கருவூலம்: கோயம்புத்தூர் மாவட்டம்!

பழைமையான கொங்கு நாட்டின் ஒரு பகுதியான கோயம்புத்தார் மாவட்டம் தமிழகத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.
கருவூலம்: கோயம்புத்தூர் மாவட்டம்!

பழைமையான கொங்கு நாட்டின் ஒரு பகுதியான கோயம்புத்தார் மாவட்டம் தமிழகத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. தமிழகத்தில் தொழில் துறையிலும், பொருளாதாரத்திலும் முன்னேற்றமடைந்த மாவட்டங்களில் இதுவும் ஒன்று!
 1804 இல் பிரிட்டிஷார் ஆட்சி காலத்திலேயே உருவாக்கப்பட்ட பழைமையான மாவட்டம். அன்றைய கோயம்புத்தூர் மாவட்டம் என்பது, தற்போதைய நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்கள், கரூர் மாவட்டத்தின் சில பகுதிகள், கர்நாடகத்தின் கொள்ளேகால் தாலுக்கா இணைந்து மிகப் பெரிய நிலப்பரப்பாக இருந்தது! தற்போது பல மாறுதல்களுக்குப் பிறகு 4850 ச.கி.மீ பரப்பளவு கொண்டதாக மாறிவிட்டது. 
 இன்றைய கோவை மாவட்டத்தின் மேற்கே கேரள மாநிலமும், பிற பகுதிகளில், நீலகிரி, ஈரோடு,திருப்பூர், திண்டுக்கல், மாவட்டங்களும் எல்லைகளாக உள்ளன. இது நிர்வாக வசதிக்காக கோவை வடக்கு, கோவை தெற்கு, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, சூலூர், கிணத்துக்கடவு, அன்னூர், மதுக்கரை, பேரூர் என பத்து வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது! இதன் எல்லைக்குள் பத்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. மாவட்டத்தின் தலைநகரமாகவும், பெரிய நகரமாகவும் கோவை என்று அழைக்கப்படும் கோயம்புத்தூர் மாநகரம் விளங்குகிறது. 

பழம் பெருமை!
 சங்க காலத்தில் கோவையின் பல பகுதிகள் அடர்ந்த வனமாகவும், பழங்குடி மக்களின் வசிப்பிடமாகவும் இருந்துள்ளன. அவர்களில் அதிக பலமும், அதிகாரமும் கொண்ட "கோசர்' இன மக்களின் தலைமை இடமாக இருந்த கோசம்புத்தூர்தான் இன்று கோயம்புத்தூர் என்று மாறியுள்ளது. இவர்கள் பற்றிய தகவல்கள் கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலப்பதிகாரத்திலும், சங்க இலக்கிய நூல்களிலும் காணப்படுகிறது. 
 மேலும் சங்க கால சேர மன்னர்கள், பாலக்காட்டுக் கணவாய் வழியாக இப்பகுதிக்குள் வந்து ஆட்சி செய்துள்ளனர். அக்காலத்தில் அரபிக் கடலோரம் உள்ள முசிறிக்கும், வங்கக் கடலோரம் இருந்த அரிக்கன் மேடுக்கும் இடையே பாலக்காட்டுக் கணவாய் வழியாக வணிகத் தொடர்பும் இருந்துள்ளது. கிரேக்கர்களுடன் இருந்த வணிகத் தொடர்புக்கு ஆதாரமாக பல ரோமானிய நாணயங்களும், பொருட்களும் இப்பகுதியில் கிடைத்துள்ளன. 
 இந்நிலப்பகுதியை முற்காலச் சோழர்கள், ராஷ்ட்ரகூடர்கள், சாளுக்கியர்கள், இடைக்கால சோழர்கள், பாண்டியர்கள், ஹொய்சாலர்கள், விஜய நகரப் பேரரசர்கள் உள்ளிட்ட பல அரச பரம்பரையினர் ஆட்சி புரிந்துள்ளனர். 
 10ஆம் நூற்றாண்டில் ராஜகேசரி பெருவழி என்னும் நெடுஞ்சாலை கோவை பகுதி வழியாக சென்றுள்ளது.
 17ஆம் நூற்றாண்டில் மதுரை நாயக்கர்கள் ஆட்சியின்போது, கொங்கு மண்டலத்தை 24 பாளையங்களாகப் பிரித்து பாளையக்காரர்கள் முறையை ஏற்படுத்தினர். 
 18ஆம் நூற்றாண்டில் மைசூர் மன்னர்களாகிய ஹைதர் அலியும், அவர் மகன் திப்பு சுல்தானும் இப்பகுதிக்குள் வந்த ஆங்கிலேயரை எதிர்த்தனர். 1799இல் திப்பு சுல்தான் மறைவுக்குப் பிறகு இப்பகுதி பிரிட்டிஷார் ஆட்சியின் கீழ் மதராஸ் பட்டினத்துடன் இணைந்தது. 
 ஆனாலும் 1801இல் கொங்கு பாளையக் காரரான தீரன் சின்னமலை மலபார் மற்றும் மைசூர் படைகளின் ஆதரவுடன் பிரிட்டிஷாரை எதிர்த்தார். போரில் வென்ற பிரிட்டிஷார் 1804இல் கோயம்புத்தூரை தலைநகரமாகக் கொண்டு கோயம்புத்தூர் மாவட்டத்தை உருவாக்கினர். 
 1848இல் கோயம்புத்தார் நகராட்சியாகவும், 1981இல் (அருகில் இருக்கும் சிங்காநல்லூரையும் இணைத்து) மாநகராட்சியாகவும் ஆனது. தற்போது கோவை மாநகரம் பெரிய ஜவுளி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், தகவல் தொடர்பு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவ மனைகள் அமையப் பெற்று, தமிழகத்தின் அதி வேகமாக வளர்ந்து வரும் இரண்டாவது பெரிய நகரமாகவும், இந்தியாவின் ஆறாவது பெரு நகரமாகவும் உள்ளது. 

