செய்தது தப்புதான்!

அக்கா விநிதா சற்றுத் தொலைவில் நின்று கொண்டிருக்கிறாள். மாது பயணச்சீட்டு பெறுவோர் வரிசையில் வருகிறான்.
செய்தது தப்புதான்!

அரங்கம்
காட்சி - 1
இடம் - ரயில் நிலையம், 
பயணச்சீட்டு வழங்குமிடம்
மாந்தர் - விநிதா, ரமணி, மாது, ஜெயந்தி.

(அக்கா விநிதா சற்றுத் தொலைவில் நின்று கொண்டிருக்கிறாள். மாது பயணச்சீட்டு பெறுவோர் வரிசையில் வருகிறான்.)

மாது: செங்கல்பட்டுக்கு ரெண்டு டிக்கட் கொடுங்க....
பயணச்சீட்டு தருபவர்: என்ன தம்பி?....இருபது ரூபாய் டிக்கட்டுக்கு இரண்டாயிரம் ரூபாய் நீட்டறே....இப்பத்தான் ரெண்டு பேர் ரெண்டாயிரம், ரெண்டாயிரம்னு நீட்டி இருக்கிற சில்லறை நோட்டை வாங்கிக்கிட்டுப் போனாங்க....சரி, ஒதுங்கி நில்லு....பின்னால வரவங்க தர்றதைத் திரட்டி உனக்கு மீதியைக் கொடுக்கிறேன்....

(பத்து நிமிடங்கள் கழிந்தபின், மாது பயணச் சீட்டையும், மீதிப் பணத்தையும் பெற்றுக் கொண்டு போகிறான்.)

மாது: வா, அக்கா! டிக்கட் வாங்கிட்டேன்!.....
விநிதா: ஏன் இவ்வளவு நேரம்? 
மாது: இரண்டாயிரம் ரூபாயை மாத்தினேன்....வா, அந்தப் பக்கமா போய் நிக்கலாம்...
விநிதா: டேய், நமக்கு வேண்டியது இருபது ரூபாய்தானே.....உங்கிட்டேதான் இருபது ரூபாய் நோட்டே ஒண்ணு இருந்ததே....எதுக்கு ரெண்டாயிரம் ரூபாயை மாத்தினே?
மாது: காரணமாத்தான்கா!.....வீட்டுக்குப் போற வழியிலே பூ, கீரை, உப்பு இதெயெல்லாம் வாங்கிக்கிட்டுப் போகணுமே..... ஆட்டோக்காரருக்கும் முப்பது ரூபாய் தேவைப்படும்...இவங்க கிட்டே ரெண்டாயிரம் ரூபாயை மாத்த முடியாது!....
விநிதா: அதுக்காக நீ இப்படி செய்திருக்கக் கூடாது!...... 
மாது: இதுலே என்னக்கா தப்பு? தேவைக்கு வாங்கினா என்ன தப்பு? 
விநிதா: தேவைக்கு மாத்திக்கிறது தப்பு இல்லே.....ஆனா இது மாதிரி ஜன நெருக்க நேரத்திலே நம்ம சுய நலத் தேவையை பெரிசா நினைச்சு நடந்துக்கறதுதான் தப்பு!....நீயே பாரு!....அந்த வரிசையிலே எத்தனை பேர் நின்னுக்கிட்டிருக்காங்க....உன்னை மாதிரி நாலு பேர் மாத்தினா வரிசையிலே நிக்கறவங்க எவ்வளவு துன்பப்படுவாங்க?....
மாது: போக்கா!.....நீ எப்பவும் ஏதாவது குறை சொல்லிக்கிட்டுருப்பே!....அதோ வண்டி வந்தாச்சு!....வா!...
விநிதா: பொறு!....பொறு!....வண்டி நிக்கட்டும்!

(இருவரும் ஏறிக்கொள்கிறார்கள். வண்டி நகர்கிறது. அப்போது விநிதா, தன் தோழி ஜெயந்தியாப் பார்த்துவிட்டு அவள் அருகில் உட்கார்ந்து கொள்கிறாள். ஜெயந்தி "வாட்ஸ் அப்'பில் ஆழ்ந்து போயிருக்கிறாள். விநிதாவைக் கவனித்து....)

