கருவூலம்: நீலகிரி மாவட்டம்! 

ரயில் பயணங்கள் இனிமையானவை. அதிலும் இந்த மலை ரயில் பயணம் மறக்க முடியாத இனிமையானது
கருவூலம்: நீலகிரி மாவட்டம்! 

சென்ற இதழ் தொடர்ச்சி....

ஊட்டி மலை ரயில்!

ரயில் பயணங்கள் இனிமையானவை. அதிலும் இந்த மலை ரயில் பயணம் மறக்க முடியாத இனிமையானது. இந்தியாவின் சிறப்பு வாய்ந்த நான்கு ரயில் மலை ரயில் பாதைகளில் நீலகிரி மலை ரயில் பாதையும் ஒன்று. கோவை மாவட்டத்தின் மேட்டுப்பாளையத்திற்கும், ஊட்டிக்கும் இடையே 46 கி.மீ. தூரம் செல்லும் இப்பாதைதான் இந்தியாவின் ஒரே பற்சட்ட இருப்புப் பாதை. 
இப்பணி 1845-இல் தொடங்கப்பட்டு 1899-இல் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டது! மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையிலான பாதை மிகவும் சரிவானது. என்பதால் தண்டவாளத்திற்கு இடையே பற்சக்கரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ரயிலில் உள்ள பற்சக்கரங்கள் கீழுள்ள பற்சட்டங்கள் மீது பதிந்து அதனை பற்றியபடி ரயில் இயங்குகிறது. 

இந்த 46 கி.மீ. பாதையில் 12 நிறுத்தங்கள், 16 குகைகள், 250 பாலங்கள், 208 வளைவுகளும் உள்ளன. இந்த 5 மணி நேர பயணமானது நம்மை கண்கொட்டாமல் பார்க்க வைக்கும்! மலைகளின் பேரழகு, ஆர்ப்பரிக்கும் சிற்றருவிகள், மெதுவாக தவழ்ந்து செல்லும் நீரோடைகள், காட்டு மிருகங்கள் என நீலகிரி மாவட்டத்தின் இயற்கை எழிலை ஊட்டிக்கு செல்வதற்கு முன்பே சொல்லாமல் சொல்லிவிடும். 

பழமையும் பெருமையும் கொண்ட நீலகிரி மலை ரயில் 2005 இல் யுனெஸ்கோவினால் உலகப் பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நீலகிரி மாவட்ட சுற்றுலாத் தலங்கள்!
கையில் கேமராவுடன் நிதானமாக ரசித்துப் பார்க்க வேண்டிய அழகிய பூங்காக்களும், ஏரிகளும், அருவிகளும், காட்சி முனைகளும் (VIEW POINT) கொண்ட தமிழகத்தின் பெருமைக்குரிய மாவட்டம் இது! இங்குள்ள சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் பார்த்து ரசிக்க வேண்டிய இயற்கையான எழில் ஓவியங்கள். 

காட்சி முனைகள் 
கம்பீரமான உயர்ந்த மலைசிகரங்களையும், அதன் சரிவுகளையும், இடையில் உள்ள நீரோடைகளையும், மற்றும் ஏரிகள், நீர்த்தேக்கங்களையும், மேலே மேகம் சூழ்ந்த பரந்த வானத்தையும், ஒருங்கே பல கோணங்களில் பார்த்து ரசிக்கும் வகையில் அமைந்த இடங்கள் காட்சி முனை எனப்படுகிறது. 

தொட்டபேட்டா!
நீலகிரி மாலைத்தொடரில் உயரமான சிகரம். இதன் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு தொலைநோக்கிகள் வழியாக சுற்றுலாப் பயணிகள் முழு மாவட்டத்தையும், சூழ்ந்துள்ள வனப்பகுதிகளையும், அருகருகே அமைந்துள்ள மூன்று சிகரங்களையும் கண்டு ரசிக்கலாம்.

மேற்கு நீர்பிடிப்புப் பகுதிகள்!
ஊட்டியிலிருந்து 20 கி.மீ. தூரத்தில் உள்ள இந்த பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு அனுமதியின்றி செல்ல முடியாது. செழுமையான புல்வெளிகளும், நீரோடைகளும், பரந்த நீர்த்தேக்கங்களும், சோலைக்காடுகளும், இயற்கையின் தெய்வீகக் காட்சிகள்!

கெட்டி வெள்ளி காட்சி முனை!
மைசூர் பீடபூமி முதல் கோவை சமவெளி பகுதி வரை நீண்டிருக்கும் இந்த பள்ளத்தாக்கு, உலகின் நீளமான பள்ளத்தாக்குகளில் ஒன்றாகும்! இந்த இடம் தமிழகத்தின் சுவிட்சர்லாந்து என வர்ணிக்கப்படுகிறது. 

டால்பின் மூக்கு! 
குன்னூரிலிருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ள கண்கவரும் இடம். இங்கிருந்த பல மீட்டர் உயரத்தில் இருந்து விழும் "கேத்தரின் அருவி' யைப் பார்த்து ரசிக்கலாம்! வளைந்த சாலைகள் மற்றும் தேயிலைத் தோட்டங்களையும் பார்ப்பதற்குச் சிறந்த இடம்!

லாம்ப் பாறை!
இதுவும் குன்னூர் பகுதியில்தான் உள்ளது. இங்கிருந்து காபி, தேயிலை எஸ்டேட்டுகளுடன் கோவையின் சமவெளி பகுதிகளையும் பார்த்து ரசிக்கலாம். 
இவை தவிர, தவளைக் குன்று காட்சி முனை, ஊசிப்பாறை, லேடி கேனிங் சீட், கோடநாடு, ரங்கசாமி ராக் அண்டு பில்லர், போன்ற காட்சிமுனைகளும் இங்குள்ளன. 

