அரங்கம்: ஆண்டவன் அருள்!

எழுந்திருங்கம்மா. டாக்டர் வர்றார்.
அரங்கம்: ஆண்டவன் அருள்!


காட்சி-1     

இடம் - அரசு மருத்துவமனை,   மாந்தர் - டாக்டர், நர்ஸ், ரவி, பார்வதி

ரவி: அம்மா...
பார்வதி: என்னப்பா?
ரவி: எழுந்திருங்கம்மா. டாக்டர் வர்றார்.
(ரவியின் உதவியோடு சிரமத்துடன் மெல்ல எழுந்து உட்காருகிறாள் பார்வதி)
டாக்டர்: என்னம்மா, இப்ப எப்படி இருக்கு?
பார்வதி: பரவாயில்லை டாக்டர்.. 
(லொக்கு..லொக்கு!)
(டாக்டர் சார்ட்டைப் பார்வையிடுகிறார்.)
டாக்டர்: பீ.பி., ஷுகர் லெவல் எல்லாம் நார்மலாத்தான் இருக்கு. (நர்ஸிடம் திரும்பி) இவரை நாளைக்கு டிஸ்சார்ச் பண்ணிடுங்க. அதற்கான ஏற்பாடு செஞ்சிடுங்க.
நர்ஸ்: சரிங்க டாக்டர்.
(டாக்டர் அடுத்த பெட்டுக்கு நகர்ந்துவிடுகிறார். ரவி மீண்டும் பார்வதியை மெதுவாகப் படுக்கவைக்கிறான்.)
பார்வதி: ஏம்பா, ராத்திரி பகல்னு பார்க்காம என்னோடவே இருக்கே, இன்னைக்கு உனக்கு எக்ஸாம் ஆச்சே, போய் எழுதிட்டு வா.
ரவி: இல்லேம்மா. நான் சுத்தமா படிக்கலை. எப்படி பரீட்சை எழுதறது? நான் போகலை. நீங்க குணமாய் வீட்டுக்கு வந்தா போதும்.
பார்வதி: எனக்குத் தெரியும் ரவி. நீ தொடர்ந்து என்னைக் கவனிச்சுக்கிட்டு இங்கேயே இருக்கே. படிக்க உனக்கு நேரமே கிடைக்கலை. இருந்தாலும் ஒப்புக்கு போய் எக்ஸாமை அட்டண்ட் பண்ணிட்டு வா. சொன்னாக் கேளு. (இருமுகிறார்) லொக்கு.. லொக்கு...
ரவி: சரிம்மா, அதுக்காக நீங்க கவலைப்படவேணாம். நிம்மதியா படுத்து ரெஸ்ட் எடுங்க.  
பார்வதி: சரிப்பா.
(ரவி புறப்படுகிறான்.)

காட்சி-2    

இடம் - பேருந்து நிறுத்தம்,    மாந்தர் - ரவி, பார்வையற்ற முதியவர்

(ரவி தவிப்புடன் பேருந்து வருகைக்காகக் காத்திருக்கிறான். நேரம் 
ஓடிக்கொண்டிருக் கிறது)

ரவி: சே.. என்ன இன்னைக்குப் பார்த்து பஸ் இப்படி கழுத்தறுக்குது?
(அப்போது பார்வையற்ற முதியவர் ஒருவர் வருகிறார்.)
முதியவர்: தம்பி.. சாலையைக் கடக்க 
கொஞ்சம் உதவறீங்களா?
ரவி: வாங்க பெரியவரே..
(அவரின் கரம் பற்றி சாலையின் மறு பக்கத்துக்கு அழைத்துப்போய் விடவும், பேருந்து புறப்படவும் சரியாக இருந்தது.) அட, சை!!
பெரியவர்: என்ன தம்பி, என்ன ஆச்சு?
ரவி: பரீட்சைக்கு நேரமாயிட்டுது. வந்த ஒரே பஸ்ûஸயும் கோட்டை விட்டுட்டேன்.
பெரியவர்: கவலைப்படாதீங்க தம்பி. பக்கத்துலதான் என் வீடு. வீட்டில என் பையனோட சைக்கிள் இருக்கு. அவன் பாட்டி வீட்டுக்குப் போயிருக்கான். நாளைக்குத்தான் வருவான். நீங்க அவனோட சைக்கிளை எடுத்துக்கிட்டுப் போங்க.
ரவி: (சந்தோஷமாய்): ரொம்ப நன்றி பெரியவரே. எக்ஸாம் முடிஞ்சதும் சைக்கிளை பத்திரமா கொண்டு வந்து விட்டுடறேன்.