ஜெயந்தி: ஏ, விநிதா!....வா!....வாட்ஸ் அப்புலே ஒரு நிகழ்ச்சியைப் பாத்துக்கிட்டு இருந்தேன்!
விநிதா: ஓ!....ரொம்ப சுவையான நிகழ்ச்சியா?
ஜெயந்தி: என் அண்ணன் ரமணிக்கு ரயில்வேலதான் வேலை!.....இந்த வாரம் மக்கள் தொடர்பு வாரமா கொண்டாடுறாங்க.... 
அதுக்கா என் அண்ணன் ரயில் பயணிகளைச் சந்திச்சுக்கிட்டிருக்கார்!.....அவங்க குறைகளை நேரிலே ஒலி பெருக்கியிலே கேட்டுக்கிட்டிருக்காரு!.... நீங்களும் இந்த வாட்ஸ் அப்பைப் பாருங்க.....

(மாதுவும் பின்னாலிருந்து பார்க்கிறான்....}வாட்ஸ் அப் காட்சி-)

ரமணி: ஐயா, பயணிகளோட பிரச்சினைகளைத் தெரிஞ்சுகத்தான் நாங்க வந்திருக்கோம்!....இவ்வளவு பெரிய வரிசையிலே எவ்வளவு பொறுமையா நின்னுக்கிட்டு வர்றீங்க....பாராட்ட வேண்டியவர் நீங்க....
பெரியவர்: நன்றி, ஐயா,.....எனக்கு வயசு எண்பது.....காலிரண்டும் வலிக்கத்தான் செய்யுது....இருந்தாலும் வரிசை ஒழுங்கை மீறமாட்டேன்!.....நாமதான் மத்தவங்களுக்கு நல்ல முன்னுதாரணமா நடந்து காட்டணும்....
ரமணி: நல்லா சொன்னீங்க!.....அடுத்தது ஐயா, நீங்க பேசுங்க!....
அடுத்தவர்: இன்னிக்கு உறவுக்காரர் வீட்டுலே நிச்சயதார்த்தம்! நான் அவசியம் கலந்துக்கணும்!....தானியங்கி இயந்திரம் இருந்தும் எவ்வளவு பெரிய வரிசை பாருங்க!.... நான் போய்ச் சேர்றதுக்குள் முகூர்த்த நேரமே முடிஞ்சுடும்!...போலிருக்கு!....அவசரத்துக்கு வண்டி எதுவும் கிடைக்கலே....மனசுக்குக் குறையா இருக்கு!....
ரமணி: அடுத்து நீங்க ஏதாவது சொல்றீங்களா? 
அடுத்தவர்: சொல்லி என்னங்க ஆகப்
போறது?.....ஆசுபத்திரியிலே ஒரு உயிர் போராடிக்கிட்டிருக்கு!.....நான் உறவு!....போய்ப் பார்க்க மனசு துடிச்சிக்கிட்டுருக்கு....இந்த வரிசையோ ஆமையைவிட மோசமா நகர்ந்துகிட்டிருக்கு...
ரமணி: உங்க மனசு புரியுதுங்க.....இந்த நாள் அப்படி!...சரி, ஐயா, நீங்க பேசுங்க!....
அடுத்தவர்: என் பையனுக்கு கல்லூரியில் சேர விண்ணப்பம் வாங்கணும்!....இன்னிக்குத்தான் கடைசி நாள்!....இந்த வரிசையிலே வந்து மாட்டிக்கிட்டேன்!.....
ரமணி: ரொம்பப் பொறுமையா பதில் சொன்னீங்க....நன்றி!....இதெல்லாம் மேலிடத்துக்குப் போகும்!....ஏதாவது வழி செய்வாங்க....ஆனா, ஒரு விஷயம் நல்லா யொசியுங்க....
இதுக்கெல்லாம் யார் காரணம்?.....; சொல்லுங்க.....சரி, நானே சொல்றேன்....நீங்களேதான் காரணம்!....
ஒருவர்: நாங்களா!....எப்படி?...
