மரம் பேசியது!

ஓர் அரசன் தனது தர்பார் மண்டபத்தை புதிதாக கட்ட விரும்பினான். அது வித்தியாசமாகவும், வியக்கும் வண்ணமாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பினான்.
மரம் பேசியது!

ஓர் அரசன் தனது தர்பார் மண்டபத்தை புதிதாக கட்ட விரும்பினான். அது வித்தியாசமாகவும், வியக்கும் வண்ணமாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பினான். தனது அரண்மனை வல்லுனர்களை அழைத்து ஆலோசனை நடத்தினான்.  தூண்கள் நல்ல பலமான மரத்தால் அமைய வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது!  "அப்படிப்பட்ட மரத்தைத் தேடிக் கண்டுபிடியுங்கள்'' என்று உத்தரவிட்டான்.
 அரண்மனைக்கு அருகிலேயே ஒரு மரம் இருந்தது. வளைவு, சுழிவு இன்றி நேராக ஓங்கி வளர்ந்திருந்தது.  அதன் கிளைகளில் கூட வளைவுகள் இல்லை. இதுதான்  மன்னர் கட்ட விரும்பும் தர்பார் மண்டபத்திற்கு பொருத்தமான மரம் என்று அதன் விபரங்களை மன்னரிடம் சொன்னார்கள்! "சரி,.....அந்த மரத்தையே வெட்டிக் கொண்டு வந்து நிலைத் தூணாக்கி கட்டடத்தை ஆரம்பிக்கலாம்! வேலை ஆரம்பமாகும்வரை மரத்தைச் சுற்றிக் காவலுக்கு சேவகர்களை நிறுத்துங்கள்!'' என்று ஆணையிட்டான் .
சேவகர்கள் மரத்தைச் சுற்றி நின்று கொண்டார்கள். அந்த மரத்தின் நிழல் பல சதுர மீட்டர்கள் குடை போல காட்சியளித்தது. அந்த மரத்தில் தெய்வம் இருப்பதாக சுற்றியுள்ளவர்கள் நம்பினர்.  மரத்தைத் தொழுது வணங்க வந்தவர்கள் சேவகர்கள் நிற்பதைப் பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பிப் போனார்கள். 
சுற்றிலும் காவலர்கள் இருப்பதைப் பார்த்து பறவைகள் நடுங்கியபடியே கீச்கீச்சென்று கத்தியபடி அலைந்தன. அவைகள் கட்டிய கூட்டிற்கு ஏதேனும் தீங்கு நேரிடுமோ என்று அஞ்சுவது போன்று இருந்தது அவைகளின் இரைச்சல்! 

 ஒருநாள் இரவு....
 மன்னன் அயர்ந்த நித்திரையில் இருந்தான். அவனது கனவில் மரம் தோன்றியது. மன்னனோடு பேசியது.....
 "மன்னா!.....என்னை வெட்ட வேண்டாம்!....'' என்றது.
"ஏன்? எனது புதிய தர்பார் மண்டபத்தைத் தாங்கிக் கொள்ளும்  தூணாக நீதான் இருக்கப்போகிறாய்!...அது உனக்குப் பெருமை இல்லையா?'' என்றான் மன்னன்.
"மன்னா! நான் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யவில்லை....மாறாக பல நன்மைகள் என்னால் ஏற்படுகின்றன. பல பறவைகள் தங்கள் இன்னிசைக் கச்சேரியை நடத்துவதற்கு நான் இடம் தருகிறேன்!....அவைகள் கூடுகளைக் கட்டி குஞ்சுகளுடன் மகிழ்ச்சியாக வாழ எனது கிளைகள் உதவுகின்றன!......சிலர் என்னை தெய்வமாக வழிபடுகின்றனர்....மேலும் வழிப்போக்கர்கள்...,உழைப்பாளிகள் எனது நிழலில் இளைப்பாறுகின்றனர்! தாங்கள் என்னை வெட்டி விட்டால்....பறவைகள் வருத்தத்திற்கு உள்ளாகும்! அணில்களும் சோகமாகி விடும்! வழிப்போக்கர்களுக்கும், உழைப்பாளிகளுக்கும் நிழல் இருக்காது! வழிபாடும் நின்று விடும்! யோசித்து முடிவு செய்யுங்கள்!...உங்கள் அதிகாரத்திற்கு முன்னால் நான் எம்மாத்திரம்? தாங்கள் தயவு காட்ட வேண்டும்.'' என்று கூறியது மரம்.
 தூக்கம் கலைந்து எழுந்தான் மன்னன்! தனது சேவகர்களைக் கூப்பிட்டான். "அந்த மரத்தை வெட்ட வேண்டாம்!...அரண்மனை மூலம் அதைப் பாதுகாக்க வேண்டும்!  நமது புதிய தர்பார் மண்டபத்தை கல் தூண் கொண்டு கட்டுங்கள்!''  என்று உத்தரவிட்டான்!

(மூலம் : "தி கிங்ஸ் ந்யூ பேலஸ்')

-ஆழ்வாநேரி சாலமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com