கருவூலம்: புதுக்கோட்டை மாவட்டம்!

புதுக்கோட்டை நகரத்திலிருந்து 20 கி.மீ. தூரத்தில் உள்ளது குடுமியான் மலை என்ற சிற்றூர்.
கருவூலம்: புதுக்கோட்டை மாவட்டம்!

சென்ற இதழ் தொடர்ச்சி.....
குடுமியான் மலை!

புதுக்கோட்டை நகரத்திலிருந்து 20 கி.மீ. தூரத்தில் உள்ளது குடுமியான் மலை என்ற சிற்றூர். இவ்வூர் முன் காலத்தில் திருநாலக்குன்றம் என்றும், பின்னர் சிகாநல்லூர் என்றும் குடுமியான் மலை என்றும் அழைக்கப்படுகிறது. 
இவ்வூர் குடுமியான் மலை என்கிற குன்றை சுற்றி அமைந்துள்ளது. பழங்கால தமிழர்களின் சிறந்த நகரமைப்புக்கு எடுத்துக்காட்டாக இந்த ஊர் உள்ளது. இக்குன்றின் மேலும், அருகிலுமாக 4 கோயில்கள் உள்ளன. 
அதில் ஒன்றுதான் சிகாநாதசுவாமி கோயில் எனப்படுகின்ற கலைநயம் மிக்க பல அழகிய சிலைகளைக் கொண்ட புகழ்பெற்ற குடைவரைக் கோயிலான பெரிய சிவன் கோயில். இது குன்றின் அடிவாரத்தில் கிழக்குப் பகுதியில் உள்ளது. இக்கோயிலின் கருவறை 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அதன் பின்னர் பலரும் திருப்பணி செய்துள்ளனர்.இக்கோயிலில் பாறை சரிவில் 13 அடிக்கு 14 அடி அளவிலான இசை கல்வெட்டு ஒன்று உள்ளது. இது 7ஆம் நூற்றாண்டில் முதலாம் மகேந்திரவர்மன் காலத்தைச் சேர்ந்தது. பண்டைய தமிழிசை பற்றிய ஆய்வில் இக்கல்வெட்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. 
குன்றின் கிழக்குச் சரிவில் மேலக்கோயில் என்னும் குகைக்கோயில் குடையப்பட்டுள்ளது. இங்குள்ள ஆயிரங்கால் மண்டபம், அதன் இருபுறமும் உள்ள பெரிய மண்டபங்கள் பல சிற்பங்களோடு உள்ளது. இக்குன்றின் உச்சியில் குமரன் கோயில் உள்ளது. இம்மலையில் சுமார் 120 கல்வெட்டுகள் உள்ளன. இவை இப்பகுதி பற்றிய வரலாற்று ஆவணங்கள் உள்ளன. 
நார்த்த மலை
புதுக்கோட்டை நகரத்திற்கு 17 கி.மீ. தொலைவில் உள்ளது நார்த்த மலை என்ற சிற்றூர். இங்கு மேல மலை, கோட்டை மலை, கடம்பர் மலை, பறையன் மலை, உவச்சன் மலை, ஆளுருட்டி மலை, பொம்மை மலை, மண் மலை மற்றும் பொன் மலை என்று ஒன்பது குன்றுகள் கூட்டமாக அமைந்துள்ளன. இக்குன்றுகளே நார்த்த மலை எனப்படுகிறது. 
இக்குன்றுகளில் இருந்துதான் தஞ்சை பெரிய கோயில் சிற்பங்கள் மற்றும் கட்டுமானத்திற்கு கற்களை வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர். இம்மாவட்டத்தில் உள்ள பல கோயில்களும் இம்மலையின் வெட்டியெடுக்கப்பட்ட கற்களைக் கொண்டே கட்டப்பட்டுள்ளது. 
இங்கு "தொண்டைமான் மூலிகைக் காடு' என்ற மூலிகைப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. 
கடம்பர் மலைக் கோயில்கள்!
நார்த்த மலையின் ஒரு பகுதியாகிய கடம்பர் மலையில் முதலாம் பிரதான கோயிலாக உள்ளது. இதன் அருகிலேயே மாறவர்ம சுந்தர பாண்டியனால் கட்டப்பட்ட சிவன் மற்றும் அம்பாள் கோயில்கள் உள்ளன. இங்குள்ள பாறைசரிவில் மிகப் பெரிய கல்வெட்டு ஒன்று உள்ளது.
மேலமலைக் கோயில்கள்!
