பெருந்தன்மை!: நினைவுச் சுடர் !

ஆசிரியராக வாழ்க்கையைத் துவங்கினார் அந்தக் கவிஞர். எழுத்தார்வத்தால் குழந்தைகளுக்காகக் கவிதைகள் பல புனைந்தார்.
பெருந்தன்மை!: நினைவுச் சுடர் !

ஆசிரியராக வாழ்க்கையைத் துவங்கினார் அந்தக் கவிஞர். எழுத்தார்வத்தால் குழந்தைகளுக்காகக் கவிதைகள் பல புனைந்தார். சுதந்திர வேட்கை மிகுந்த கட்டுரைகள் எழுதினார். பெண்கடவுள் மீது பல கீர்த்தனங்கள் படைத்தார். மேனாட்டு பாடல் தொகுப்பை தமிழில் மொழி பெயர்த்தார்.  மக்களின் வாழ்க்கைச் சரித்திரம் ஒன்றையும் எழுதினார். அவரது படைப்புகள் மக்கள் உள்ளங்களைக் கொள்ளை கொண்டன. புகழ் மிக்க இவரை தமிழகத்தின் அரசவைப் புலவராக ஆக்க நினைத்தார் அப்போதைய முதல்வர் ராஜாஜி!  
ஆனால் அதற்கு ஒரு தடை இருந்தது. அவர் வசித்த இடம் குமரிக்கு அருகே இருந்த தேரூர் எனும் கிராமம். அது  திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்ததால் அது கேரள எல்லைக்கு உட்பட்டதாக இருந்தது. தமிழகத்தில் வசிப்பிடமில்லாத இவரை  தமிழக அரசவைக் கவிஞராக ஆக்குவதில் சிக்கல் இருந்தது. 
பத்திரிகை ஆசிரியர் கல்கி, "நெல்லை மாவட்டத்திலுள்ள காவல் கிணறு அருகே ஐந்து சென்ட் நிலத்தை கவிஞரின் பெயருக்கு வாங்கி, வரி முதலியவற்றை அவர் பெயரில் அளித்தால் போதும்.  அவர் சென்னை மாகாணத்தைச் சேர்ந்தவர் ஆகிவிடுவார். அவருக்கு அரசவைக் கவிஞர் என்ற பதவி தந்து கவுரவப்படுத்தலாம்' என யோசனை கூறியதோடு ஒரு கடிதத்தையும் கவிஞருக்கு அனுப்பினார். 
ஆனால்....
கவிஞர் அதை மறுத்துவிட்டார்!  தனக்கு நிலம் வாங்குவதற்கான வசதிகள் உள்ளன.  ஆனால் பட்டம், பதவிக்கு தகுதி உடையவர் தான் இல்லை என்று கூறி அரசவைக் கவிஞராக மறுத்து விட்டார். மேலும் அதற்கு தகுதி உடையவர், "நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை' என்று கல்கிக்கு பதில் எழுதினார்.  பிறகு அந்தப் பொறுப்பு நாமக்கல் கவிஞருக்கு வழங்கப்பட்டது!
வந்த பதவியை அடக்கத்துடன் மறுத்தும், அதை வேறொரு கவிஞருக்குப் பரிந்துரைத்தும் செய்த அந்தக் கவிஞர்தான் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com