கருவூலம்: திண்டுக்கல் மாவட்டம்!

தமிழகத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், முன்பு மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. 1985-இல்தான் தனி மாவட்டமாக உருவானது. 
கருவூலம்: திண்டுக்கல் மாவட்டம்!

தமிழகத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், முன்பு மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. 1985-இல்தான் தனி மாவட்டமாக உருவானது. 
 6266 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட இந்த மாவட்டத்தினைச் சுற்றிலும் ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி மதுரை, தேனி, கோவை மாவட்டங்களும் மேற்கே  கேரள மாநிலமும் சூழ்ந்துள்ளன. 
 இம்மாவட்டம்  நிர்வாகத்திற்காக திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு, பழனி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், நத்தம், நிலக்கோட்டை, ஆத்தூர் என 9 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் எல்லைக்குள் 7 சட்ட மன்றத் தொகுதிகள் உள்ளன. திண்டுக்கல் மாநகரமே இம்மாவட்டத்தின் தலைநகரமாகும். இந்த ஊரின் நடுவே திண்டு (தலையணை) போன்ற பெரிய கல் ஒன்று இருப்பதால் திண்டுக்கல் எனப் பெயர் பெற்றது. இவ்வூரின் பழைய பெயர் "திண்டீஸ்வரம்' என்பதாகும்.

வரலாற்றுச் சிறப்பு!
 இன்று திண்டுக்கல் மாவட்டத்திற்குள் உள்ள திண்டுக்கல் பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் மற்றும் ஆத்தூர் பகுதிகள் முன்பு கொங்கு நாட்டின் பகுதிகளாகவும், நிலக்கோட்டை மற்றும் நத்தம் பகுதிகள் பாண்டிய நாட்டின் பகுதிகளாகவும் இருந்திருக்கின்றது. 
 நாயன்மார்களில் ஒருவரான அப்பர் பெருமான் தன் தேவாரப்பாடலில் இந்த நகரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். திண்டுக்கல் அக்காலத்தில் சேர, சோழ, பாண்டியர்களின் நாடுகளுக்கு எல்லையை ஒட்டிய நகரமாக இருந்துள்ளது. 
 முதல் நூற்றாண்டில் கரிகால் சோழன், பாண்டியர்களை வென்றதால் சோழர்களின் ஆட்சிப் பகுதியாகவும், 6-ஆம் நூற்றாண்டில் பல்லவர்களாலும், 9-ஆம் நூற்றாண்டில் மீண்டும் சோழர்களும் அதன் பின் விஜயநகரப் பேரரசின் உதவியுடன் பாண்டியர்களும் வென்று ஆட்சி செய்துள்ளனர். 
 1559-இல் மதுரை நாயக்க மன்னர்களின் எல்லை நகரமானது. இவர்களின் காலத்தில்தான் திண்டுக்கல் மலைக்கோட்டை கட்டப்பட்டது. அதன்பின் இப்பகுதியின் வரலாறு, இக்கோட்டையை மையமாகக் கொண்டதாகவே இருந்துள்ளது. 