நார்த்த மலை குன்றுகளில் ஒன்றான மேலமலையில் "விஜயாலய சோழீஸ்வரம்' என்ற சிவன் கோயில் இருக்கிறது. கற்கோயிலான இவ்வாலயம் தனித் தன்மை வாய்ந்தது. வட்ட வடிவ கருவறை, மூன்று அடுக்கு விமானம், ஆள் உயர துவாரபாலகர்கள், என சிறந்த கட்டிட அமைப்புடன் உள்ள இக்கோயிலில் பல அற்புதமான சிற்பங்களும், வண்ண ஓவியங்களும் உள்ளன. இதனைச் சுற்றி ஆறு சிறு கோயில் கட்டுமானங்களும் காணப்படுகிறது. 
சமணர் குடகு அல்லது விஷ்ணு கோயில்!
சிவன் கோயிலுக்கு அருகிலேயே இரு குடைவரை கோயில்கள் உள்ளன. அதில் ஒன்று "சமணர் குடகு' எனப்படும் "பதினெண்பூமி விண்ணகரம்' என்கிற விஷ்ணு கோயில். இது ஆரம்ப காலத்தில் சமணர் குகையாக இருந்துள்ளது. இவ்வாலயத்தில் 12 ஆள் உயர விஷ்ணு சிலைகளும், எண்ணற்ற சிற்பங்களும் இருக்கின்றன. 
மொத்தத்தில் மேலமலை பகுதி குளிர்ச்சியான மரங்கள், மூலிகைச் செடிகள், அற்புதமான சிற்பங்கள் கொண்ட ஆலயங்கள் என மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக திகழ்கிறது. 
திருமயம் கோட்டை!
புதுக்கோட்டை நகரத்திலிருந்து 20 கி.மீ. தூரத்தில் உள்ளது திருமயம். 1687 இல் ராமநாதபுரம் ராஜாவாக இருந்த "விஜய ரகுநாத சேதுபதி' என்னும் கிழவன் சேதுபதியால் கட்டப்பட்டது திருமயம் கோட்டை. பின்னர் ரகுநாதராய தொண்டைமானிடம் கொடுக்கப்பட்டது. 
வட்ட வடிவில் 40 ஏக்கர் பரப்பில் ஏழு சுற்றுச் சுவர்கள், மூன்று வாயில்கள் சுற்றிலும் அகழியுடன் மிகுந்த கலைநயத்துடன் கட்டப்பட்ட கோட்டை இது! தற்போது தொல்லியல் பாதுகாப்பில் உள்ளது. 
திருமயம் சத்தியகிரீஸ்வரர் ஆலயம்!
மகேந்திரவர்ம பல்லவன், மலையை குடைந்து இந்த ஆலயத்தை அமைத்துள்ளார்!ஆசியாவிலேயே மிகப் பெரிய லிங்கோத்பவர் சிற்பம் இங்குள்ளது! மேலும் இம்மலைப்பாறையில் "சுந்தர பாண்டியன்' அமைத்த மிக பிரம்மாண்டமான கல்வெட்டும் உள்ளது. இதுவே தமிழகத்தின் மிகப் பெரிய கல்வெட்டாகும்!
திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் ஆலயம்!
இந்த விஷ்ணு கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று! இவ்வாலயத்தில் சத்தியமூர்த்தி, திருமெய்யர் என்று இரண்டு மூலவர்கள் உள்ளனர். திருமெய்யர் எனப்படும் பள்ளி கொண்ட பெருமாள் சிலை இந்தியாவிலேயே மிகப் பெரியது! இவர் பெயராலேயே ஊரும் திருமெய்யம் என்று அழைக்கப்பட்டு தற்போது திருமயம் ஆகிவிட்டது. இங்கு உள்ள தசாவதார மண்டப தூண்களில் உள்ள சிற்பங்கள் மிகவும் சிறப்பானவை!
மலையப்பட்டி கோயில்கள்!
அக்காலத்தில் திருவாலத்தூர் என்று அழைக்கப்பட்ட இவ்வூர் முத்தரையர்களின் தலைமை இடமாக இருந்துள்ளது. இங்குள்ள மலையை குடைந்து கி.பி. 730 இல் "விடேல் விடுகு முத்தரையன்' என்ற மன்னன் அமைத்த சிவன் கோயில் உள்ளது. இதன் அருகிலேயே அதன் பின் வடிவமைக்கப்பட்ட விஷ்ணு குடைவரை கோயிலும் இருக்கின்றது. முத்தரையர்களின் கலைப்பணிக்கு இவ்வாலயங்கள் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. 
கொடும்பாளூர் கோயில்கள்! 
சிலப்பதிகாரம், பெரிய புராணம், திருத்தொண்டர் தொகை என பழைய இலக்கிய நூல்களில் இடம் பெற்றுள்ள தொன்மை சிறப்பு மிக்க ஊர்! 
மிகச்சிறந்த வடிவமைப்பு கொண்ட பல கற்கோயில்கள் இவ்வூரில் உள்ளன. இக்கோயில்களின் சிறப்பினால், உயர விஷ்ணு சிலைகளும், எண்ணற்ற சிற்பங்களும் இருக்கின்றன. 
