கதைப் பாடல்

வித்தைக்காரன் தங்கமணி!வித்தைக் காரன் தங்கமணி 
கதைப் பாடல்

வித்தைக்காரன் தங்கமணி!
வித்தைக் காரன் தங்கமணி 
வீதியில் வித்தை பல காட்டி
கவர்ந்தே இழுத்தான் கூட்டத்தை
கண்டார்....மகிழ்ந்தார் கை தட்டி!

எரியும் பந்தம் தீ வளையம்
எளிதாய் எகிறி அவன் குதித்தான்!
விரியும் இமைகள் வியப்புடனே-தரை
விரிப்பில் சேர்ந்தன நாணயங்கள்!

அவனும் எடுத்தான் புதுவளையம்-பலர்
அதனை வளைத்திட நினைத்தார்கள்!
முயன்றார் ...கம்பியின் உறுதியினை 
மூச்சிரைப்பாலே அவர் உணர்ந்தார்!

அடிக்கும் உறுமியின் ஒலியுடனே-கையை
அனைவரும் தட்ட வளையத்தில் -மணி
உடலை நுழைத்து சில நொடியில்-நெளிந்து 
உருவிக்கொண்டு வெளி வந்தான்!

ஒருவன் அந்தக் கூட்டத்தில்
உற்றுப் பார்த்தான் அத்திறனை!
களவே அவனது தொழிலாகும்
கார் இருள் அதற்குத் துணையாகும்!

தங்க மணியை அருகழைத்தான் -" பணம்
தருவேன் உனக்கு ஆயிரத்தில் - இரவு
வருவாய் நானும் சொல்லுமிடம் - சொல்லும் 
வேலை செய்வாய் சில நிமிடம்!''

வந்தான் மணியும் நள்ளிரவு
வயிற்றில் இடுப்பில் கயிறு கட்டி
வாகாய்ச் சென்றான் மாடிக்கு! - உள்ளே 
வழியில் கம்பிக் கதவொன்று! - கள்வன் 

"கம்பியை வளைத்து நுழை'' என்றான்..
"கையைத் தட்டுக உறுமியுடன்....
....கம்பியை நொடியில் வளைத்திடுவேன்
காரியம் விரைவினில் முடித்திடுவேன்!''

தங்கம் சொன்னான் மணியாக - கள்வன் 
தலையில் அடித்துக் கொண்டானே!
தெருவில் வந்த காவலர்கள் - இருவரையும்
இழுத்துச் சென்றனர் சிறைச்சாலை!

உழைத்து வாழ்ந்தான் நிம்மதியாய்! - ஏனோ  
கயவன் கள்வன் வலை வீழ்ந்தான்!
கூடா நட்பு...., பேராசை -புதை
குழியென உணர்ந்தான் தங்கமணி!
-பூதலூர் முத்து

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com