல் இவர் எப்படிப் படம் எடுப்பாரோ? என்ற ஐயத்தினால் அவரைப் பலரும் நிராகரித்து வந்தார்கள். 
ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் எழுத்தாளரின் மனைவியிடம் சென்று, "அம்மா! அனுபவம் இல்லாத ஓர் இளைஞரிடம் உங்கள் கணவர் எழுதிய கதையின் உரிமையைத் தந்திருக்கிறீர்கள். தயவுசெய்து, அந்த உரிமையைத் திரும்பப் பெற்று என்னிடம் தாருங்கள். நான் பிரபல இயக்குநரை வைத்து அந்த நாவலை அழகாகப் படம் எடுக்கிறேன். கதையின் உரிமைக்காக நீங்கள் எவ்வளவு பணம் கேட்டாலும் தருகிறேன்.'' என்றார். மறைந்த எழுத்தாளரின் மனைவி அடக்கத்துடன் அதே சமயம் உறுதிபடக் கூறினார் "ஐயா... அந்த இளைஞரிடம் கொடுத்த உரிமையை மாற்றுவதற்கில்லை! அவர் புகழ் பெறுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நீங்கள் போகலாம்!'' என்றார். ஆசை காட்டிய தயாரிப்பாளர் ஏமாற்றத்துடன் திரும்பினார். 
அதேநேரத்தில், இளைஞரின் வீட்டில் இளைஞரின் தாயாரும், கர்ப்பிணியாக இருந்த இளைஞரின் மனைவியும் கவலையுடன் இருந்தனர். தன் மகனின் திரைப்படக் கனவு நனவாக வேண்டுமே என்று வேண்டிக்கொண்டிருந்தார் தாயார்.   
அப்போது, வந்தார் ஒரு நண்பர். "நண்பா, கடனும் கைமாத்துமாக ஒரு பத்தாயிரம் ரூபாய்க்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். அதை வைத்து பதினைந்து நிமிடம் ஓடக்கூடிய படத்தை எடுத்துவிடலாம். அதைத் திரையிட்டுக் காண்பித்தால் தயாரிப்பாளர்களுக்கு உன் திறமையின் மீது நம்பிக்கை ஏற்படும். நானே தயாரிப்பு நிர்வாகியாகவும் செயல்படுகிறேன்!'' என்று நம்பிக்கை விதைத்தார்.
தொடங்கியது வேலை! பலவித சிரமங்களுக்கிடையே நடிகர்- நடிகையர் தேர்வு, லொகேஷன் தேர்வு, முதல்கட்டப் படப்பிடிப்பு எல்லாம் சிறப்பாக அமைந்தன. இருந்த பணமும் தீர்ந்தது. ஒருநாள், படப்பிடிப்புக் குழுவினர் மதிய உணவு சாப்பிடப் பணம் இல்லை. கர்ப்பிணியாக இருந்த இளைஞரின் மனைவி, தயாரிப்பு நிர்வாகியிடம் கூறினாள் "அண்ணா... என் நகைகளைத் தருகிறேன். அடகு வையுங்கள். என் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு ஒருநாள் மட்டும் நகைகளை மீட்டுத் தாருங்கள்!'' என்றாள். இப்படிப் பல வகையிலும் சிரமப்பட்டு, கதையின் முக்கியக் காட்சிகளை எடுத்து, படத்தொகுப்பு செய்து, தயாரிப்பாளர்களுக்குப் போட்டுக்காட்டினார்கள். இந்தச் செலவுகளுக்காக இளைஞர் தான் வரைந்த ஓவியங்களையும், தான் சேகரித்து வைத்திருந்த அரிய இசைத் தட்டுகளையும் விற்றுப் பணம் திரட்டினார். இதற்கிடையே... தயாரிப்பாளர் கிடைக்காமல் அல்லல்பட்டு இரண்டு ஆண்டுகள் உருண்டு ஓடிவிட்டன. மகனின் திரைப்படம் நல்லபடியாக முடிந்தால்தானே அவன் திறமையை உலகம் அறியும் என்று சதா சர்வ காலமும் சிந்தித்த தாய்க்கு... ஒரு யோசனை தோன்றியது. மேற்குவங்க மாநிலத்தின் முதலமைச்சர் டாக்டர் பி.சி.ராய் காந்தியவாதி. கோட்டையில் முதல்வராக இருந்தாலும், வீட்டுக்கு வந்ததும் நோயாளிகளை கவனிக்கிறார். உதவி மனப்பான்மை உடையவர். அவரிடம் படச்சுருளைப் போட்டுக்காட்டினால் ஏதும் விடிவு காலம் பிறக்காதா? முதல்வரோடு நெருங்கிப் பழகிவந்த தமது குடும்ப நண்பரிடம் சென்று, "ஒரே ஒரு பிரிவியூ பார்க்க ஏற்பாடு செய்யுங்களேன்' என்று கேட்டார். அதன்படியே முதல்வர் பார்த்தார். மாநில அரசின் விளம்பரத்துறை படத்தின் தயாரிப்புப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது! அந்தப் படம்தான் "பதேர் பாஞ்சாலி'. அந்த இளைஞர்தான் "சத்யஜித்ரே'. உலகின் சிறந்த 10 படங்களில் ஒன்றாக இன்றும் திகழ்கிறது "பதேர் பாஞ்சாலி'. தன் வாழ்நாளில் 55 திரைப்படங்களை உருவாக்கிய சத்யஜித்ரேவுக்கு வாழ்நாள் சாதனைக்கான "ஆஸ்கர் விருது' 1992-இல் வழங்கப்பட்டது. அதே ஆண்டில் இந்தியாவின் உயர்ந்த விருதான "பாரத ரத்னா'வும் வழங்கப்பட்டது. (மார்ச்-27; உலகத் திரைப்பட தினம்).''
-ரவிவர்மா     
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com