ஊட்டி ஏரி!
புகழ்பெற்ற சுற்றுலாத்தலம். 65 ஏக்கர் பரப்பில் 2 கி.மீ. நீளத்திற்கு வளைந்து காணப்படும் இந்த ஏரி 1824இல் ஜான் சல்லிவனால் உருவாக்கப்பட்டது. பள்ளத்தாக்கிற்கு இறங்கும் நீரோடைகளை தடுத்து தண்ணீர் இந்த ஏரியில் தேக்கப்படுகிறது. அருகே சிறு தோட்டமும் பூங்காவும் உள்ளன. ஏரியில் படகு சவாரி வசதியும் உண்டு. மே மாதம் நடத்தப்படும் படகுப்போட்டி பிரசித்தி பெற்றது. 

அவிலாஞ்சி ஏரி!
ஊட்டியிலிருந்த 28 கி.மீ. தூரத்தில் உள்ள இந்த ஏரியும் வண்ண மலர்த்தோட்டங்களுடன் எழில் மிகுந்த தோற்றம் உடையது. 
மலையேற்றம் செல்லலாம். பாதைகளை வனத்துறையினரே ஏற்படுத்தியுள்ளனர். சூரிய ஒளியே உட்புகாத அளவுக்கு அடர்த்தியாக வளர்ந்த மரங்கள் வளர்ந்த வனப்பகுதியும், பவானி அம்மன் கோயிலும், வனத்துறைக்கு சொந்தமான ஓய்வு இல்லமும் உள்ளன. 
குன்னூரிலிருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள கட்டேரி அருவி, கோத்தகிரி அருகிலுள்ள கேத்தரின் அருவி, எமரால்ட் அருவி, கல்ஹொத்தி அருவி, காமராஜர் சாகர் அணை, லாஸ் அருவி, பைக்காரா ஏரி மற்றும் அருவி, மேல் பவானி ஏரி என பல அருவிகளும், ஏரிகளும் காணப்பட வேண்டிய இடங்களாகும்! 

ஊட்டி தாவர இயல் பூங்கா!
விதவிதமான தாவரங்களும், பல வடிவில் பூத்துக் குலுங்கும் பூக்களும் பார்த்து களிக்கத்தக்கவை. 1847-இல் 22 ஹெக்டேர் பரப்பளவில் நிறுவப்பட்ட இப்பூங்கா, கீழ்தள தோட்டம், நீரூற்றுப் பகுதி, புதிய தோட்டம், இத்தாலியன் தோட்டம், கண்ணாடி வீடு, செடி வளர்ப்பகம் என ஆறு பிரிவுகளாக அமைந்துள்ளது. இங்கு மே மாதம் நடக்கும் கோடை விழா விசேஷமானது. 

சிம்ஸ் பூங்கா!
இது குன்னூரில் உள்ளது. 12 ஹெக்டேர் பரப்பில் அமைக்கப்பட்ட அழகிய பூங்கா. ருத்திராட்ச மரம், தாளிச பத்திரி மரம் உள்ளிட்ட பல அபூர்வமான மரவகைகள் நிறைந்த பூங்கா இது. 

நேரு பூங்கா!
கோத்தகிரி பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பூங்கா இது. இங்கு கோடைக்காலத்தில் நடக்கும் காய்கனி காட்சி சிறப்பானது. 

துருக்கோட்டை!
லாஸ் அருவிக்கு அருகேயுள்ள 6000 அடி உயர துருக் மலையின் மீது இக்கோட்டை அமைந்துள்ளது. திப்பு சுல்தான் காலத்தில் கட்டப்பட்டது. 

செயின்ட் ஸ்டீபன் சர்ச்!
1830-இல் ஊட்டியில் கட்டப்பட்ட முதல் தேவாலயம் இது. 

மெழுகு உலகம்!
ஊட்டி-குன்னூர் சாலையில் இந்த அருங்காட்சியகம் உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த பல பிரமுகர்களின் மெழுகு சிலைகள் இங்குள்ளன. 

பழங்குடி இன மக்களின் அருங்காட்சியகம்!
பழங்குடி இன மக்கள் ஆய்வு மையத்தில் இந்த அருங்காட்சியகம் இருக்கிறது. இங்கு பழங்குடிகளின் புகைப்படங்கள்., கைவினைப் பொருட்கள், தொல்லியல் துறையின் புராதனப் பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. 
குன்னூரில் வெலிங்டன் முப்படை அதிகாரிகளின் பயிற்சிக் கல்லூரிஉள்ளது. 
இவற்றைத் தவிர ஊட்டி கோல்ப் மைதானம், கல்கத்தி பகுதியில் "ஹாங் கிளைடிங்', ஊட்டி மாரியம்மன் கோயில், பல ஐரோப்பியக் கட்டிடங்கள் பார்த்து ரசிக்கத் தகுந்தவை. 
மார்ச், ஏப்ரல், மே, ஜூன் போன்ற கோடைக்காலத்தில் இங்கு சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாயிருக்கும். 
நீலகிரி இயற்கை எழில் வாய்ந்த சுற்றுலாப்பயணிகளுக்கு நல்ல காட்சிகளை விருந்தாகப் படைக்கும் அருமையான இடமாகும்!
தொகுப்பு: கே.பார்வதி, 
திருநெல்வேலி டவுன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com