கதைப் பாடல்: ஏர் பிடித்த மன்னன்!

அரண்மனைதாண்டி வயல்வெளிகள் அரசனின் குடும்பச் சொத்தாகும்!
கதைப் பாடல்: ஏர் பிடித்த மன்னன்!

அரண்மனைதாண்டி வயல்வெளிகள்
 அரசனின் குடும்பச் சொத்தாகும்!
 அரசன் வளவன் நல் அரசன்!
 அவனது மகனுடன் வயல் சென்றான்!
 
 பிடித்தான் ஏரை மகிழ்ச்சியுடன்
 பிள்ளையும் தொடர்ந்தான் ஆரவமுடன்!
 படித்தனர் வாழ்வின் பாடத்தை
 பார்த்தனர் மக்கள்....வியப்புற்றார்!
 
 அவரவர் வயலிலும் ஏர்களின் இயக்கம்
 அன்னை பூமியின் இதயம் குளிர்ந்தது!
 அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி!
 அழகிய பழமொழி உண்மை ஆனது!
 
 "முன் ஏர் செல்லும் வழிதான் பின் ஏர்'
 மூத்தோர் எல்லாம் சொல்லி மகிழ்ந்தார்!
 "இன்னொóரு நாளில் இதன் பலன் தெரியும்
 இல்லந் தோறும் செல்வம் சேரும்!''
 
 என்றே சொன்னார் ....எங்கும் களிப்பு!
 ஏனோ ஒருவன் எதிர்வினை செய்தான்!
 ஊரில் மிகுந்த செல்வம் உடையவன்
 உதயன் வந்தான் வளவனை நோக்கி!
 "மன்னா...இதுவா உங்கள் வேலை?...
 மாளிகை தன்னில் நடனம் பார்த்து
 இன்சுவை உணவுகள்...பானம் அருந்தி
 இன்புறல் தானே உயர்ந்தோர் வாழ்வு!''
 
 "உதயா,..உழைப்போர் வியர்வையின் அருமை
 உழைத்தால்தானே நாமும் அறிவோம்!
 இதயம் அவரது மேன்மையைப் பாடும்!
 இயங்கும் உலகம் அவரால்தானே!''
 
 மன்னனின் சொல்லால் மகிழ்வுறவில்லை!
 மமதை கொண்டவன் திரும்பிச் சென்றான்!
 சென்றன பலநாள் களியாட்டத்தில்
 செல்வம் எல்லாம் இழந்தான் அவனும்!
 
 உண்ணவும் வழியில்லை...உள்ளம் கலங்க
 ஊரில் திரிந்தான்...முகத்தை மறைத்து!
 மன்னன் வயலில் அறுவடை என்று
 மக்கள் சொன்னார்...அங்கே சென்றான்!
 
 கதிரை அறுத்தான்...கூலியை நோக்கி
 காற்று அடித்ததில் முகத்துணி பறந்தது!
 காவலனுக்கு அவன் முகம் தெரிந்தது!
 கருணையினாலே உளம் மிக நெகிழ்ந்தது!
 
 "அரசே, பொறுப்பீர்...என் அறியாமை!
 அவரவர் வாழ்வும் சிறப்பது உழைப்பால்!
 கரங்கள் இருந்தும் சோம்பித் திரிதல்
 கயமை....அதனை இன்று உணர்ந்தேன்!''
 
 -பூதலூர் முத்து
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com