முத்திரை பதித்த முன்னோடிகள் ஜம்ஷெட்ஜி டாடா!

இந்தியாவில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இரும்பு  எஃகுத் தொழிற்சாலை ஒன்றை இந்தியாவிலேயே ஏற்படுத்துதல்....
முத்திரை பதித்த முன்னோடிகள் ஜம்ஷெட்ஜி டாடா!

வாணிபத்தில் அதிக ஈடுபாடு கொண்ட அந்த இளைஞருக்கு நான்கு முக்கிய கனவுகள் இருந்தன.  அவை....
1. இந்தியாவில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இரும்பு  எஃகுத் தொழிற்சாலை ஒன்றை இந்தியாவிலேயே ஏற்படுத்துதல்....
2. மிகக் குறைந்த செலவில் சர்வதேசத் தரத்தினாலான கல்வி நிறுவனம் ஒன்றை இந்தியாவில் நிறுவுதல். அதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கு தரமான கல்வியளித்தல்.....
3. ஐந்து நட்சத்திர உணவு விடுதி ஒன்றை இந்தியாவில் அமைத்தல்....
4. சொந்தமாக மின்சார உற்பத்தியை ஏற்படுத்த நீர் மின்சக்தி நிலையம் ஒன்றை அமைத்தல்....! 
  அவர்தான் "இந்தியத் தொழில்களின் தந்தை' என்று அன்போடு அழைக்கப்பட்ட "ஜம்ஷெட்ஜி டாடா' ஆவார்! 1839-ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் நாள் குஜராத்தில் பிறந்த டாடாவின் தந்தை "நுசர்வன்ஜி டாடா' ..., தாயின் பெயர் "ஜீவன் பாய் டாடா' என்பதாகும். 
 1850-களில் ஏற்றுமதி வணிகத்தை கவனித்து வந்தார் டாடா.  1857-இல் சிப்பாய் கலகம் ஏற்பட்டது. இதனால் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்வதை ஆங்கிலேயே  அரசு தடை செய்தது.  எனவே ஆசியாவின் பிற நாடுகளில் தங்கள் தொழிற்சாலைகளை அமைத்து ஏற்றுமதியைத் தொடர நினைத்தார் டாடா.  முதற்கட்டமாக ஹாங்காங்கில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார்.
 1863-ஆம் ஆண்டு முடிவிற்குள் ஜப்பான், சீனா, போன்ற நாடுகளில் தொழிற்சாலைகளை நிறுவினார். இந்தியாவில் உற்பத்தியான பருத்திக்கு உலக அளவில் பெரும் வரவேற்பு இருந்தது. எனவே 1868ஆம் ஆண்டு பல பருத்தித் தொழிறாசாலைகளை நிறுவி அங்கு உற்பத்தி செய்த துணிகளை ஜப்பான், கொரியா, சீனா, போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தார். 
 தமது தொழிற்சாலையில் பணி புரிந்த தொழிலாளர்களைக் கனிவுடனும், கண்ணியத்துடனும், அக்கறையுடனும் நடத்தினார். உலகிலேயே தொழிலாளர்களுக்கு இலவச மருத்து வசதி இவரது தொழிற்சாலையில்தான் அறிமுகப்படுத்தப் பட்டது. தொழிலாளர்களின் மனைவி, குழந்தைகளுக்கும் இச்சேவை வழங்கப்பட்டது.  தொழிலாளர்களுக்கு விபத்துக் காப்பீடு, பணியிடைப் பயிற்சி, பென்ஷன் போன்ற நலத்திட்டங்களை வழங்கிய முன்னோடி இவரே! ஆங்கிலேய அரசு இவரது திட்டங்களையும் செயல் முறையையும் கண்டு வியந்தது!
 இரும்பு மற்றும் எஃகு உற்பத்தி பற்றி அறிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார் ஜம்ஷெட்ஜி டாடா.  ஐந்து நட்சத்திர உணவு விடுதி நிறுவுவது மட்டுமே அவரால் செயல்படுத்தப்பட்டது.1903-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ஆம் நாள் மும்பையில் "தாஜ் மஹால் ஹோட்டல்' அவரது திருக்கரங்களால் நிறுவப்பட்டது. தான் மிகவும் நேசித்த பிற கனவுகளை அவரால் நனவாக்க முடியவில்லை. காரணம் துரதிர்ஷ்ட வசமாக 1904-ஆம் ஆண்டு மே மாதம் 19-ஆம் நாள் ஜெர்மனியில் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது ஜம்ஷெட்ஜி டாடா காலமானார். 
 அவரது முற்றுப் பெறாத கனவுகள் யாவும் அவரது மகன்கள் திரு தோராப்ஜி டாடா மற்றும் திரு ரத்தன்ஜி டாடா ஆகியோரால் நிறைவேற்றப்பட்டன!

