சிபியின் சபதம்!

சிபி, அவசர அவசரமாக வீட்டுக்குள் நுழைந்தான். அணிந்திருந்த உடைகளைக் கழற்றி வீசினான். அலமாரியைத் திறந்து மாற்று உடைகளை எடுத்து உடுத்திக்கொண்டான்.
சிபியின் சபதம்!

சிபி, அவசர அவசரமாக வீட்டுக்குள் நுழைந்தான். அணிந்திருந்த உடைகளைக் கழற்றி வீசினான். அலமாரியைத் திறந்து மாற்று உடைகளை எடுத்து உடுத்திக்கொண்டான்.
""அம்மா, டீ போட்டீங்களா?'' அதிகாரத் தோரணையோடு கேட்டான்.
""கொஞ்சம் பொறு சிபி, என்ன அவசரம்?''
""சீக்கிரமாத் தாங்கம்மா. பள்ளிக்கூடம் போக வேண்டாமா? பள்ளி ஆண்டு விழாவுல, நான் டாக்டர் வேடமிட்டு நடிக்கிறேன்...'' என்றான். 
அம்மா, சமையல் அறைக்குத் திரும்பும்வரை காத்திருந்தான். அவர் நகர்ந்தவுடன், இரும்பு அலமாரியைத் திறந்தான். அதிலிருந்த பணப்பெட்டியைத் தேடியெடுத்து கையில் கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டான். அம்மா திரும்பிப் பார்க்காத நேரத்தில் அத்தனையும் நடந்தது. 
கடைசியில், அம்மா தந்த தேநீரைக் குடித்துவிட்டு கண்ணாடி குவளையை மேசையில் வைத்துவிட்டு வெளியேறினான். 
சிபி, அருணா மெட்ரிகுலேசன் பள்ளியில் ஏழாம் வகுப்புப் படிக்கிறான். சுமாராகத்தான் படிப்பான் என்றாலும் தேர்வுகளில் தேர்ச்சி அடைந்து விடுவான். பெற்றோர், அவனுக்கு அதிகச் செல்லம் கொடுத்து வளர்த்து விட்டார்கள். 
சிபியிடம் ஒரே ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. ஆசைப்பட்ட பொருட்களைத் திருடி விடுவான். சில நேரங்களில் அவற்றை ஒளித்து வைப்பான். அல்லது தெருக் குப்பைத் தொட்டியில் வீசி எரிந்து விடுவான். திருடிய பொருட்கள் எல்லாவற்றையும் அவன் சொந்த உபயோகித்திற்காகப் பயன் படுத்துவதில்லை.
வகுப்பறையில், சக மாணவர்களின் பென்சில்களைத் திருடி பலதடவை ஆசிரியரிடம் பிடிபட்டிருக்கிறான். அவனது பெற்றோர் சிபியை எப்படியாவது திருத்த வேண்டுமே என்ற கவலையுடன் இருந்தார்கள். 
கடந்த மாதம்கூட ஒரு சம்பவம் நடந்தது. அவனது அப்பா, தெரிந்த நண்பர் ஒருவரது வீட்டுக்கு ஒரு நாள் அவனையும் அழைத்துச் சென்றார். அப்பாவின் நண்பரது வீட்டில் ஓர் அழகான ஜெய்ப்பூர் பேனா மேசைமீது கிடப்பதைப் பார்த்தான். சிபி, யாருக்கும் தெரியாமல் அதை எடுத்துச் சட்டைக்குள் மறைத்துக்கொண்டான்.
ஏதோ எழுத வேண்டி இருந்ததால், அப்பாவின் நண்பர் பேனாவைத் தேடிக்கொண்டிருந்தார். நீண்ட நேரம் தேடியும் பேனா கிடைக்காததால் சலித்துக்கொண்டவர் பேசாமல் விட்டு விட்டார்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு வீதியில் தன் பேனாவோடு சென்ற சிபியைப் பார்த்ததும் அவருக்குக் கோபம் வந்தது. சிபியின் வீட்டிக்குச் சென்று பெற்றோர் முன்னிலையில் அவனைத் திட்டிவிட்டு வந்தார். .
