ஞானக்கிளி!

ஞானம் வந்து அமர்ந்தது. பிள்ளைகளின் முகத்தைப் பார்த்தது! வழக்கம்போல் குதூகலம்! 
ஞானக்கிளி!

கவலையா?...
எனக்குத் தெரியாதே!...
என்ன அது?...

ஞானம் வந்து அமர்ந்தது. பிள்ளைகளின் முகத்தைப் பார்த்தது! வழக்கம்போல் குதூகலம்! 
..."கதையோ,...விஷயமோ,...கேள்வியோ....சொல்லலாம்....கேட்கலாம்!....முதலில் கையை உயர்த்த வேண்டும்!''
பாபு கையை உயர்த்தினான். "கிளியக்கா!....நீ எங்க பள்ளிக்கூடத்துக்கு வர முடியுமா?''
"பள்ளிக்கூடமா?...'' -- அதற்குத் தெரியும்!...ஆனால் கேட்டது. 
சிவகாமி எழுந்தாள். "எங்களைப் போல பிள்ளைகள் படிக்கிற இடம்....சத்தம் போடற இடம்!...போகும்போது வருத்தமா போவோம்.....வரும்போது துள்ளிக்கிட்டு வருவோம்!''
"நான் ஏன் அங்கே வரணும்?....''
"நாங்க அங்கே எப்படி இருக்கோம்னு வந்து பாரேன்!...''
"உங்களைத்தான் இங்கேயே பார்க்கிறேனே!''
"அக்கா, நீ அவசியம் வரணும்...'' குரல்கள் பெருகின. 
"நான் வர்றது உங்களுக்கு மகிழ்ச்சியா இருக்கலாம்...ஆனா எல்லாரோட கவனமும் என் பக்கம் திரும்பும்....கூச்சல் அதிகமாகும்!....அப்புறம் பள்ளிக்கூடம் எப்படி நடக்கும்?''
ஞானம் எதார்த்தத்தைச் சொன்னது...அமைதி அடைந்தார்கள். 
"உனக்குப் பள்ளிக்கூடம் பிடிக்காதா?''
"என் பள்ளிக்கூடம் மரங்களும் காடும்தான்!....என்னோட தோழர்களோட பறப்பேன்!...கீச்..கீச்...சத்தம்...அதிலே பல பொருள்...அவங்க புரிஞ்சுக்குவாங்க....நிழல்லே உட்காருவேன்....பழங்களைத் தின்பேன்...''
அதைக் கேட்கவே பிள்ளைகளுக்கு ஆனந்தமாக இருந்தது. 
நமக்கும் கிளியைப்போல சிறகு இருந்தால்.....பறக்கத் தெரிந்தால்...என்று கனவில் ஆழ்ந்தார்கள். 
"எங்களுக்குப் பட்டாம்பூச்சி...சிட்டுக்குருவி....அணில்...முயல்....நாய்க்குட்டி....பூனை இதெல்லாம் பிடிக்கும்!''
"என்ன பிடிக்கலே?....''
"புத்தகம்....முக்கியமாக பாடப்புத்தகம்....வீட்டுப் பயிற்சி நோட்டு....கனமா இருக்கிற புத்தகப்பை....இதெல்லாம் பிடிக்கலே...''
"நீங்க அடுத்த பிறவியிலே என்னைப் போல ஒரு பறவையாய்ப் பிறக்கலாம்!....ஆனந்தமா இருக்கலாம்!...''
"உனக்குக் கவலையே கிடையாதா?''
"கவலையா?... எனக்குத் தெரியாதே....என்ன அது?...''
"உன் கவலை உனக்கு!....'' சிரித்தாள் சிவகாமி. 
"தங்கமணி ஐயா....சின்ன பிள்ளைங்களைப் பற்றி எனக்குச் சொல்லியிருக்கார்...''
"என்ன சொன்னார்....''
"உங்களுக்காக உங்க அம்மா, அப்பா ரொமபக் கஷ்டப் படுவாங்களாம்!...''
"ஆமாம்....நல்லாப் படிக்கணும்....நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கணும்...வகுப்பில் முதலாவதா வரணும்....அப்புறம் பள்ளியிலே முதலாவதா வரணும்....ஒருத்தர்தானே முதலாவதா வரமுடியும்?...'' 
"மதிப்பெண்ணா?...முதலாவதா?....என்ன அது?...''
"உனக்குத் தனியா வகுப்புதான் எடுக்கணும்''
"வகுப்பா?''
விவரம் சொன்னான். ஞானம் பொறுமையாகத் தெரிந்து கொண்டது.
"அடுத்த முறை வரும்போது ஒரு கதையோட வரணும்...''
எல்லோரும் கரவொலி எழுப்பினாரகள்!...துள்ளினார்கள். பிறகு யார் சொல்வது என்று யோசித்தனர்.

கிளி வரும்....
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com