திண்டுக்கள் மலைக்கோட்டை!
 திண்டுக்கல் நகரின் நடுவே உள்ள சிறுமலை போன்ற பெரிய பாறை மீது கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் கோயில் கட்டினார். இது 5 கடவுள்களுக்கான தனித்தனியான கருவறைகளுடன் ராஜராஜேஸ்வரி கோயில் என்ற பெயரில் இருந்துள்ளது. தற்போது கருவறைகளில் சிலைகளும் இல்லை...,வழிபாடும் இல்லை. மலைக்கோயில் மட்டும் காட்சிப் பொருளாக உள்ளது. 
 மலைக்கோட்டை 1605-இல் முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் என்னும் மதுரை நாயக்க மன்னரால் கட்டப்பட்டது. இவருக்குப் பின் வந்த இரு நாயக்க மன்னர்களும் கோட்டையை மேம்படுத்தி பலப்படுத்தினர். 
 1736-இல் சந்தாசாகிப் பிரிட்டிஷாரின் உதவியுடன் கோட்டையைக் கைப்பற்றினார். 1942-இல் மைசூர் மன்னரின் படையினர் திண்டுக்கல்லைக் கைப்பற்றினர். படைத்தளபதி மன்னரின் பிரதிநிதியாக நிர்வாகம் செய்யத் தொடங்கினார். இவருக்கு திண்டுக்கல் சீமையிலிருந்த 18 பாளையக்காரர்களும் கட்டுப்பட மறுத்ததால் தொடர்ந்து பல போர்கள் நடந்தன. 
 1755-இல் மைசூர் மன்னரின் பிரதிநிதியாக ஹைதர் அலி இங்கு வந்து போரிட்டு, அனைத்தையும் கட்டுப்படுத்தினார். அவரே மன்னரானபின் தன் பிரதிநிதியைக் கொண்டு இப்பகுதியை ஆண்டார். 
 ஹைதர் அலி காலத்தில் அவர் அனுமதியுடன் சிவகங்கை ராணி வேலு நாச்சியார் தன் தளபதிகளுடன் இங்கு அடைக்கலமாகத் தங்கியிருந்தார். 
 1783-இல் பிரிட்டிஷார் இதனை வென்றனர். பின்னர் திப்புசுல்தானுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி கோட்டை திப்புசுல்தான் கைவசம் வந்தது. இவர் காலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருந்துள்ளது. 
 ஆனாலும் 1788-க்குப் பிறகு இப்பகுதியை நிர்வகித்து வந்த பாளையக்காரர்களை அடக்கி, கிழக்கிந்தியக் கம்பெனியார் கோட்டையைக் கைப்பற்றினர்.  பிறகு, இதைத் தங்கள் ராணுவத் தளமாக்கி நிர்வாகம் செய்தனர். 
 அந்நாட்களில் தொடர்ந்து பலமுறை பாளையக்காரர்களுடன் போர் நடந்துள்ளது. அப்பொழுது கோபால் நாயக்கரே பாளையக்காரர்களுக்குத் தலைவராக இருந்தார். 1801-இல் அவரைக் கைது செய்து தூக்கிலிட்டனர். பின் நாடு சுதந்திரம் அடையும்வரை கோட்டை பிரிட்டிஷார் வசமே இருந்தது. 
 மலைக்கோட்டை சமதளத்திலிருந்து 900அடி உயரமும் 2.75 கி.மீ. சுற்றளவும் கொண்டது. பீரங்கிகளை வைப்பதற்கு வசதியாக இரண்டு சுற்று மதிற்சுவர், மிகப் பாதுகாப்பான வெடி பொருள் வைக்கும் அறை, அவசர காலத்தில் தப்பிக்கும் வழி, ஆலோசனை அறை, சமையல் அறை, சிறைச்சாலை, குதிரை லாயம், மழைநீர் சேமிப்பு வசதி என திட்டமிட்டு கட்டப்பட்டுள்ளது! கோட்டையினுள் 48 அறைகள் உள்ளன. 
 அடிவாரத்திலிருந்து பாறையின் உச்சிக்கு அந்நாட்களில் கற்சக்கரம் கொண்ட வண்டிகளில் கொண்டு சென்றதன் அடையாளமாக, மலை மீது  ஒரு அடி அகலத்துக்கு வெள்ளைக் கோடுகள் இன்றும் உள்ளன. பழமையின் அழகும், கம்பீரமும் கொண்ட இக்கோட்டை இன்று தொல்லியல் துறையினர் பாதுகாப்பில் சுற்றுலா தலமாக உள்ளது. 

கோட்டை மாரியம்மன் கோயில்!
 திப்புசுல்தான் காலத்தில் பாறையின் அடிவாரத்தில் ராணுவத்தினர் சிறு மடம் நிறுவி, மாரியம்மன் சிலை வைத்தனர். அதுவே இன்று கோட்டை மாரியம்மன் கோயில் என்ற பெயருடன் சிறப்புடன் விளங்குகிறது. 

கோபால் நாயக்கர் மணி மண்டபம்!
 பழனி அருகே உள்ள விருப்பாச்சி என்னும் ஊரினை ஆட்சி செய்த குறுநில மன்னர்தான் கோபால் நாயக்கர். ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர். 
 இவர் தலைமையில் செயல்பட்ட தீபகற்பக் கூட்டமைப்பு ஆங்கிலேயர்களுக்குப் பெரும் சவாலாக விளங்கியது! 1800-இல் நடந்த போரில் கோபால் நாயக்கர் பிடிபடாமல் தப்பி விட..., அவர் தலைக்கு அக்காலத்திலேயே ரூ 20,000 ஆயிரம் பரிசுத் தொகையை ஆங்கிலேயர்கள் அறிவித்தனர்.  பணத்திற்கு ஆசைப்பட்டு அவர் காட்டிக்கொடுக்கப்பட்டார்! 
 பிடிபட்ட கோபால் நாயக்கரை 1801-இல் ஒரு குளக்கரையில் புளியமரத்தில் தூக்கிலிட்டனர். அந்தக் குளம் கோபால சமுத்திரம் என்ற பெயரில் இன்றும் உள்ளது. தமிழக அரசு விருப்பாச்சியில் கோபால் நாயக்கருக்கு மணிமண்டபம் கட்டி இவருக்கு மகுடம் சூட்டி மரியாதை செய்துள்ளது. 