மகன் செய்த குற்றத்திற்காக அவனது பெற்றோர் அவரிடம் மன்னிப்புக் கேட்டார்கள். சிபியின் நடவடிக்கைகளை நினைத்து பெரிதும் கவலை அடைந்தார்கள். 
அன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்காகத் தன் பெற்றோரையும் அழைத்து இருந்தான் சிபி.
சிபி, மதியமே பள்ளிக்குக் கிளம்பிச் சென்றிருந்தான். தான் பங்கேற்கும் நாடகத்துக்கான ஒத்திகைகளைப் பார்த்துவிட்டு, மேடையை அலங்காரம் செய்பவர்களுக்குத் துணையாக நின்று கொண்டான்
ஆசிரியர்களும், மாணவர்களும் சேர்ந்து கலையரங்கத்திற்கு முன்பிருந்த மேசை நாற்காலிகளை வரிசைப்படுத்தினார்கள் மேடையில் திரை கட்டினார்கள். வண்ணக் காகிதங்களாலும், தோரணங்களாலும் மேடை அலங்கரிக்கப்பட்டது. 
விழா ஆரம்பமாவதற்கு கொஞ்சம் முன்னரே சிபியின் பெற்றோர் அங்கு வந்து சேர்ந்தார்கள். 
மகனை, டாக்டர் வேடத்தில் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். சிபி, காலையில் அலமாரியைத் திறந்து பணத்தை திருடியிருக்கிறான் என்பதைத் தெரிந்து வைத்திருந்த அம்மா, அவனிடம் கேள்வி கேட்டு தொந்தரவு செய்யவில்லை. அமைதியாக இருந்து விட்டார்.
""சிபி, நல்லா நடிக்கணும்!''
அப்பா சொன்னவுடன் "சரி'யெனத் தலையசைத்தான். பெற்றோரிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டு மேடைக்குத் திரும்பினான். 
சிறிது நேரத்தில் பள்ளியின் தாளாளர் வந்து சேர்ந்தார். கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. பிரபல டாக்டர் ஒருவர் அழைப்பு விருந்தினராக வந்திருந்தார். அவர், சிபியின் தந்தைக்கு நெருங்கிய நண்பர். அவரைப் பார்த்தவுடன் டாக்டராக நடிக்கவிருந்த சிபி, மேலும் உற்சாகம் அடைந்தான். 
அவனுடைய பெற்றோர்கள் மேடைக்கு முன்னால் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தார்கள். சிறப்பு விருந்தினர் மாணவர்களுக்கு முன்னால் எழுந்து வந்து பேசினார். 
"அன்புச் சிறுவர்களே, இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள். வருங்காலத்தில் உங்களில் ஒருவன்தான் சிறந்த தலைவராகவும், பொறியாளராகவும், மருத்துவராகவும் மாறப்போகிறீர்கள். நாட்டைக் காக்க, சமூதாயப் பணிகளைத் தொடர உதவப் போகிறீர்கள். பள்ளிப் படிப்பைத் தவிர நல்ல பண்பு, பிறரை நேசிக்கும் மனம், இல்லாதவர்களுக்கு உதவும் குணம் ஆகியன ஓர் உந்து சக்தியாக உங்களுக்குள் பிறப்பெடுக்கவேண்டும்." என்றவர் சிறிது நேர அமைதிக்குப் பிறகு மறுபடியும் பேச்சைத் தொடர்ந்தார்.
"உங்களில் சிலருக்கு அடுத்தவர் பொருளைத் திருடி வைத்துக்கொள்வது பிடிக்கும். அந்தப் பண்பைக் குறித்த மருத்துவ ரீதியாக சில உண்மைகளை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்." 