ரமணி: இந்த காட்சியைக் கவனிங்க....கொஞ்ச நேரம் முன்னாலதான் விடியோ பண்ணேன்....இந்த நடுத்தர வயது மனிதர் அஞ்சு ரூபா டிக்கட்டுக்காக, ஐநூறு ரூபாய் நோட்டை நீட்டியிருக்கார்!....பயணச்சீட்டு தருபவர் பாவம்!....இருக்கற பத்து ரூபா நோட்டையும், பொறுமையா எண்ணி அவருக்குக் கொடுத்துக்கிட்டிருக்கார்!....அடுத்து இவரைப் பாருங்க!....இவர் கையிலே சில்லறை நோட்டுகள் இருக்கு.....இருந்தும் ஆயிரம் ரூபாயை நீட்டி பத்து ரூபா டிக்கட் கேக்கறார்!....முயற்சி பண்ணுவோம்,.....கிடைச்சா வாங்கிக்குவோம்....கிறது இவரது நோக்கம்!....இவரைக் கொஞ்ச நேரம் நிக்கவெச்ச பிறகுதான், வந்த பணத்திலேர்ந்து மீதிப் பணத்தைக் கொடுத்தனுப்பறார்.......இவரைப் பாருங்க....டிக்கட் வாங்கற அந்த நிமிஷத்துலேதான் அஞ்சையோ, பத்தையோ தேடறார்.....இதுபோல பல பேரு இருக்காங்கைய்யா!.....சுய தேவைக்கு பெருமதிப்பு நோட்டை, சூழ்நிலையை நினைச்சுப் பார்க்காம மாத்தணும்னா எப்படிங்க?... சில்லறை இல்லேன்னா வீண் வாக்குவாதம் வேறே பண்றாங்க...... இதோ!..... இன்னொரு காட்சியும் பாருங்க!.....இந்த மஞ்சள் "டீ ஷர்ட்' போட்ட சிறுவனும் இரண்டாயிரம் ரூபாயை இரண்டாயிரம் ரூபாயை நீட்டியிருக்காரு......
ஒருவர்: ஆமாம்!.....பெரியவங்களே செய்யும்போது சின்னவங்க செய்யமாட்டாங்களா?
ரமணி: அதை சொல்லத்தான் இந்தக் காட்சியைக் காட்டினேன்.....இவனையும் கொஞ்ச நேரம் நிக்கவெச்சப்பறம்தான் சீட்டைக் கொடுத்தனுப்பறாரு!......இதெல்லாம் சரியாங்க? சரியான சில்லறை வெச்சுக்கிட்டா பொதுஜனத்தைக் கால் நோக நிக்கவைக்க வேண்டிதில்லை!,....வரிசையும் வேகமா நகரும்! நன்றி வரேங்க!....
ஜெயந்தி: (அலைபேசி இயக்கத்தை நிறுத்திவிட்டு)....ஏய், விநிதா, இப்பத்தான் கவனிக்கிறேன்....இந்த வாட்ஸ் அப்பிலே வந்த தம்பி இதோ!...அதே மஞ்சள் டீ ஷர்ட்!
விநிதா: ஆமாம் ஜெயந்தி!....இவனேதான்!....என் தம்பி....மாது நீயும் பின் சீட்டிலேயிருந்து வாட்ஸ் அப்பைப் பார்த்துக்கிட்டே இருந்தே இல்லே!.....
மாது: ஆமாம்கா!,.. பார்த்தேன்!.... நான் செய்தது தப்புதான்!..... நடந்தது எல்லாத்தையும் பார்த்த பிறகுதான் நல்லா புரியறது!..... எத்தனை பேர் என்னைப் பார்க்கப்போறாங்களோ? நினைச்சா வெட்கமா இருக்கு!.... இனிமே இந்தத் தப்பை நான் இனிமேல்
செய்ய மாட்டன்!.... 
விநிதா: ஜெயந்தி, உனக்குத்தான் நன்றி சொல்லணும்!

திரை
எஸ்.ஆர்.ஜி. சுந்தரம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com