முத்துக் கதை: கொட்டை!

இமயத்தில் இருந்து வந்த  முனிவர் தன் காலில் விழுந்த மன்னரையும் மகா ராணியையும் ஆசீர்வதித்தார்
முத்துக் கதை: கொட்டை!

இமயத்தில் இருந்து வந்த  முனிவர் தன் காலில் விழுந்த மன்னரையும் மகா ராணியையும் ஆசீர்வதித்தார்.
   பின்னர் தன் தோளில் தொங்கிய பையில் இருந்து ஒரு மாம்பழத்தை மன்னர் கையில் தந்து , "மன்னா..  இது பழுக்க இன்னும் பத்து நாளாகும்.  கனிந்ததும் சாப்பிடு.. வருகிறேன்..'
மன்னர் அதை அருகில் இருந்த அமைச்சர் கையில் தந்து "இதைப் பழுத்ததும் எடுத்து வாருங்கள்..'
அமைச்சர் அந்தப் பழத்தை வாங்கி தன் அங்கவஸ்திரத்தில் மூடி அடி படாமல் இல்லத்துக்கு எடுத்துச் சென்று தன் மனைவியிடம் தந்து அரிசிப் பானைக்குள் வைத்து மடக்கால் மூடச் சொன்னார்.

பத்து நாட்கள் கழித்து அமைச்சர் அதை எடுத்துப் பார்த்த போது இதுவரை அறிந்திராத மணம் வீசியது.  அதை அரிந்து துண்டுகளை ஒரு வெள்ளிக் கிண்ணத்தில் வைத்து மூடி மன்னரிடம் அளித்தார்.  மன்னர் அதைச் சுவைத்து மெய் மறந்தார்.  "ஆஹா! அமைச்சரே இப்படி ஒரு பழச் சுவையை என் வாழ்நாளில் ருசித்ததில்லை..என்ன மணம் என்ன சுவை!'' 
ராணியிடம் நீட்ட அவளும் தின்று பார்த்து வியந்தாள். இளவரசனும் தின்று மகிழ்ந்தான்.  கிண்ணம் காலியானது!
"அடடா.. அமைச்சர் பெருமானே.. உங்களுக்குத் தரலாம் என இருந்தேன்.. இளவல் தின்று தீர்த்துவிட்டானே..''
அமைச்சர் சிரித்தார்..  "மன்னா அதற்கும் ஒரு காலம் வரும்....அது வரை நான் காத்திருப்பேன்!.....''

இது நடந்து ஐந்து வருடங்கள் ஓடி விட்டன.
ஒரு நாள் அவையில் அமைச்சர் மற்றும் பிரதானிகளுடன்  அரசர் விவாதித்துக் கொண்டிருந்த போது ஒரு பணியாள் அமைச்சரிடம் ரகசியமாகக் காதில் சொல்ல அமைச்சர், "ம்.. கொண்டுவா கூடைகளை!'' என்றார்.
பத்து  பெரிய கூடைகளைத் தூக்கி வந்து இறக்கினார்கள்.
அந்தக் கூடைகள் உள்ளே மாம்பழங்கள்.   மணம் சபை முழுக்க நிரம்பியது.  எல்லோரும் வியக்க மன்னரிடம் ஒன்று ராணிக்கு ஒன்று என அங்கிருந்த அனைவருக்கும் பழங்கள் வினியோகிக்கப்பட்டன.  அதை ருசித்த அனைவரும் மகிழ்ந்தனர்!
மன்னர் வியப்புடன் அமைச்சரிடம், "அமைச்சரே .. இது சில  வருடங்களுக்கு முன் இமயத்தில் இருந்த வந்த ரிஷி தந்த பழம் போலச் சுவை மிகுந்து உள்ளதே!..... ஏது இத்தனை பழங்கள்..?''
அமைச்சர் புன்முறுவல் தவழ, "மன்னா.. .. முனிவர் தந்த பழத்தை என்னிடம் தந்து பழுத்ததும் எடுத்து வரச் சொன்னீர்கள்.  பழுத்ததும் அதன் வாசனையில் இருந்து அது கிடைத்தற்கரிய பழம் என அறிந்தேன்.  துண்டுகள் அரிந்த பின் கொட்டையை பாதுகாப்பாக  தோட்டத்தில் மண்ணில் ஊன்றி வளர்த்தேன்.  தகுந்த எருவிட்டு தண்ணீர் பாய்ச்சி ஜாக்கிரதையாக வளர்த்தேன்.. மரமாகி முதல் ஈட்டுப் பழங்களே இவை.  ஒரு பருவத்துக்கு மூவாயிரம் வரை காய்க்கும் திறன் கொண்ட மரம் அது.  மிகக் குறுகிய காலத்தில் வளர்ந்து காய்க்கும் வகை.  கொட்டைகளை விவசாயிகளிடம் தந்து களத்து மேடுகளில் பயிராக்கச் சொல்லி இருக்கிறேன்.  இனி எல்லோருக்கும் இந்தச் சுவை மிக்கப் பழங்கள் கிடைக்கும்!''
 மன்னர் வியந்தார்!
"ஆஹா.. நீங்கள் அல்லவோ உன்னதமானவர்.  ஒரு சீரிய பொருள் கிடைத்தால் அதை எல்லோருக்கும் கிடைக்கும் வண்ணம் செயலாற்றும் தங்களை எத்தனை போற்றினாலும் தகும்!'' என மன்னர் சொல்லியதும்  அவையில்  , "வாழ்க அமைச்சர் பெருமான்!'' என முழக்கம் எழுந்தது. 
அமைச்சர் வணக்கத்துடன் குனிந்து ஏற்றார் அந்த மரியாதையை.
 
-என் எஸ் வி குருமூர்த்தி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com