"திருடி வைத்துக் கொள்ளுதல்' என்று டாக்டர் பேசியதைக் கேட்ட சிபியின் இதயத்தில் "பக்'கென்று தீ பற்றிக்கொண்டதுபோல இருந்தது. நடந்த உண்மைகள் அனைத்தையும் அப்பா அவரிடம் சொல்லி இருப்பார் என்று சந்தேகித்தான். 
டாக்டர் பேச்சைத் தொடர்ந்தார்.....""சிறுவர்கள் இப்படித் திருடும் பழக்கத்தை ‘கிலெப்டோ மேனியா' என்று சொல்கிறார்கள். இது ஒரு நரம்பு தொடர்புடைய நோய், சின்னச் சின்னப் பொருட்களை வேண்டுமென்றே ஒளித்து வைத்துக்கொள்வது இந்த நோய் உள்ளவர்களின் பழக்கமாக மாறிவிடும். இந்த மாதிரியான செயல்கள் கடைசியில் ஆபத்து விளைவிக்கக் கூடியதாக அமையும். "பலநாள் திருடன் ஒருநாள் அகப்டுவான்' என்ற ஒரு பழமொழிகூட நம்மிடையே உண்டு ‘கிலெப்டோமேனியா' என்ற நோய் தாக்கிய சிறுவர்கள், பிற்காலத்தில் பெரிய திருடனாக மாறவும் கொள்ளைக்காரனாக வளரவும் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இன்றைய இளைய சமுதாயத்தின் உறுப்பினர்களாகிய நீங்கள், இந்தத் தகாத திருட்டுக் குணத்தைக் கைவிடுதல் நல்லது!''" என்று சொல்லிவிட்டு அமர்ந்தார். 
டாக்டர் பேசிய பேச்சைக் கேட்ட சிபி, அவர் பேசியதிலிருந்த உணமையை எண்ணி வருந்தினான். சின்னச் சின்ன திருட்டுக்களால் இவ்வளவு பெரிய தீங்கு விளையும் என்று அவனுக்கு அப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்தது. 
சிறிது நேரத்தில் கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. முதலில் சிபி நடிக்கவிருந்த நாடகம் அரங்கேறியது. திரை விலகியதும், சிபி ஒரு சிறந்த மருத்துவரைப்போலவும் மற்ற சிறுவர்கள் நோயாளிகளைப்போலவும் நடித்தார்கள். 
அதன் பிறகு சிறுமிகளின் நடன நிகழ்ச்சிகள், ஆங்கில நாடகம், என்று பல கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தன. கடைசியில், சிறப்பாக நடித்த மாணவர்களுக்கான பரிசு அறிவிக்கப் பட்டது. 
சிபி, முதல் பரிசைத் தட்டிச் சென்றான், விருந்தினராக வந்திருந்த டாக்டர் அவனுக்குப் பரிசு வழ்ங்கினார். விழா முடிந்ததும் பெற்றோருடன் சேர்ந்து, சிபி அந்த டாக்டரை தனியாகச் சந்தித்தான்.
""என்னை மன்னிச்சுடுங்க சார்.,, நான் இனிமேல் மத்தவங்க பொருட்களைத் திருட மாட்டேன். இந்தக் கெட்ட பழக்கத்தால விளையும் தீங்குகளைப் பற்றி இப்போதுதான் தெரிந்துகொண்டேன். சத்தியமா இனி நான் திருட மாட்டேன்'' என்று சொல்லி அழத் தொடங்கினான். 
இதைச் சற்றும் எதிர்பாராத அவனது பெற்றோர் அகம் மகிழ்ந்தார்கள். 
இன்றைக்கு இவன் மேடையில வாங்கின பரிசைவிட, திருடமாட்டேன், திருந்தி விட்டேன் என்று மனதார உணர்ந்து பேசியதுதான் எங்களுக்குக் கிடைத்த பெரிய பரிசு'' என்றார் அவனது அப்பா. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com