கருவூலம்: அந்தமான் நிகோபார் தீவுகள்

அந்தமான் தலைநகரான போர்ட்பிளேயரில் பல அருங்காட்சியங்கள் அமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு பலவிதமாக அற்புதமான தகவல்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.
கருவூலம்: அந்தமான் நிகோபார் தீவுகள்

சென்ற இதழ் தொடர்ச்சி...


அந்தமான் அருங்காட்சியகங்கள்

அந்தமான் தலைநகரான போர்ட்பிளேயரில் பல அருங்காட்சியங்கள் அமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு பலவிதமாக அற்புதமான தகவல்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் மிகவும் சுத்தமாகவும் சிறப்பாகவும் பராமரிக்கப்படுகின்றன. அவை...

மானிடவியல் அருங்காட்சியகம்: (Anthropological Museum)

போர்ட்பிளேயர் நகரத்தின் சார்பில் ஒரு அருங்காட்சியகம் நடத்தப்படுகிறது. இந்த அருங்காட்சியகத்தில் பழங்குடியினர் சார்ந்த பல்வேறு புகைப்படங்கள், பழங்குடியினர் வேட்டையாட அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், பழங்குடியினரின் குடியிருப்பு மாதிரிகள் என பல பொருட்களைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க கண்டிப்பாக அனுமதியில்லை. திங்கட்கிழமை விடுமுறை நாளாகும். 

சமுத்ரிகா கடல் அருங்காட்சியகம்: (Samudrika Naval Marine Museum))

போர்ட்பிளேயரில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்திய கடற்படையினரால் இந்த அருங்காட்சியகம் நடத்தப்படுகிறது. இந்த அருங்காட்சியகம் ஐந்து அறைகளை உள்ளடக்கியது. முதல் அறையில் அந்தமானில் உள்ள எரிமலைகள் பற்றிய தகவல்கள், அந்தமானில் வாழும் பழங்குடிகளைப் பற்றிய தகவல்கள், அந்தமானில் காணக்கிடைக்கும் பல்வேறு மரங்கள் பற்றிய தகவல்கள் மற்றும் அதன் மாதிரி வடிவங்கள் என அந்தமானைப் பற்றிய பல விஷயங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இரண்டாவது அறையில் கடல்வாழ் மீன்கள் மற்றும் பிற அரிய உயிரினங்கள் வைக்கப்பட்டுள்ளன. மூன்றாவது அறையில் பவழப்பாறைகள் பற்றிய பல்வேறு தகவல்கள் மற்றும் பல்வேறு அரிய பவழப்பாறைகளின் சேகரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நான்காவது அறையில் கடல் பகுதிகளில் காணக்கிடைக்கும் பல்வேறு கிளிஞ்சல்கள் சங்குகள் போன்ற அரிய வகையான பொருட்கள் மற்றும் அதைப் பற்றி விரிவாக பல தகவல்கள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஐந்தாவது அறை பழங்குடிகள் அறையாகும். அந்தமானில் வாழும் பழங்குடியினத்தவரின் வாழ்க்கை முறைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த அறையில் பலவகையான பட்டாம்பூச்சிகள் மற்றும் பாம்புகளின் மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

மீன் அருங்காட்சியகம் (Fisheries Museum)

இராஜீவ்காந்தி வாட்டர் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளெக்ஸ் (Rajivgandhi Water Sports Complex) அருகில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் இந்திய பசிபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடா கடற்பகுதிகளில் காணப்படும் பல்வேறு கடல்வாழ் உயிரினங்களின் மாதிரிகள் இந்த அருங்காட்சிகயத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இது சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் காண வேண்டிய ஒரு அருங்காட்சியம். திங்கள்கிழமை அருங்காட்சியகத்திற்கு விடுமுறை நாளாகும். மேலும் இரண்டாவது சனிக்கிழமைகளில் இந்த அருங்காட்சியகம் இயங்குவதில்லை. மற்ற நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 4.45 மணி வரையிலும் இந்த அருங்காட்சியகம் சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்களின் பார்வைக்கு திறக்கப்படுகிறது. 

சத்தம் சா மில் (Chatham Saw Mill)

ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் மிகப்பழமையான "மர அறுவை நிலையம்' போர்ட்பிளேயருக்கு அருகில் அமைந்திருக்கும் சிறிய தீவான சத்தம் தீவில் அமைந்துள்ளது. சத்தம் சா மில் 1883 ஆம் ஆண்டில் தனது பணியினைத் துவக்கியது. அந்தமான் தீவுகளில் பல்வேறு கட்டுமானப் பணிகளில் பயன்படுத்துவதற்காக தீவுகளில் கிடைக்கும் பல்வேறு மரங்களை இங்கு கொண்டு வந்து பல்வேறு நீளங்களில் கட்டைகள் பலகைகள் என அறுக்கப்பட்டன. 