மலை வளமும், வன வளமும்! - பழனி மலைகள்!
 மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதி. ஆனால் கிழக்கு நோக்கி நீண்டுள்ளது. 2068 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட இம்மலைகள் கிழக்கு மேற்காக 65கி.மீ. நீளமும், வடக்கு தெற்காக 40கி.மீ. அகலமும் கொண்டது. 
 இதில் வெண்கொம்பு மலை, பெருமாள் மலை, வெள்ளரி மலை, சந்தனப்பாறை மலை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பிரசித்தி பெற்ற சிகரங்கள் உள்ளன. இந்த மலைக்கூட்டம் முழுவதும் புவியியல் ரீதியாக பழனி மலைகள் என்று அழைக்கப்படுகின்றன. 
 பழனி மலைகளின் பெரும்பகுதி திண்டுக்கல் மாவட்டத்திற்குள்ளேயே உள்ளன. இதன் மேற்குப் பகுதி திண்டுக்கல் - தேனி மாவட்டங்களுக்கு இடையிலான எல்லையாக உள்ளது. 
 இதன் மேற்கே ஆனை மலைகளும், கிழக்கே தமிழகத்தின் சமவெளிப் பகுதிகளும், தெற்கே கம்பம் பள்ளத்தாக்கும் வடக்கே கொங்கு நாடும் சூழ்ந்துள்ளன. இம்மலைகளின் தென் மேற்கு பகுதி 1800 முதல் 2500 மீ. உயரமும் கொண்டிருக்கிறது. 
 இந்தப் பழனி மலைகளில்தான் தமிழகத்தின் புகழ் பெற்ற தண்டாயுதபாணி  சுவாமி திருக்கோயிலும், கொடைக்கானலும் உள்ளன. 
 பழனி மலைப் பகுதியில் பெய்யும் மழையானது எண்ணற்ற நீரோடைகளாகவும், சிற்றாறுகளாகவும் கீழிறங்குகின்றன. இதனால் இம்மலைகளில் பீர் கோலா அருவி, வெள்ளி அருவி, மேல் பாலாறு அருவி, அஞ்சு வீட்டு அருவி, கீழ் பாலாறு அருவி, பூம்பாறை அருவி, பூம்பாறை அருவி, பாம்பருவி உள்ளிட்ட பல அருவிகள் உள்ளன. மேலும் மலையைச் சுற்றி குளங்களும் ஏரிகளும் சூழ்ந்துள்ளன. 
 இம்மலைச் சரிவுகளிலும், பள்ளத்தாக்குப் பகுதிகளிலும் அடர்ந்து உள்ள வனப்பகுதி பழனி மலை வனவிலங்கு சரணாலயம் மற்றும் தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 இவற்றைத் தவிர இம்மலைகளில் தேயிலைத் தோட்டங்கள்,  பழ மரத்தோட்டங்கள், தனியார் தங்கும் விடுதிகள், மலை வாழ் மக்களின் கிராமங்களும் உள்ளன.

பழனி மலை வனவிலங்கு சரணாலயம்!
 இந்த சரணாலயம் 736 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. இங்கு முட்புதர்க்காடு, இலையுதிர்க்காடு,  பசுமை மாறாக்காடு, ஈர இலையுதிர்க்காடு, மழைக்காடு, சோலைக்காடு, மலையுச்சி புல்வெளி என பல வகையான வன வாழ்விடங்கள் உள்ளன. 
இக்காட்டுப் பகுதியில் யானை, புலி, சிறுத்தை, செந்நாய், கரடி, வரையாடு, காட்டெருமை, நரை அணில், கடமான் போன்ற பாலூட்டிகளும், பல அரிய வகைத் தாவரங்களும், 100க்கும் மேற்பட்ட பறவையினங்களும் காணப்படுகின்றன. இங்கு நீலகிரி காட்டுப்புறா, நீலகிரி ரெட்டைக்காலி, குட்டை இறக்கையான் போன்ற ஓரிட வாழ் பறவைகளும் கூட உள்ளன!

சிறுமலை!
 கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் தொடர்ச்சியாக தெற்குப் பகுதியில் உள்ள உயரம் குறைவான பல மலைக்குன்றுகளில் சிறுமலையும் ஒன்று. இதனை ராமாயண காலத்தில் அனுமன் தூக்கிச் சென்ற சஞ்சீவி மலைகளில் இருந்து கீழே விழுந்த சிறு பகுதி எனக் கருதுகிறார்கள்.  
 திண்டுக்கல்லில் இருந்து 20கி.மீ. தூரத்தில் உள்ள இம்மலை கொடைக்கானலுக்கு அடுத்தபடியான மலைவாசஸ்தலமாக இருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1500 மீ. உயரம் கொண்ட இவ்விடம் சமவெளிப் பகுதிகளைவிட ஈரப்பதம் மிகுந்து குளிர்ச்சியாகவும், மரங்கள், சோலைகள் என கண்ணுக்கினிமையாக ரம்மியமான பசுமையுடன் சுற்றுலாப் பயணிகளை கவரும் வசீகரம் கொண்டது. 
 இங்கு அரிய வகை மூலிகைகள் உட்பட  சுமார் 900 வகையான தாவர வகைகளும், காட்டு மாடு, புள்ளிமான், மிளா, கேளை ஆடு, சருகுமான், செந்நாய், தேவாங்கு உள்ளிட்ட பல வகையான  வன விலங்குகளும், பறவைகளும் உள்ளன. 
 இம்மலைப் பகுதியிலிருந்து சந்தான வர்த்தினி ஆறு, சாந்தையாறு என இரு சிற்றாறுகள் தோன்றுகின்றன. இங்கு முப்பதாயிரம் ஏக்கர் பரப்பில் பல்வேறு வகையான பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. 
மீதி அடுத்த இதழில்...

தொகுப்பு: கே.பார்வதி, 
திருநெல்வேலி டவுன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com