காட்சி-3    

இடம் - பள்ளிக்கூடம்,    மாந்தர் - ஆசிரியர், ரவி

ரவி: வணக்கம் சார்.       
ஆசிரியர்: வணக்கம். வா ரவி. இப்ப எப்படி இருக்கு உங்க அம்மாவுக்கு?
ரவி: பரவாயில்லை சார். நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்றதா டாக்டர் சொல்லியிருக்கார்.
ஆசிரியர்: அப்படியா? சந்தோஷம். எக்ஸாமுக்கு எப்படி தயார் பண்ணியிருக்கே?
ரவி: (ஏதோ சொல்ல வந்து, "சட்'டென சுதாரிக்கிறான்) சுமாரா படிச்சிருக்கேன் சார்.
ஆசிரியர்: குட். நல்லபடியா எழுது. வாழ்த்துக்கள்.
(மணி அடிக்கப்பட்டு வினாத்தாள் வினியோகிக்கப்படுகிறது. ரவி கண்களை மூடி எல்லா தெய்வங்களையும் நினைத்துக்கொண்டு வினாத்தாளைப் பார்க்கிறான்.)
ரவி: (மனதுள்) அட, முதல் கேள்விக்கு பதில் தெரியுமே, ஆசிரியர் வகுப்பில் சொல்லிக்கொடுத்தது நினைவுக்கு வருகிறதே..)

(மள, மளவென எல்லா கேள்விகளுக்கும் பதில் எழுதி பேப்பரை கொடுத்துவிட்டு சந்தோஷமாய் எக்ஸாம் ஹாலைவிட்டு வெளியேறுகிறான்.)
       
காட்சி-4    

இடம் - அரசு மருத்துவமனை,   மாந்தர் - ரவி, பார்வதி
       
பார்வதி: ரவி, பரீட்சை எப்படி இருந்தது?
ரவி: ரொம்ப நல்லா இருந்ததும்மா. நான் பயந்துக்கிட்டு இருந்தேன். ஆனா, எல்லா கேள்விகளுமே வகுப்பில் ஆசிரியர் 
சொல்லிக் கொடுத்ததுதான்.
பார்வதி: பரீட்சைக்கே போகமாட்டேன்னு சொல்லிக்கொண்டிருந்தியே இப்பப் பார்த்தியா?
ரவி: ஆமாம்மா.. நான் இதை கொஞ்சங்கூட எதிர்பார்க்கலை.
பார்வதி: உன்னோட நல்ல உள்ளத்தைப் பார்த்த அந்த ஆண்டவன்தான் உன் மீது கருணை மழையைப் பொழிந்திருக்கிறான். அவனோட அருளால்தான் எல்லா கேள்வி களும் சுலபமாய் அமைந்து  நீ நல்ல முறையில் தேற உதவியிருக்கின்றன.
ரவி: நீங்க சொல்றது உண்மைதான் அம்மா. பெற்றோருக்கு உதவுவது பிள்ளைகளின் கடமை. அதைத்தான் நான் செய்தேன்....
....அதை நான் இப்ப அனுபவப்பூர்வமாய் உணர்ந்திட்டேம்மா. வாங்கம்மா வீட்டுக்குப் போவோம். மற்ற பரீட்சைகளுக்கு நான் வீட்டில் படித்துக்கொள்வேன்.
பார்வதி: சரிப்பா, வா போகலாம்.

(அம்மாவை கைத்தாங்கலாக அழைத்துப் போய் ஆட்டோவில் உட்காரவைத்து தானும் அருகில் அமர்ந்துக்கொள்ள, ஆட்டோ விரைகிறது.)

(திரை)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com