இரண்டாவது உலகப் போர் நடைபெற்ற காலகட்டத்தில் 10 மார்ச் 1942 அன்று ஜப்பான் படையினர் இந்த சா மில் மீது சக்தி வாய்ந்த குண்டுகளை தொடர்ச்சியாக பிரயோகித்தனர். இதனால் இந்த சா மில் பெரும் சேதத்தை சந்தித்தது. பின்னர் சரிசெய்யப்பட்டு 1946 ல் மீண்டும் தனது இயக்கத்தைத் தொடர்ந்தது. 1942 ஆம் ஆண்டில் ஜப்பான் நாட்டு படையினர் போட்ட ஒரு குண்டு விழுந்தது. குண்டு விழுந்த காரணத்தினால் உருவான பள்ளம் மூடப்படாமல் காட்சிக்காக அப்படியே வைக்கப்பட்டுள்ளது. இந்த சா மில்லை காலை எட்டு மணி முதல் மதியம் இரண்டரை மணி வரை பார்வையிடலாம். திங்கட்கிழமை விடுமுறை.

சயின்ஸ் சென்டர் (Science Centre) 

அந்தமான் தலைநகரான போர்ட்பிளேயரில் 2003 ஆம் ஆண்டில் இந்த சென்டர் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஆர்வமூட்டும் பல அறிவியல் மாதிரிகள் மற்றும் சோதனைகள் இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கடலைப் பற்றிய பல அறிவியல் பூர்வமான தகவல்களை இங்கே நாம் அறியலாம். காலை 10.00 மணி முதல் மாலை 05.30 மணி வரை திறந்திருக்கும். திங்கட்கிழமையும் வார விடுமுறை நாளாகும். 

காந்தி பூங்கா (Gandhi Park)

போர்ட்பிளேயரில் உள்ள இந்த பூங்காவின் மையப்பகுதியில் மகாத்மா காந்திக்கு பெரிய சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சிறுவர் சிறுமியர் விளையாடி மகிழ உஞ்சல் போன்ற விளையாட்டு சாதனங்கள் பல ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன. ஜப்பான் நாட்டு படையினர் இரண்டாம் உலகப்போரின் போது அமைத்த பங்கர்கள் மற்றும் ஜப்பானியக் கோயில் போன்றவை வரலாற்றுச் சின்னங்களாக இந்த பூங்காவில் காணப்படுகின்றன. இங்குள்ள ஏரியில் படகு சவாரி வசதி உள்ளது.

அந்தமான் ஆலயங்கள்

போர்ட்பிளேயரில் அமைந்துள்ள ஸ்ரீ வெற்றிமலை முருகன் ஆலயம் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. தெற்கு அந்தமானில் அமைந்த ஜிர்கட்டாங் செக்போஸ்ட் அருகில் ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு ஒரு சிறிய குன்றில் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. வருடத்திற்கு ஒரு முறை இங்கு தமிழர்கள் ஒன்று கூடி பெரிய அளவில் அம்மனுக்கு விழா எடுக்கிறார்கள். போர்ட்பிளேயரில் ஸ்ரீவீர அனுமான் ஆலயம் அமைந்துள்ளது. போர்ட்பிளேயர் விமான நிலையத்திற்கு அருகில் மஹாகாளி கோயில் அமைந்துள்ளது. இதுபோல அந்தமானின் தலைநகரான போர்ட்பிளேயரில் பல கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்தமான் மாநிலத்தின் பறவை, விலங்கு, மரம், பூ

பறவை

வுட் பீஜியன் (Wood Pigeon) அதாவது மரப்புறா அந்தமானின் மாநிலப் பறவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விலங்கு

டகாங் (Dugong) எனும் கடல்பசு ஒரு கடல்வாழ் பாலூட்டியாகும். இது கடலில் காணப்படும் புற்களைத் தின்று வாழும். இந்த பாலூட்டி மூன்று மீட்டர் நீளமும் 400 கிலோ எடையும் கொண்ட அரியவகை பாலூட்டியாகும். மிகவும் அரிய வகையான இந்த கடல் பாலூட்டி அந்தமானின் மாநில விலங்காகும். 

மரம்

அந்தமானின் மாநில மரம் அந்தமான் படாக் (Andaman Padauk) வகை மரமாகும். 120 அடி உயரம் வளரும் இத்தகைய மரங்கள் அந்தமான் தீவுகளில் மட்டுமே காணப்படுகின்றன. 

பூ

அந்தமான் தீவுகளின் மாநிலப்பூ பின்மா பூ (Pyinma Flower) ஆகும். இந்த பூவானது செப்டம்பர் 2014 ல் அந்தமான் தீவுகளின் மாநில மலராக அறிவிக்கப்பட்டது. பெமா மரம் (Pema Tree) என்று அழைக்கப்படும் இந்த மரம் அந்தமான் நிகோபார் தீவுகளில் அதிக அளவில் பரவலாகக் காணப்படுகிறது. 