இவ்வூர் இந்திய நாட்டின் முக்கிய நினைவிங்கள் பட்டியலில் இருக்கிறது! பல கோயில்கள் சிதிலமடைந்து விட்டன! தற்போது இரண்டு கோயில்கள் மட்டுமே உள்ளன. 
கொடும்பாளூர் மூவர் சிவன் கோயில்!
10 ஆம் நூற்றாண்டை சேர்ந்த வேளிர்குல சிற்றரசர் பூதி விக்கிரமகேசரி என்ற மன்னரால் கட்டப்பட்டது. பண்டைய ஆகம விதிப்படி, சோழர் கால சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக மிக நேர்த்தியாக கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலில் கருவறைக்கு மேல் கட்டப்பட்டுள்ள விமானமானது சுண்ணாம்பு, சாந்து ஏதுமின்றி கற்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கியே அமைத்துள்ளனர். 
கொடும்பாளூர் முசுகுந்தேஸ்வரர் ஆலயம்!
மூவர் கோயிலுக்கு சற்று தொலைவில் உள்ளது. கி.பி. 921 இல் பராந்தக குஞ்சர மல்லன் என்ற சிற்றரசரால் சோழர் கால கட்டிட பாணியில் கட்டப்பட்டது. 
புதுக்கோட்டை அருங்காட்சியகம்!
தமிழகத்தின் இரண்டாவது பெரிய அருங்காட்சியகம்! 1910 இல் தொடங்கப்பட்ட இக்காட்சியகத்தில் இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்புப் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள், சிலைகள், சித்திரங்கள் என பல வகையான பொருட்களும் காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. 
பிற சிறப்பு வாய்ந்த புகழ் பெற்ற ஆலயங்கள்!
மணல்மேல்குடி சிவன் கோயில்!
மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட இக்கோயிலில் உள்ள தாழ்வாரங்கள், கல் சங்கிலி, சப்தஸ்வர தூண்கள் மற்றும் ஆயிரம் சிறிய தூண்கள் பொறிக்கப்பட்ட 2 பெரிய தூண்களும் தனிப்பட்ட சிறப்பு வாய்ந்தவை. 
திருக்கோகர்ணம் ஆலயம்!
புதுக்கோட்டையில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த குடைவரைக் கோயில். கோகர்ணேஸ்வரர் ஆலயம் எனப்படும் இச்சிவன் கோயில் தொண்டைமான் மன்னர்களால் கட்டப்பட்டது. இத்தல இறைவியான பிரகதாம்பாளே தொண்டைமான் மன்னர்களின் பிரதான வழிபாட்டுத் தெய்வம்! 
கட்டுபாவா! 
இது இஸ்லாமியர்களின் முக்கியமான புனிதத் தலம்! இங்கு கட்டுபாவா (KATTUBAVA) என்றழைக்கப்பட்ட துறவி பாவா பக்ருதீன் அவர்களின் சமாதி உள்ளது. 
ஆவூர் தேவாலயம்!
இவ்வூரில் கி.பி. 1547 இல் கட்டப்பட்ட பழம்பெரும் தேவாலயம் இருக்கிறது. இங்கு புகழ்பெற்ற தமிழ் அறிஞரான வீரமாமுனிவர் என்று அன்புடன் அழைக்கப்பட்ட ஜோசப் பெஸ்கி பணியாற்றி உள்ளார். 
விராலி மலை முருகன் கோயில்!
மலை மீது 500 ஆண்டுகளுக்கு முந்தைய முருகன் கோயில் உள்ளது. மேலும் இங்கு மயில்கள் சரணாலயமும் இருக்கிறது. 
ஆவுடையார் கோயில்!
இவ்வூர் இலக்கிய நூல்களில் திருப்பெருந்துறை என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆலய மண்டபங்களில் உள்ள ஆளுயர சிலைகள் புகழ் பெற்றவை. மேலும் இக்கோயில் தேரின் மரச்சிற்ப வேலைப்பாடுகளும், கருங்கல் கூரையும் காண்பவர்களை வியக்க வைக்கும் கலை நேர்த்தியுடன் அமைந்துள்ளன. 
புதுக்கோட்டை மாவட்டம் இன்றும் மன்னர் ஆட்சி காலத்தின் சுவடுகள் பலவற்றோடு இருக்கும் மாவட்டம்! பண்டைய சிற்பக்கலை, கட்டிடக் கலை, ஓவியங்கள் போன்றவற்றில் ஆர்வமுள்ளவர்களுக்கும், தொல்லியல் மற்றும் வரலாற்றில் ஈடுபாடு கொண்டவர்களுக்கும் அற்புதமான கருவூலம்! 
நிறைவு
தொகுப்பு : கே.பார்வதி, திருநெல்வேலி டவுன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com