மேலும் சில சுவையான தகவல்கள்!
• "டாடா ஸ்டீல்' ஆசியாவின் முதல் மிகப் பெரிய மற்றும் உலக அளவில் ஐந்தாவது மிகப் பெரிய ஸ்டீல் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஆகும். 

• "டாடா ஸ்டீல்' நிறுவனத்தைத் தொடங்குவதற்கு முன்னோட்டமாக ஜம்ஷெட்ஜி அமெரிக்காவுக்குப் பயணம் செய்தார். 
ஏனெனில் அந்நாளில் அமெரிக்காவில்தான் அதிக அளவு இரும்பு எஃகுத் தொழிற்சாலைகள் இருந்தன. அங்கு அமெரிக்க அதிபர் "தியோடர் ரூஸ்வெல்ட்'டை சந்தித்தார். அவரது பரிந்துரையின் பேரில் "ஜூலியன் கென்னடி' என்ற கனிம வள வல்லுனர் இந்தியாவிற்கு வருகை புரிந்தார். இவரே தற்பொழுது உள்ள "ஜம்ஷெட்பூர்' நகரத்தை வடிவமைத்தவர் ஆவார். அதன் அந்நாளைய பெயர் "சாக்சி' (SAKCHI) என்பதாகும். டாடா மறைந்து 4 வருடங்களுக்குப் பிறகு ஜம்ஷெட்பூர் நகரம் நிர்மாணிக்கப்பட்டது.
1893-இல் ஜப்பானிலிருந்து வான்கூவருக்குப் பயணித்த கப்பலில் டாடாவும், விவேகானந்தரும் பயணித்தனர். நட்பு மலர்ந்தது! சில வருடங்களுக்குப் பிறகு தான் துவங்க இருக்கும் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு விவேகானந்தரை ஆலோசகராக இருக்குமாறு வேண்டினார்.  விவேகானந்தர் தன் சீடர் சகோதரி நிவேதிதாவை அனுப்பினார். ஆனால் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத் திட்டத்திற்கு அந்நாளைய வைசிராய் கர்சன் பிரபு அனுமதி அளிக்க வில்லை.  இருப்பினும் டாடாவின் கனவு அவரது மறைவிற்குப் பிறகு இந்திய அறிவியல் கழகம் உருப்பெற்றது!
 சொத்துக்கள் பலவற்றை விற்று, "இந்திய அறிவியல் கழகத்தை' (INDIAN INSTITUTE OF SCIENCE) பெங்களூருவில் அவரது மகன் திரு தோராப்ஜி டாடா 1911-ஆம் ஆண்டு நிறுவினார். இந்த நிறுவனத்தில்தான் நோபல் பரிசு பெற்ற இந்திய விஞ்ஞானி சர்.சி.வி.இராமன், ஹோமி ஜஹாங்கீர் பாபா, டாக்டர் விக்ரம் சாராபாய், டாக்டர் சி.என்.ஆர். ராவ்  போன்ற மிகச் சிறந்த விஞ்ஞானிகள் பணிபுரிந்தனர். 
தொடரும்....

தொகுப்பு: லக்ஷ்மி பாலசுப்ரமணியன், 
கடுவெளி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com