அந்தமான் மரங்கள்

அந்தமானில் தென்னையும் பாக்கும் அந்தமானுக்கு செல்வ வளத்தைச் சேர்க்கின்றன. இது தவிர தேக்கு மற்றும் ஓக் மரங்கள் மிக அதிக அளவில் காடுகளில் காணப்படுகின்றன. ஓங்கி உயர்ந்து விண்ணைத் தொடுமளவிற்கு வளர்ந்து காணப்படும் மரங்கள் இங்கே சர்வசாதாரணம். அண்ணாந்து பார்த்தால் நமது கழுத்து நிச்சயம் வலிக்கும். அந்த அளவிற்கு உயரமான மரங்கள் இங்கு காடுகளில் காணப்படுகின்றன. இதைத் தவிர வெள்ளை சுக்லாம் (White Chuglam), லால் போம்வே (Lal Bomwe), சூய் (Chooi), மார்பிள் வுட் (Marble wood), சிவப்பு தூப் (Red Dhup), டிடு (Didu), கறுப்பு சுக்லம் (Block Chuglam), திங்கம் (Thngam), லால்ச் (Laluch), துங்பியிங் (Tungpeing), யென்கி (Yengi), தேக்கு (Teak), லம்பாபட்டி (Lambapatti), கோகோ (Koko), பியின்மா (Pyinma), படாக் (Padauk), குர்ஜன் (Gurjan), சில்வர்கிரே (Silver grey), பகோடா (Bakota), மாவா (Mohwa), லால்சினி (Lalchini), உங்லியாம் (Uingliaam) என பல்வேறு வகையான மரங்கள் அந்தமான் தீவுகளில் காணப்படுகின்றன. 

அந்தமான் பவளப்பாறைகள்

அந்தமான், ஹேவ்லாக் தீவில் எலிபெண்டா கடற்கரை மற்றும் நார்த்பே தீவில் அமைந்துள்ள கடற்கரை பகுதிகளில் பவளப்பாறைகள் அதிக அளவில் காணப்படுகின்றன. இத்தீவுகளில் நீலக்கோரல் (Blue Coral), ப்ரைன் கோரல் (Brain Coral), காளான் கோரல் (Mushroom Coralப்), சிவப்புக் கோரல் (Red Coral), மான்கொம்பு கோரல் (Staghorn Coral), பயர் கோரல் (Fire Coral), ஹெல்மெட் கோரல் (Helmet Coral), மார்பிள் கோரல் (Marble Coral), பிளேட் கோரல் (Plate Coral), டேபிள் கோரல் (Table Coral), சப்மேசிவ் கோரல் (Submassive Coral) போல்டர் கோரல் (Bolder Coral) என பல பவளப்பாறைகள் நிறைந்துள்ளன. இதுதவிர இன்னும் ஏராளமான வகையான பவளப்பாறைகள் அந்தமான் நிகோபார் தீவுகளில் பரவலாகக் காணப்படுகின்றன.

அந்தமான் சங்குகள் சிப்பிகள்

அந்தமான் தீவுகளில் அரிய சங்கு வகைகளும் காணப்படுகின்றன. இங்கு டர்போ ஷெல் (Turbo Shell), ட்ரோச்சஸ் ஷெல் (Trochus Shell), நெளடிலஸ் ஷெல் (Trochus Shell), கோனஸ் ஷெல் (Conus Shell), சீஅர்ச்சின்ஸ் (Sea Urchins), குயில் ஷெல் (Queen Shell), காம் ஷெல் (Calm Shell), ஹார்ன் ஷெல் (Horn Shell), ட்ரைடான் ஷெல் (Triton Shell) என பல்வேறு வகையான சங்குகள் சிப்பிகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் நிறைந்துள்ளன. இதைத்தவிர இன்னும் ஏராளமான பல்வேறு அதிசய சங்குகளும் சிப்பிகளும் காணப்படுகின்றன.

அந்தமான் தீவுகளில் காணப்படும் அரிய உயிரினங்கள்

அந்தமான் தீவுகளில் லெதர் பேக் டர்டில் (Leather Back Turtle) எனும் ஆமை, கிரீன் சீ டர்டில் (Green Sea Turtle) ரெடிகுலேட் பைதான் (Reticulate Python) எனும் பெரிய வகை மலைப்பாம்பு, ஆலிவ் ரிட்லே ஆமை (Olive Ridley Turtle) சால்ட் வாட்டர் க்ரோக்கடைல் (Salt Water Crocodile) வாட்டர் மானிட்டர் லிசார்ட் (Water Monitor Lizard) போன்ற ஊர்வன இனங்கள் பரவலாக காணப்படுகின்றன. மெல்ல மெல்ல அழிந்து வரும் இத்தகைய இனங்கள் அந்தமான் நிகோபார் தீவுகளில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பல் வேறு விதமான பறவைகளும், உயிரினங்களும் நிறைந்த தீவுகள் இவை! 

சுற்றுலாப்பயணிகளுக்கு இந்திய தியாக சரித்திரச் சுவடுகளும், கண்களுக்கு இனிய இயற்கைக் காட்சிகளும், கடல்சார் உயிரினங்களின் அரிய தகவல்களும் நிறைந்த இடம்அந்தமான் நிகோபார் தீவுகள் என்பதில் ஐயமில்லை! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com