வேண்டுதல்!

டேய் அருண், இந்த அரையாண்டு தேர்வுல எல்லா பாடத்திலேயும் நான் ரொம்ப கம்மியா மார்க் எடுத்து இருக்கேன்
வேண்டுதல்!

அரங்கம்
காட்சி - 1
இடம் - பள்ளி
மாந்தர் - அருண், அவன் நண்பன் பாலு. 

பாலு: டேய் அருண், இந்த அரையாண்டு தேர்வுல எல்லா பாடத்திலேயும் நான் ரொம்ப கம்மியா மார்க் எடுத்து இருக்கேன்.....ரொம்பக் கவலையா இருக்குடா...
அருண்: அதை நினைச்சு கவலைப்படாதேடா, கொஞ்சம் படிப்பிலே அக்கறை செலுத்தி கவனத்தோட படி,....அடுத்த தேர்வுல நிறைய மார்க் எடுத்துடுவே....
பாலு: அருண் எனக்கு நீ ஒரு உதவி செய்யணும்...
அருண்: சொல்லுடா, செய்யறேன். 
பாலு: இனிமே தினமும் மாலை உன் வீட்டுக்கு வரேன். ரெண்டு பேரும் சேர்ந்து படிப்போம். எனக்குப் புரியாததை நீ சொல்லிக்கொடு,....என்ன சரியா? 
அருண்: தாராளமா,....படிப்புலே உன் சந்தேகத்துக்கு நா உதவுறேன். நீ கவலைப்படாதே! இன்னிக்கு மாலை என் வீட்டுக்கு வந்துடு.
(இருவரும் வீட்டிற்குச் செல்கின்றனர்)

காட்சி - 2
இடம் - வீடு
மாந்தர் - இளங்கோ, அவரது மனைவி ஜானகி.

(அலுவலகத்திலிருந்து இளங்கோ வீடு திரும்புகிறார். அவரது மனைவி ஒரு வித சந்தோஷத்துடன்...)

ஜானகி: என்னங்க, நம்ம அருண் அரையாண்டு தேர்வில் என்னமா மார்க் வாங்கியிருக்கான்!....இந்த பிராக்ரஸ் ரிப்போர்ட்டை பாருங்க....
இளங்கோ: அது இருக்கட்டும்,.... யாரு பாலுவா?
ஜானகி: ஆமாங்க, நம்ம அருணோட படிக்கிற பையன் பாலுதான். ரெண்டு பேரும் உட்கார்ந்து "ஹோம் ஒர்க்' செய்யறாங்க, சரி, சரி.....அருண் வாங்கின மார்க்கை பாருங்க!.... (சத்தம் போட்டு) கணக்குல நூறு....ஆங்கிலம், தமிழ் ரெண்டிலும் எண்பது, சயின்ஸிலே தொண்ணூறு....
இளங்கோ: கொஞ்சம் இரு... 

(ஜானகி கையை பற்றித் தரதரவென்று இழுத்துக்கொண்டு சமையல் கட்டுக்கு செல்கிறார்.)

ஜானகி: ஏங்க,.....என்னாச்சு உங்களுக்கு? நம்ம பையன் வாங்கியிருக்கும் மார்க்கைப் பார்த்து சந்தோஷப்படாம எதற்காக என்னை இங்கே இழுத்துக்கிட்டு வந்தீங்க? 
இளங்கோ: சொல்றேன்! நீ இப்ப பக்கத்துலே இருக்கிற கோவிலுக்கு கிளம்பு. அங்கு வந்து எல்லா விஷயத்தையும் சொல்றேன். 

(இருவரும் கோயிலுக்கு கிளம்புகிறார்கள்)

காட்சி - 3
இடம் - கோயில்
மாந்தர் - இளங்கோ, ஜானகி.

ஜானகி: (கோபத்துடன்) இப்ப சொல்லுங்க, அருண் வாங்கின மார்க்கைப்பத்தி வீட்டுல பேசாம , கோயிலுக்கு ஏன் கூட்டிட்டு வந்தீங்க?
இளங்கோ: முதல்ல உன் கோபத்தை அடக்கு. சொல்றேன். 
ஜானகி: சரிங்க....கோபப்படலே. சொல்லுங்க...
இளங்கோ: இப்ப நம்ம வீட்டுல அருண்கூட, அவனோட படிக்கிற பாலுவும் சேர்ந்து "ஹோம் ஒர்க்' செய்யறான்லே? 
ஜானகி: ஆமா, அதுக்கு என்ன? நீங்க நம்ம பையன் மார்க்தானே படிச்சீங்க....
இளங்கோ: சொல்றதைக் கேளு,....பாலு அரையாண்டு தேர்வுல சரியா மார்க் எடுக்கலேன்னு அவனோட அப்பா ரொம்ப வருத்தப்பட்டாரு. இப்ப அவன் எதிரிலேயே நம்ம பையன் எடுத்திருக்கிற மார்க்கைப் பத்திப் பெருமையா பேசினா, பாலு மனசு நொந்து போகாதா?....என்ன நான் சொல்றது? 
ஜானகி: ஆமாங்க,....இது தெரியாம நான் கோபப்பட்டுட்டேன்.....சாரிங்க...
இளங்கோ: சரி,சரி,....இருக்கட்டும்,....வா,...நாம் ரெண்டு பேரும் சாமிகிட்டே, அருண் நல்ல மார்க் எடுத்ததுக்கு நன்றியும், பாலு அடுத்த தேர்வுல நிறைய மார்க் எடுக்கணும்னு வேண்டிக்கொள்வோம்....
ஜானகி: உங்க நல்ல மனசு போலவே,....அருணோட சேர்ந்து பாலுவும் நிறைய மார்க் எடுப்பாங்க!...இது நிச்சயம் நடக்கும்!

(இருவரும் மன நிறைவுடன் சாமி கும்பிடுகின்றனர்)
திரை
எஸ். விஜயராணி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com