ஒரு சொல் இரு பொருட்கள்

காலை கதிரோன் தோன்றக் காணலாமேகாலை நொண்டி நடப்போர் சிலருண்டே;
ஒரு சொல் இரு பொருட்கள்

காலை கதிரோன் தோன்றக் காணலாமே
காலை நொண்டி நடப்போர் சிலருண்டே;
மாலை பூக்கும் மல்லி மலருண்டு
மாலை கட்ட மலர்கள் பலவுண்டே;

வேலை உடைய முருகன் மலையிலுண்டு
வேலை தேடி அலைவோர் நாட்டிலுண்டே;
 பாலை வழங்கும் பசுவும் வீட்டிலுண்டு
பாலை நிலத்தில் மணலே நிறையவுண்டே;

கட்டி வைக்கும் கன்றைப் பார்த்தலுண்டு
கட்டி உடலில் வந்தால் வலியுண்டே;
தட்டும் உணவை உண்ண உதவிடுமே!
தட்டும் கைகள் ஒலியைக் கொடுத்திடுமே!

கலையும் பார்த்தால் மகிழ்வை அளித்திடுமாம்!
கலையும் மணலைச் சேர்க்கும் காட்சியுண்டே;
படத்தைப் பார்த்தே மழலை படித்தலுண்டு
படத்தை எடுக்கும் நாகம் சுற்றலுண்டே;

சட்டம் படித்த அறிஞர் பலருண்டு
சட்டம் போட்ட படங்கள் வீட்டிலுண்டே;
கள்ளிச் செடியில் பூக்கள் பூத்தலுண்டு
கள்ளி என்றே பெண்ணை அழைத்தலுண்டே.

இராம. பரஞ்சோதி, சென்னை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com