மலை வளமும், வன வளமும்!
 கோவை மாவட்டத்தின் வளத்திற்கும் தட்பவெப்ப நிலைக்கும் சுற்றிலுமுள்ள மலைகளே காரணம். தெற்கே ஆனைமலை, வடமேற்கே குச்சுமலை மற்றும் நீலகிரி மலையின் சிலபகுதிகள், மேற்கே நீலகிரி மலை, வெள்ளியங்கிரி மலைகளும் உள்ளன. 
 இவற்றைத் தவிர குமரிக்கல், புதுக்கல், அஞ்சநாடு பள்ளத்தாக்கு, பொளம்பட்டி மலைகள், ஆசனூர், பருகூர், பால மலைகள் போன்ற பல மலைப்பிரதேசங்கள் உள்ளன. இம்மலைகள் 4000அடி முதல் 6000அடி வரை உயரத்துடன் வனப் பகுதியாகவும் உள்ளன.  மொத்த நிலப்பரப்பில் இருபது சதவீதத்திற்கும் அதிகமான பகுதி (1,69,720 ஹெக்டேர்) வனமாக மேற்கு மற்றும் வடக்குப் பகுதியில் இருக்கிறது.

இந்திரா காந்தி வன உயிரின சரணாலயம்!
 இந்த சரணாலயம் 850 ச.கி.மீ. பரப்புடன் ஆனை மலை வனப்பகுதியில் உள்ளது. இங்கு தரைக்காடுகள், புல்வெளிகளும் புதர்களும் கொண்ட வெட்டவெளிப் பகுதிகள், மழைக் காடுகள், இலையுதிர் காடுகள், ஆற்றோரக் காடுகள், மலையுச்சிப் புல்வெளிகள், சோலைக்காடுகள் என பலவகையான "உயிரின வாழ்விடங்கள்' உள்ளன. இதனால் பல வகையான தாவர வகைகளும் விலங்கினங்களும், பூச்சி வகைகளும் இங்கு காணப்படுகின்றன. 
 மேலும் இதனைச் சுற்றிலும் தொடர்ச்சியாகக் கேரளத்தின் வனப்பகுதிகள் உள்ளதால் இந்த சரணாலயத்தில் வாழும் விலங்குகளின் வாழ்விடச் சூழலுக்கும் இடம் பெயர்தலுக்கும் மற்றும் யானைகளின் வழித்தடங்களுக்கும் வசதியாக உள்ளது. 
 இந்த சரணாலயப் பகுதிக்குள் வேங்கைப் புலி, சிறுத்தை, செந்நாய், நரி, கரடி, யானை, வரையாடு, சோலை மந்தி, (சிங்க வால் குரங்கு) மரநாய், பறக்கும் அணில், பல்வேறு வகையான பாம்புகள், உள்ளிட்ட பல வகையான உயிரினங்களும், 218 வகையான பறவையினங்களும் இப்பகுதியில் வாழ்கின்றன. 

பாலக்காட்டுக் கணவாய்!  
 உயரமான நீலகிரி மலைக்கும், ஆனைமலைக்கும் இடையில் இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையின் மிகவும் உயரம் குறைந்த (140 மீ.உயரம்) பகுதிதான் பாலக்காட்டுக் கணவாய்.
25கி.மீ. நீளமும், 30 கி.மீ. அகலமும் கொண்ட இந்த கணவாய், கேரளத்தையும், தமிழகத்தையும் ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து மூலம் இணைக்கிறது. 
 கி.மு. 300 முதலே இரு பகுதி மக்களும் இந்த கணவாய் வழியாக இடம் பெயர்ந்து வாழ்ந்துள்ளார்கள். அந்நாட்களிலேயே முக்கியமான வணிக வழித்தடமாகவும் இருந்துள்ளது. இதன் வழியாக தென்மேற்கு பருவக்காற்று கோவைக்கு வருவதனால் தமிழகத்தின் பிற பகுதிகளைவிட கோவையில் வெப்பம் குறைவாக உள்ளது. ஆண்டு முழுவதும் மனதுக்கு இதமான கால நிலையும் நிலவுகிறது. பரபரவென வேகமாக வீசும் இக்காற்றினைக் கொண்டு காற்றாலை மின் உற்பத்தியும் நடைபெறுகிறது. 

நீர்வளம்!
ஆழியாறு!
 கோவை மாவட்டத்தில் இருக்கும் ஆனை மலையில் தோன்றி, கேரளத்தில் பாயும் கண்ணாடிப் புழா என்ற ஆற்றுடன் சங்கமிக்கும் சிறிய துணையாறு.

பவானி!
 கேரளத்தில் பாயும் 44 ஆறுகளில் கிழக்கு திசை நோக்கி திரும்பி பாயும் மூன்று ஆறுகளில் பவானியும் ஒன்று. தமிழகத்தின் நீலகிரி மலைப்பகுதியில் தோன்றும் இந்நதி ஆரம்பத்தில் மேற்கு நோக்கி சென்று, கேரளத்தின் அட்டப்பட்டி பள்ளத்தாக்கில் சுமார் 25 கி.மீ. தூரம் பயணித்து மீண்டும் தமிழகத்திற்குள் நுழைகிறது. எல்லையை கடந்து வரும் பவானி நீலகிரி அடிவாரம் வழியாக கோவை மாவட்டத்திற்குள் வருகிறது. இதுவரை மலை, மற்றும் பள்ளத்தாக்கு பகுதிகளிலேயே பவனி வந்த பாவானி இம்மாவட்டத்தின் மேட்டுப் பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி கிராமத்தில்தான் சமவெளிப் பகுதிக்கு வருகிறது. 
 இங்கிருந்து ஜடையம்பாளையம், சிக்கதாசம்பாளையம், மேட்டுப்பாளையம், வழியாக வரும் பவானியின் கரையோரம் அமைந்துள்ள 15 பெரும் தொழிற்சாலைகளால் நதி இங்கிருந்தே பெருமளவில் மாசுபடத் துவங்குகிறது. 
 சிறுமுகை வழியாக இம்மாவட்டத்தை கடந்து ஈரோடு மாவட்டத்திற்குள் செல்கிறது. 

சிறுவாணி!
 பவானி நதியின் துணையாறு இது. கேரளத்தின் அட்டப்பட்டி பள்ளத்தாக்கில் தோன்றி ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் அருகே குண்டாற்றுடன் இணைகிறது. சிறுவாணி ஆற்றுத் தண்ணீர் சுவையில் உலகின் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. 

சிறுவாணி அணை
 இந்நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சிறுவாணி அணை, கோவை நகரின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக கேரள மாநில எல்லைக்குள் 1973ஆம் ஆண்டு கேரள அரசால் கட்டப்பட்டது. இந்த அணையின் மேல் உள்ள சாலையில் இருபுறமும் உள்ள நுழைவு வாயில்கள் இரு மாநிலக் கட்டடக் கலையின் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் அழகுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

சிறுவாணி அருவி! 
 கோவை மாநகருக்கு 37கி.மீ. தூரத்தில் சிறுவாணி மலைப்பகுதியில் இருந்து சிறுவாணி நதி அருவியாகக் கீழிறங்குகிறது. அடர்ந்த கானகத்தில் தெளிவான நீருடன் வேகமாக இறங்கும் இந்த அருவி "கோவையின் குற்றாலம்' என்று கொண்டாடப்படுகிறது. 
 புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களான சிறுவாணி அணையும், மலை மீதுள்ள சிறுவாணி நீர்வீழ்ச்சியும் (இந்த அருவி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ளதால் அனுமதி பெற்று பகல் வேளையில் மட்டுமே செல்ல முடியும்)

நொய்யல் ஆறு!
 கோவை மாவட்டத்தில் வெள்ளியங்கிரி மலையில் தோன்றி திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைக் கடந்து 180 கி.மீ. தூரம் பயணித்து கரூர் மாவட்டத்தின் நொய்யல் கிராமத்தில் காவிரியில் கலக்கிறது.
 சங்க காலத்தில் "காஞ்சிமாநதி' என்றழைக்கப்பட்ட நொய்யல் ஆற்றின் கரையில்தான் கோவை மாநகரம் அமைந்துள்ளது. கோவையில் சாளுக்கிய மற்றும் சோழ மன்னர்கள் காலத்தில் இந்நதி நீரை ஆதாரமாகக் கொண்டு ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட 32 பெரிய குளங்கள் ஏற்படுத்தப்பட்டுப் பராமரிக்கப்பட்டுள்ளன. அந்நாட்களில் இப்பகுதி முழுவதுமே நொய்யல் ஆற்றின் துணையாறுகள், கால்வாய்கள், குளங்கள் என பரவலாக குறுக்கும் நெடுக்குமாக இருந்துள்ளது. 

பரம்பிக்குளம் ஆழியாறு!
 இத்திட்டம் கேரளம் மற்றும் தமிழக மாநில அரசுகளால் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் தமிழகத்தின் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களும், கேரளத்தின் சித்தூர் பகுதியும் குடிநீர் மற்றும் பாசன வசதி பெறுகிறது. மேலும் 185 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது. 
 இத்திட்டத்தின்படி ஆனைமலைப் பகுதியில் உற்பத்தியாகி, மேற்கு நோக்கிப் பாயும் (கேரளாவை நோக்கி) 6 ஆறுகளை அணை கட்டித் தடுத்து சமவெளியில் பாயும் இரண்டு ஆறுகளுடன் இணைத்து கிழக்கு நோக்கித் திருப்பி தமிழகத்தின் மூன்று மாவட்டங்களும் பாசன வசதி பெறுவதற்கு வகை செய்யப்பட்டுள்ளது. 
 கேரளத்தின் ஒப்புதல் மற்றும் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்ட இத்திட்டத்தின்படி கிடைக்கும் 50.5 டி.எம்.சி. நீரில் 30.5 டி.எம்.சி தமிழகத்திற்கும் 19.55 டி.எம்.சி. தண்ணீர் கேரளத்திற்கும் என பிரிக்கப்பட்டது. 
 இத்திட்டம் 1958இல் தொடங்கப்பட்டு 1962இல் நிறைவடைந்தது. இதன்படி பத்து அணைகள் கட்ட திட்டமிடப்பட்டது. ஆனால் மேல் நீராறு, கீழ் நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், துணைகடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியாறு, அப்பர் ஆழியாறு, திருமூர்த்தி என ஒன்பது அணைகள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆனை மலையாறு அணை மட்டும் கட்டப்பட வில்லை. இந்த அணைகளின் நீர்த்தேக்கங்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சுரங்கம் மற்றும் கால்வாய் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.
 இத்திட்டத்தின் அணைகள் அனைத்தையும் பராமரிப்பது தமிழக அரசின் பொறுப்பு. இதில் பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், துணைக்கடவு ஆகிய மூன்று அணைகள் எல்லையை ஒட்டி கேரளத்தின் நிலப்பகுதிக்குள் உள்ளது. 
(தொடரும்)

கே.பார்வதி, திருநெல்வேலி டவுன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com